Sunday, February 28, 2010

பென்னாகரத்தில் 'தலை'க்கு ரூ.3,000 தருகிறார்கள்- பாமக புகார்

தர்மபுரி: பென்னாகரம் இடைத்தேர்தலை ஒட்டி, தொகுதி முழுவதும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலைக்கு ரூ.3 ஆயிரம் பணம், வேட்டி-சேலை, ஜாக்கெட், துண்டு ஆகியவை பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என பாமக புகார் கூறியுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு இன்னும் வேட்புமனு தாக்கலே நடைபெறாத நிலையில் வீடு, வீடாக சென்று பணம் கொடுத்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்களை கொடுக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்த தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்தியா முழுவதும் "பென்னாகரம் பார்முலா'' உருவாகும். இது மற்ற தேர்தல்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

பென்னாகரம் தொகுதியில் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த கூடுதல் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்.

டெல்லியில் ஒரு கட்சி வெங்காய விலையை காரணம் காட்டி தேர்தலில் வெற்றி பெற்றது. அதுபோன்று பென்னாகரம் தொகுதியில் குடிநீர் பிரச்னையால் பாமக வெற்றி பெறும்' என்றார்.

இதற்கிடையே, பென்னாகரம் தொகுதி பாமக தேர்தல் பணிக்குழு தலைவர் வேல்முருகன் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு வேட்டி-சேலை, ஜாக்கெட், துண்டு மற்றும் ஒரு குடும்பத்துக்கு, ஒரு ஆளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் தொகுதி முழுவதும் வழங்கி வருகின்றனர்.

ஒரே இரவில் (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக 32 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டுவாடா செய்துள்ளனர். இதுபற்றி புகார் செய்தவர்களை வீச்சரிவாள், இரும்பு பைப், உருட்டுக்கட்டடை போன்ற படுபயங்கரமான ஆயுதங்களால் தாக்கினர்.

தலைமை தேர்தல் அதிகாரி, மேற்கண்ட சம்பவங்களுக்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்று முதல் எனக்கு 1 இன்ஸ்பெக்டர், 10க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு அளித்து தாங்கள் உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 24, 2010

தென் மாவட்டங்களின் கோரிக்கைகள் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிப்பு- ராமதாஸ்

சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட் டை பொதுவாக வரவேற்றுள்ளனர் தமிழக அரசியல் கட்சியினர். இருப்பினும், தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை மமதா பானர்ஜி புறக்கணித்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு - ராமதாஸ்

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும் தமிழகத்தை பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ரயில்வே துறையில் பா.ம.க.வை சேர்ந்த அமைச்சர் இப்போது பொறுப்பில் இல்லை என்பது பளிச்சென்று தெரிகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகளின் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. அதை குறைப்பதற்கு புதிய ரயில்கள் விடப்பட வேண்டும் என்றும், நெல்லை-சென்னைக்கு இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் விடப்பட வேண்டும் என்றும் தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

புறநகர் பயணிகளுக்கான ரயில் சேவையிலும், கொல்கத்தா, மும்பை பெருநகரங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள முக்கியத்துவம் சென்னைக்கு இல்லை. சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும், அங்கு புதிய உற்பத்தி பிரிவு தொடங்கப்படும், ரயில்வே துறை வேலைக்கான தேர்வினை அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பென்னாகரத்தில் வெற்றியை உறுதி செய்ய தமிழக பாமகவினர் திரண்டு வர வேண்டும்- ராமதாஸ்

சென்னை: பென்னாகரத்தில் பாமகவின் வெற்றியை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் திரண்டு வந்து பென்னாகரத்தில் பணியாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து பாமகவினருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பா.ம.க., மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைருக்கும் தனது கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராமதாஸ்.

அதில், பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க., வெற்றிபெறும் என எதிரணியினரும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலை உருவாகியுள்ளது. நாம் வெற்றி பெற கட்சியில் உள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் தேவைப்படுகிறது.

எனவே கட்சியில், வன்னியர் சங்கத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பென்னாகரம் வர வேண்டும் என்று கோரியுள்ளார் ராமதாஸ்.
குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் பென்னாகரம்..

இடைத் தேர்தல் வந்தும் கூட பென்னாகரத்திற்கு விடிவு காலம் பிறக்கவில்லை. அங்கு குடிநீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.

ஒரு மாதமாக ஆளுங்கட்சியினர், அரசின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றியும், பல இடங்களில் அரசு சார்பில் போர்வெல் போட்டும், தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது.

இதனால், எதிர்க்கட்சியினர், குடிநீர் பிரச்னை குறித்து பெரிதாக பிரசாரம் செய்கின்றனர். திமுகவினரோ, இதோ வந்து விட்டது ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். வந்தவுடன் குடிநீர்ப் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று கூறி பிரசாரம் செய்கின்றனர்.

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அங்கு தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரும் கூட அவதிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

பிரசாரத்திற்கு வந்த இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்டு பொதுமக்களை அணுகினால் பொசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில், குடிநீர் லாரிகளை வரவழைத்து தொண்டர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனவாம் அரசியல் கட்சிகள்.

குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும், ஒகனேக்கலுக்கும் போய் குளித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Monday, February 22, 2010

பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும். -ராமதாஸ்.

பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியில் உள்ள பெரியோர்களை பார்க்கும் போது தற்போது பெய்கிற கொஞ்சம் நஞ்சம் மழை கூட இவர்களுக்கு தான் பெய்கிறது என்று தோன்றுகிறது என்று கூறினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே திமுகவும், பாமகவும் முடித்து விட்டன. அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேமுதிக போட்டியிடுமா என்று தெரியவில்லை.

இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் தீவிரப் பிரசாரத்தில் குதித்து விட்டார். பென்னாகரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். பரப்பட்டி, சந்தாரப்பட்டி, ராமர்கூடல், கெட்டுஅள்ளி, பங்குநத்தம், ராஜாகொல்லஅள்ளி, பண்டஅள்ளி, நல்லானூர், குள்ளனூர், ராமனூர், வேலம்பட்டி, பிளப்பநாயக்கனஅள்ளி, குஞ்சுக்கொட்டாய், திகிலோடு, ஆலமரத்துப்பட்டி, பூச்செட்டிஅள்ளி, தளவாய்அள்ளி, நத்தஅள்ளி உள்பட பல்வேறு கிராமங்களில் பாமக வேட்பாளர் தமிழ்குமரனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின்போது 120 வயதான பாட்டியை அவரிடம் அறிமுகப்படுத்தினர். அவரிடம் மாம்பழச் சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார் ராமதாஸ்.

பின்னர் சந்தாரப்பட்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில்,

பென்னாகரம் தொகுதியில் உள்ள மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், தொழில்வளம் இல்லாமலும் சமுதாயத்தில் பின் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நன்மை செய்ய பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும்.

இந்த பகுதியில் உள்ள பெரியோர்களை பார்க்கும் போது தற்போது பெய்கிற கொஞ்சம் நஞ்சம் மழை கூட இவர்களுக்கு தான் பெய்கிறது. இதுபோன்ற நல்லவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற என்றும் நாம் பாடுபடுவோம் என்றார்.

பென்னாகரம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி-பாமக-அதிமுக புகார்

தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நீடிப்பதாக அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.

இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா கூட்டினார்.

இக்கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதிமுக பிரதிநிதியான தர்மபுரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயன் கூறுகையில், பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் பட்டியலில் 42,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டும்,​​ குறைவான வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.​ ​

மதிமுக பிரதிநிதியான அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ஒகேனக்கல் செல்லும் பாதையில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும்.​ தேர்தலுக்கு முன் 10 நாள்கள் ஒகேனக்கலுக்கு செல்ல யாரையும் அனுமதிக்கக் கூடாது.​ இதனால் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது,​​ சட்ட ஒழுங்கு பிரச்னைகள் தடுக்கப்படும் என்றார்.

பாமக பிரதிநிதி பண்ருட்டி எம்.எல்.ஏ.​ வேல்முருகன் ​கூறுகையில், பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அனைத்து கட்சிகளின் மத்தியில் சோதனை செய்தும்,​​ நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த பின்னரே தேர்தலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ள 23,000 பேரை சேர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.​ ​

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி​யான​ அரூர் எம்எல்ஏ​​ டில்லிபாபு கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறி பென்னாகரம் தொகுதியில் புதிய பஸ்கள்,​​ சாலை வசதிகள் உள்ளிட்ட ​நலத் திட்டங்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர்.​ வாக்காளர்கள் சேர்க்கை ரகசியமாக முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

திமுக பரிதிநிதியான முன்னாள் அமைச்சர் செல்வகணபதி,
வாக்கா​ளர்​கள் பட்டியல் வெளியீட்டில் எவ்வித சந்தேகத்திற்கும்,​​ புகாருக்கும் இடமில்லை.​ வாக்காளர்கள் சேர்ப்பில் விசாரணை முழுமையாக நடைபெற்றுள்ளது என்றார்.

Sunday, February 21, 2010

முல்லைப் பெரியாறு: திமுக நிலைக்கு ராமதாஸ் ஆதரவு

சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் யாரும் இடம்பெறத் தேவையில்லை என திமுக எடுத்துள்ள நிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு வழக்கின் தன்மையை திசை திருப்பும் வகையில், அணையின் பாதுகாப்புத் தன்மையை மீண்டும் ஆராய வேண்டும் என்றும், அதற்காக ஐவர் குழுவை அமைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

இந்தப் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் "ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறத் தேவையில்லை'' என்று திமுக பொதுக்குழுவில் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

இதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு வழி என்ற வகையில் அதனை பாமக ஏற்றுக் கொள்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனை மட்டுமல்ல, பல்வேறு ஆற்று நீர் பிரச்சனைகளில் தமிழகத்துக்கு கேரளம் உதவ மறுத்து வருகிறது. குமரி மாவட்டத்துக்குப் பயன்தரும் நெய்யாற்று தண்ணீரில் புதிதாகப் பிரச்சனை கிளப்புகிறது.

அரிசி, காய்கறிகள், மின்சாரம், மணல் போன்ற ஜீவாதாரப் பிரச்சனைகளில் தமிழகத்தை நம்பியுள்ள கேரளம், ஆற்று நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தக் கடமையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

சென்னையில் பாமக வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை யில் இன்று காலை வழக்கறிஞர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

சென்னை அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வன்னிய சம்பத். 49 வயதான இவர் பாமகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார். எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றி வந்தார்.

இன்று காலை தனது மகன் சஞ்சீவை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அயனாவரம் சவுத் ஈஸ்ட் காலனி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது அவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளியது.

படுகாயமடைந்து விழுந்த சம்பத்தை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில், பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, February 19, 2010

2 வாரங்களுக்கு கேரளாவுக்கு எந்தப் பொருளும் போகாமல் நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

உடுமலை: பாம்பாறு, முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் குந்தகம் விளைவித்து வரும் கேரளாவுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு 2 வாரங்களுக்கு எந்தப் பொருளையும் அனுப்பாமல் தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் இன்று உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு மாநில எல்லை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால், அப்போது கேரளாவுக்கு சென்ற தமிழக பகுதிகள் மீட்கப்படும். அப்போது நீர் பங்கீட்டு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கேரள அரசை தண்ணீருக்கு மட்டும் தான் தமிழகம் நம்புகிறது. ஆனால் கேரளா பால், அரிசி என பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு தமிழகத்தை நம்பி இருக்கிறது. எனவே தமிழக மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்பதை ஆதாயமாக எடுத்துக் கொண்டு பொறுமையை சோதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், முல்லைப் பெரியாறு, பாம்பாறு என தமிழகத்தின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது கேரளா.

எனவே கேரளாவுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், 2 வாரத்திற்கு தமிழகத்திலிருந்து எந்தப் பொருளும் செல்லாமல் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அமைச்சர் கபில் சிபல், பிடி கத்திரிக்காய்க்குத் தடை விதிக்க மறுக்கும் ஜெய்ராம் ரமேஷ் ஆகிய இருவரையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

Wednesday, February 10, 2010

நடுநிலையற்று செயல்படும் நவீன் சாவ்லாவை நீடிக்க விடக் கூடாது - ராமதாஸ்

சென்னை: நடுநிலையற்று செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அப்பதவியில் நீடிக்க விடக் கூடாது. அவரை நீக்க வேண்டும். அவர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பென்னாகரம் இடைத்தேர்தல் குறித்து நான் வெளியிட்ட சில குற்றச்சாட்டுகளை முதல்வர் அப்படியே ஏற்றுக்கொண்டு வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய போக்கை முதல்வரும் கூறியிருக்கிறார்.

தலைமை தேர்தல் ஆணையர் நடுநிலையாளராக இல்லை. ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் இருக்கிறார் என நாங்கள் மட்டும் சொல்லவில்லை.

3 ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த கோபால்சாமி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் நவீன் சாவ்லா நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் ஒரு நடுநிலையான அமைப்பு. அதன் உறுப்பினர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும். ஆனால் நவீன் சாவ்லா ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார். இந்த நிலையில் அவர் தேர்தல் ஆணைய அதிகாரியாக நீடிக்கக்கூடாது என புகாரில் தெரிவித்து உள்ளார். இதைவிட வேறு சான்று தேவையில்லை.

நவீன் சாவ்லாவின் நடுநிலையை சந்தேகிக்கும் கடிதம் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

2009-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டும் அவரது பெயரில் எழுந்துள்ள நிலையில் அவரை விசாரிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

விலைவாசி உயர்வு...

அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. உற்பத்தி செய்யும் விவசாயிக்கு விலை உயர்வு இல்லை. இடையில் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடைகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் கலந்துகொண்ட முதல்-அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம், எது காரணம் என்று கண்டறியாமல் மாநாடு கூடி கலைந்து இருக்கிறது.

புதிய பொருளாதார கொள்கையின் நடைமுறை காரணமாக தமிழகத்திலும், நாட்டின் இதர பகுதிகளிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஏற்றமும், முடக்கமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தனியார் பெரிய நிறுவனங்கள் நேரடியாக விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்தும், பிறகு மதிப்பு கூட்டி விற்பனை செய்வதும், அதுவும் சில்லரை விற்பனை மையங்கள் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் உணவு தானிய சந்தையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளின் குறைபாடுகளே காரணம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்தவில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் போதிய முதலீடு செய்யப்படவில்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் செயல்பாடுகளின் பலன்கள் அதன் பங்குதாரர்களான விவசாயிகளை சென்றடையவில்லை.

இத்தகைய தவறான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளின் காரணமாகத்தான் உணவு, தானியங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரால் வேளாண்நிலங்கள் கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பெரும் தொழில் அதிபர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

ஒரு புறத்தில் நிலமற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு புறத்தில் விவசாய நிலங்களை பறித்து புதிதாக நிலமற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது அரசு.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எத்தனை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நிலங்களை பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோது வாக்குறுதி அளித்தபடி அந்த தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனவா? வேலைவாய்ப்பு குறித்து அவர்கள் அளித்த உத்தரவாதம் நிறைவேறி உள்ளதா? எத்தனை 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அதில் நமது மாநில இளைஞர்கள் எத்தனை பேர் பயனடைந்து உள்ளனர். இதன் விவரங்கள் அடங்கிய வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என நான் சொல்லி வந்ததை மேதாபட்கரும் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு சந்தேகங்களை போக்க அரசு முன்வர வேண்டும்.

பிடி கத்திரி...

காடு வளர்ப்பு, புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவைகளில் தீவிரம் காட்ட வேண்டிய மத்திய அமைச்சர், பி.டி.கத்தரிக்காய் விஷயத்தில் மட்டும் அக்கறை எடுத்துக்கொண்டு பி.டி.கத்தரிக்காய் வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அரசு அனுமதிக்காது என அறிவித்துள்ளார்.

இந்த பி.டி.கத்தரிக்காய் குறித்து ஏற்கனவே பல போராட்டங்கள், கருத்தரங்கங்களை நான் அறிவித்திருந்தேன். இவ்வாறு அரசு அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். தற்போது அனுமதியில்லை என்பதை எப்போதும் தேவையில்லை என வலியுறுத்துகிறேன். ஏனெனில் 2,500 கத்தரிக்காய் வகைகள் நம் நாட்டில் உள்ளன என்றார் ராமதாஸ்.

Tuesday, February 9, 2010

நாடு முழுவதும் சிகரெட் விற்பனை வீழ்ச்சி: மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்தது பலன்

இந்தியாவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை, வீழ்ச்சி கண்டுள்ளது. ஓராண்டில் இப்பொருட்கள் 8 சதவீத விற்பனை குறைந்திருக்கிறது. புற்றுநோயால் தாக்கப்பட்ட இந்திய ஆண்களில் 56.4 சதவீதமும், பெண்களில் 44.9 சதவீதம் பேரும் புகையிலையால் பாதிக்கப் பட்டவர்கள்.

உலகிலேயே அதிகமாக வாய் புற்றுநோயால் பாதிக் கப்பட்டவர்கள், இந்தியாவில் தான் இருக்கின்றனர்.இந்த புகையிலைப் பொருட் களை உட்கொள்வதற்காக, இந்தியாவில் உள்ள தனி மனிதர்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஆண்டுதோறும் 44 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவழிக்கின்றனர்.தேசிய குடும்ப நல ஆய்வு மையத்தின் சர்வே படி, இந்தியாவில் உள்ள ஆண்களில் 46.5 சதவீதமும், பெண்களில் 13.8 சதவீதமும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள். இவர்களில் 30 சதவீதம் ஆண்களும், 2.5 சதவீதம் பெண்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். பொது இடங்களில் புகை பிடிப் பதை வரவேற்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, 94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 97 சதவீதம் பேர், சிகரெட் பாக்கெட்களில், புகைப்பதால் விளையும் ஆபத்துகளை விளக்கும் படங்களை பிரசுரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

இதனால் துணிந்த மத்திய அரசு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்த போது, பொது இடங்களில் புகைப்பதைத் தடுக்கும் சட்டத்தையும், புகையிலைப் பொருட்களின் முகப்பு அட்டைகளில், 40 சதவீதம் அளவுக்கு, அவற்றால் ஏற்படும் பாதிப்புகளின் படத்தை அச்சிட வேண்டும் என உத்தரவிட்டது.இதற்கான பலனும் கிடைத்துள்ளது. இந்தியாவில் சிகரெட் விற்பனை, தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல், மத்திய அரசின் புகையில்லா தேசம் சட்டம் அமலுக்கு வந்தது. 2004ம் ஆண்டு, இதே போல அறிவிக்கப்பட்ட சட்டத்தை விட, கடுமையாக இந்த முறை அமலாக்கம் இருந்தது.இதன் மூலம், பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது.மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, கை மேல் பலன் கிடைத்தது.

பார்களில், உணவு விடுதிகளில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது. வெளியே சென்று சிகரெட் பிடிக்க வேண்டியிருந்ததால், தொடர்ந்து புகைப்பவர்கள், எண்ணிக்கையை குறைத்தனர். சிறுவர்களுக்கு சிகரெட் விற்பது குறைந்தது.கடந்த 2007ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2008ம் ஆண்டு, இந்தியாவின் ஒட்டு மொத்த சிகரெட் விற்பனை வளர்ச்சி, 8 சதவீதம் குறைந்துள்ளது.எக்சைஸ் வரி அதிகரிப்பால், "பில்டர்' இல்லாத சிகரெட்களின் உற்பத்தியை ஐ.டி.சி., நிறுவனம் நிறுத்தியுள்ளது. "விற்பனை குறைந்தாலும், விலை அதிகரிப்பு மற்றும் அதிக விலை சிகரெட்களின் விற்பனையால், பெரிய அளவில் நிதியிழப்பு ஏற்படவில்லை' என்கின்றனர் ஐ.டி.சி., அதிகாரிகள்.தேசிய அளவில், ஏற்கனவே உள்ள நடைமுறைகளும் விதிகளும் கடுமையாகச் செய்து அமலாக்கம் தொடர்ந்தால், சிகரெட் விற்பனையை பெருமளவில் தொடர்ந்து குறைக்க முடியும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Thursday, February 4, 2010

பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தான் ஜெயிக்கும் -ராமதாஸ்

சென்னை: அதிமுகவுக்கு ஆதரவாகவும் ஜெயலலிதாவுக்கு மனம் குளிரவும் தான் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக பாமக​ நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பென்னாகரம் இடைத்தேர்தல் முதலில் ஜனவரி மாதத்தில் தள்ளி வைக்கப்பட்டதும், இப்போது பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தள்ளிப்போடப்படும் நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்கிறதா? என்கிற பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி மாதம் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போது, இடையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் குறுக்கிடுவதை சுட்டிக்காட்டி தேர்தலை சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் பாமக முன் வைத்தது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடமும் நேரில் முறையிட்டு மனுவும் அளிக்கப்பட்டது.

ஆனால், பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னர் தான் தேர்தல் தேதியை ஆணையம் முடிவு செய்தது என்று கூறி, பாமகவின் கோரிக்கையை நிராகரித்தார்கள்.

பாமகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அடுத்த நாளே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதே காரணத்தைக்கூறி, பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஜெயலலிதாவின் மனம் குளிரும்படி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.

பிறகு பென்னாகரம் தொகுதியில் திருத்திய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. திருத்திய வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக ஜனவரி மாதம் முதல் தேதியன்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தருமபுரிக்கு நேரில் சென்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர் நரேஷ் குப்தாவை நேரில் சந்தித்து பழைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 25,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன என்பதை கூறி, அது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விடுபட்ட வாக்காளர்களின் பெயர்கள், அவர்களது முகவரி, குடும்ப அட்டைகள், முன்பு பெற்றிருந்த புகைப்பட அடையாள அட்டைகள், முதலான ஆவணங்களை இணைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார்.

பாமக அளித்த இந்த மனு மீது ஜனவரி மாதம் முழுவதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுபட்ட வாக்காளர்களை சேர்த்து திருத்திய பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரியோ, தேர்தல் ஆணையமோ அறிவுறுத்தவில்லை.

எனினும், பென்னாகரம் இடைத்தேர்தலை சந்திப்பது என்ற தீர்க்கமான முடிவுடன் பாமக தேர்தல் களத்தில் இறங்கியது.

அதிமுக ஏன் சோம்பி கிடந்தது?:

வேட்பாளரை அறிவித்து முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றி வந்தது. ஆளும் திமுகவும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தது. ஆனால் அதிமுக மட்டும் பென்னாகரத்தில் ஒரு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்ற எண்ணம் சிறிதும் கூட இல்லாமல், சோம்பிக் கிடந்ததின் ரகசியம் இப்போது தான் புரிகிறது.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக பாமக கொடுத்த மனுமீது ஜனவரி மாதம் முழுவதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம், ஜெயலலிதாவின் ஆதரவு கட்சிகள் மனு கொடுத்த அடுத்த சில மணி நேரத்தில் வாக்காளர் பட்டியலின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து, அதுவரையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்று தடுத்து விட்டது.

இதனால் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.

சோனியா-ஜெவை சந்திக்க வைத்த சாவ்லா:

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் போது, தனி அக்கறையுடன் ஜெயலலிதாவை டெல்லிக்கு அழைத்து, விழா மண்டபம் அருகே உள்ள தனி அறையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அங்கு வரும் வரையில் திட்டமிட்டு உட்கார வைத்து இருவரையும் சந்திக்க வைத்தார் நவீன்சாவ்லா என்று ஏற்கனவே வெளியான செய்தியையும்,

பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு முறை ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்த நடவடிக்கைகளை பார்க்கும் போது, தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக மதித்து செயல்படுகின்ற நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாற்றிலிருந்து தப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த சார்பு நிலை மிகவும் கண்டிக்கத்தக்கது.

பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது. குறிப்பாக நவீன்சாவ்லா துணை போகிறார்.

பென்னாகரத்தில் அதிமுக தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. திடீரென தேர்தல் வைத்தால் அதிமுக 3வது இடத்துக்கு போய்விடும் என்ற பயத்தில் தேர்தலை தள்ளி வைக்க ஜெயலலிதா திட்டம் போடுகிறார்.

தேர்தலை உடனே நடத்த வேண்டும். பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி. அதிமுக டெபாசிட் இழப்பதும் உறுதி என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகதான் ஜெயிக்கும்:

இந் நிலையில் விழுப்புரத்தை அடுத்த வானூரில் பாமக தொண்டரின் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய ராமதாஸ்,
கோடிகள் கொடுத்தாலும் கொள்கை மாறாத தொண்டர்கள் உள்ளதால் பாமக மேலும் வளர்ந்து வருகிறது.​ இதை அழித்துவிட நினைத்தவர்கள் முடியாது என்று திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியவில்லையே என்று தினம் தினம் கவலைப்படுகிறேன்.​ குடியில்லாத வீடு,​​ தெரு,​​ ஊர்,​​ நகரம்,​​ நாடு என்று உருவாக வேண்டும்.​ இது சாத்தியமா என்று கேட்கலாம்.​ முடியும்.​ தமிழக மக்கள் ஆட்சியை பாமகவிடம் தரும்போது முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும்.​ ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் ஒரே மாதத்தில் செய்ய முடியும்.

டாடா,​​ அம்பானியின் குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி,​​ சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ​குறைந்தபட்சம் பிளஸ் 2 வரையிலாவது கட்டாய கல்வி அளிக்க வேண்டும்.

விவசாயிகளின் முதுகெலும்பை 63 ஆண்டுகளில் ஒடித்து விட்டார்கள்,​​ பாமக ஆட்சியில்தான் விவசாயிகள் தலை நிமிர்ந்து வாழ முடியும். மற்ற தொழில்களில் ரூ.10 முதலீடு செய்து ரூ.100 சம்பாதிக்கிறார்கள்,​​ விவசாயிகள் ரூ.100 போட்டு,​​ ரூ.10 தான் சம்பாதிக்கிறார்.​

நாங்கள் ரூ.100 முதலீடு போட்டால்,​​ குறைந்தபட்சம் ரூ.100 லாபம் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவோம்.

குடிக்கக் கூடாது,​​ புகைக்கக் கூடாது என்று சொல்லும் தலைவர்களை காட்டினால் அவர்கள் சொல்வதற்கு தலைவணங்குகிறேன்.​

பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தான் ஜெயிக்கும் என்றார் ராமதாஸ்.

Wednesday, February 3, 2010

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

அசல் படத்தில் அஜீத் சுருட்டுப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதால், அதை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அந்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கடும் சட்டமே கொண்டு வந்தார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியே கட்டுப்பட்டு சிகரெட் காட்சிகள் தன் படங்களில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்.

மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், பசுமைத் தாயகம் எனும் தனது சுற்றுச் சூழல் அமைப்பு மூலம் மது, புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறார் அன்புமணி.

மீண்டும் சினிமாவில் தலைதூக்கிவிட்ட சிகரெட் புகைக்கும் காட்சிகளை தீவிரமாக எதிர்த்து வருகிறார் அன்புமணி. ஆனாலும் வட இந்தியாவில் இதை பொருட்டாக யாரும் எடுக்கவில்லை. இவர் என்ன சொல்வது நாங்கள் என்ன செய்வது என்று வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கின்றனர் ஷாரூக்கான், அமீர்கான் போன்றவர்கள்.

எனவே தனது எதிர்ப்பை மீண்டும் தமிழ்ப் படங்களின் பக்கம் திருப்பியுள்ளார் அன்புமணி.

நடிகர் அஜீத் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் அசல். இந்த படத்தில் அஜீத் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சி போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் டிரைலர்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தக்காட்சியை கட்டாயம் நீக்கக வேண்டும், இல்லையேல் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சென்னை சங்கம் தியேட்டரில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமகவினர் பங்கேற்று, சிகரெட் காட்சிகளுக்கு எதிராகவும், அதனை ஆதரிக்கும் நடிகர்களைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

புகைக்கும் காட்சி வேண்டாம்-அஜீத்துக்கு அன்புமணி கடிதம்

சென்னை: அசல் திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதை அனுமதிக்க வேண்டாம்... அல்லது அந்தக் காட்சிகளில் புகைப் பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளவும் என முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அசல் படத்தின் கதாநாயகன் அஜித்,​​ தயாரிப்பாளர்கள் ராம்குமார், பிரபு,​​ இயக்குநர் சரண் ஆகியோருக்கு எழுதிய கடிதம்:

சிறுவர்களையும்,​​ இளைஞர்களையும் புகை பிடிக்கும் கொடிய பழக்கத்துக்கு அடிமையாக்க சிகரெட் நிறுவனங்கள் முயல்கின்றன.​ இதற்காக திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நடிகர்கள் ரஜினிகாந்த்,​​ கமல்ஹாசன்,​​ விஜய்,​​ சூர்யா ஆகியோர் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.​ ஏ.வி.எம்.​ நிறுவனமும் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என அறிவித்திருக்கிறது.

எனவே தமிழக இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி,​​ அசல் படத்தில் மிகக் குறைவான காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்குமானால், அவற்றில் புகைப்பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் இடம்பெறுமாரு பார்த்துக் கொள்ளவும்.​​ அக்காட்சிகள் படத்தின் கதையம்சத்தில் முக்கியமில்லாததாக இருக்கும் எனில் அவற்றை நீக்கிவிடுங்கள்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று அசல் படத்தின் பேனர்கல் வைக்கப்பட்டிருந்த ங்கம் திரையரங்கம் முன்பு பாமகவினரும், பசுமை தாயகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க பாமக கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் விவசாயிகள் பெரிதும் நம்பியிருந்த வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது.

கடலூர் தவிர தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏரி, குளம், குட்டை, விவசாயி கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.

வறட்சி காரணமாக விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட இன்றி பெண்கள் காலி குடங்களுடன் அலையும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொழில் இல்லாத மிகவும் பின்தங்கிய பகுதியாக தர்மபுரி மாறியதால், இங்குள்ள மக்கள் தஙகளது குடும்பத்தோடு பெங்களூரு, ஆந்திரா, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகர புறங்களுக்கு வேலைக்காக அகதிகள் போல் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரண உதவிகளை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

அடுத்த ஆண்டு மழை பெய்து விளைச்சல் உண்டாகும் வரை, ஒவ்வொரு குடும்பத்துக்கு மாதம் 5,000 ரூபாயும், கிணற்று பாசணத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் உடனடியாக போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை அரசவ கால நடவடிக்கையாக உடனே துவங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 4 ம் தேதி பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என குறிப்பிட்டுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: