Thursday, August 26, 2010

பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை:

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்அமைச்சரிடம் செய்தியாளர்கள் மீண்டும் மதுவிலக்கு வருமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பரிசீலனை செய்வோம் என்று தான் கூறினோம். எத்தனை நாள் என்று கூறவில்லை என்று கூறி மக்களை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார். போராட்டங்கள் நடத்திய மதுக்கடை ஊழியர்களை மிரட்டுவதற்கு இந்த அறிவிப்பை ஒரு ஆயுதமாக அவர் பயன்படுத்தி இருக்கிறார் என நினைக்கிறேன்.

வீதிதோறும் மதுக் கடைகளை திறந்து வைத்து, மது குடித்தால் உடலுக்கு கேடு என எழுதி வைத்து விட்டு புதிய புதிய மது ஆலைகளை திறக்க அனுமதி தந்து மது விற்கப்பட்டும் வருகிறது. 13 வயது பள்ளி சிறுவன் கூட குடிக்க ஆரம்பித்துவிட்டான். 1971க்கு பிறகு பல தலைமுறை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை தமிழக முதல்வர் தட்டிகழித்து வருகிறார். யாரும் கேட்காமலே புதுச்சேரி முதல்வர் நவம்பருக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தருவேன் என கூறி உள்ளார்.

ஆனால் இங்கே ரூ.400 கோடி செலவாகும். இதனால் மத்திய அரசு பணம் தந்தால் கணக்கெடுப்போம் என தட்டிக் கழிக்கிறார்கள். ரூ. 4,000 கோடி செலவானாலும் பரவாயில்லை. இது அவசியமானது. இதை தமிழக அரசுத்தான் செய்ய வேண்டும். நான் சொல்வதற்காக இல்லாமல், உச்சநீதிமன்ற ஆணைக்காக செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டு கொள்கிறேன். இல்லையெனில் 69 சதவீத இட ஒதுக் கீடுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு தேவையில்லை. பழைய வாக்குசீட்டு முறை வேண்டும் என ராஜ்யசபாவில் இன்று குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரயில்வே கோட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இந்த பகுதியில் 7அமைச்சர்கள் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை.

காவிரி உரிமையை நாம் இழந்தோம். ஒரு இனம் அழிவிற்கு காரணமாக நாம் இருந்திருக்கிறோம். ஈழ அரசையே நடத்தி வந்த ஒரு இயக்கம் முற்றிலும் அழிவதற்கு நாம் காரணமாக இருந்தோம்.

காவிரி பாலாற்றுடன் முதலில் இணைக்க வேண்டும். வைகை தாமரபரணியுடன் இணைக்க வேண்டும். ஆனால் காவிரியையும், வைகையையும் இணைக்க பேசுகிறார்கள். பாலாற்றில் நீரை பார்த்து பல ஆண்டாகி விட்டது.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றார்.

கேள்வி: பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: இன்று கூட மாநில இளைஞர் அணி கூட்டம் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, நிர்வாகிகளிடம் மது குடிக்ககூடாது. அது தெரிந்தால் பதவியை பறித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

கேள்வி: சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அது செயல்பட ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.

பதில்: இது தொடர்பாக பாமக போராட்டம் நடத்தும். அதே போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட, மாவட்ட தலைநகர்களில் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும்.

கேள்வி: பல கட்சியினரும் திமுகவில் இணைந்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க் கட்சியைச் சேர்ந்த, சேலத்துக்கு பக்கத்து மாவட்டத்துக்காரர் (செல்வகணபதி?) மீது ஊழல் புகார் இருக்கிறது. ஆனால், அவர் திமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகிவிட்டார் என்றார்

மாநில அரசே ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த வேண்டும்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு க்காக காத்திருக்காமல் மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கை.

பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, அவர்களின் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.

இந்த வழியில் வந்ததாக உரிமை கொண்டாடுகிறவர்கள், யாரும் வற்புறுத்தாமல், யாரும் கோரிக்கை வைக்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

ஆனால், இதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, சமூக நீதிக்கோ, நீதிக் கட்சியின் கொள்கைக்கோ எதிரானது என்று சொல்ல முடியுமா?. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதுவரை கணக்கு இல்லாவிட்டால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு எவ்வளவு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால், மாநில அரசு இடஒதுக்கீட்டின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதற்காக புதிய சட்டமும் இயற்றலாம் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக நீதியில் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும், இந்த அனுமதி கிடைத்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசு யாரும் கோரிக்கை வைக்காமலேயே, வரும் நவம்பர் மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், சமூக நீதி கொள்கைக்கு எங்களைத் தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்? என்று கேட்கும் தமிழக முதல்வர் கருணாநிதி அகில இந்திய அளவில் முயற்சி நடப்பதால், இங்கே தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க முன்வராமல், பொறுப்பை தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இது இரட்டை நிலை இல்லையா?

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பரிசீலிக்கலாம் என்ற நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. ஆனால், தமிழக அரசின் நிலை அப்படி அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கடமையையும், பொறுப்பையும் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் சுமத்தியிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள் கணக்கெடுப்பை செய்து முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கெடு முடிவதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக இடஒதுக்கீடு அளவை முடிவு செய்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இப்போது இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Wednesday, August 25, 2010

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி

மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணிக்கும் நேரில் போய் அழைப்பு வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடக்கும் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணத்தையொட்டி, முக்கியப் பிரமுகர்களுக்கு நேரில் போய் அழைப்பிதழ் வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் ரஜினி.

இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு வைத்தார் ரஜினி.

பின்னர் மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

நேற்று காலை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அவரது வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார் ரஜினி.

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேற்று பிற்பகலில் சந்தித்தார் ரஜினி. அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். அன்புமணியும் அவர் மனைவி சௌம்யா அன்புமணியும் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனாலும் அவர் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸை சந்திக்கவில்லை

100 தொகுதிகளுக்கு குறி-ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!

சேலம்: 100 தொகுதிகளில் வெற்றியைக் குவிக்க டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி செயல்பட்டு 100 தொகுதிகளை நாங்கள் வெல்வோம் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

சேலம் வந்த ஜி.கே.மணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது...

பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி ரீதியாகவும், கட்சியின் அமைப்புகள் ரீதியாகவும் பலப்படுத்தி, அதனை தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் எங்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் என்ற திட்டம் வகுத்துள்ளார்.

இந்த திட்டத்தின்படிதான் பென்னாகரம் இடைத்தேர்தலில் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். அதற்கு கிடைத்த பலனாகத்தான் அந்த தேர்தலில் எங்கள் கட்சி இரண்டாவது இடத்தை பெற முடிந்தது.

அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்தி, தமிழகம் முழுவதும் அதனை செயல்படுத்தி கட்சியை பலப்படுத்த டாக்டர் ராமதாஸ் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 100 சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து இந்த மைக்ரோ பிளான் செயல்படுத்தப்பட உள்ளது.

மைக்ரோ பிளான் திட்டத்தின் கீழ் நாங்கள் அதனை செயல்படுத்தும் 100 தொகுதிகளிலும் தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக 60 தொகுதிகளில் நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இதில் முதன் முதலாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு மக்களுடன் கலந்துரையாடி வந்துள்ளோம்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு:

அடுத்ததாக சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட அனைவரும் வந்து பணியாற்றி வருகிறோம். இங்கு கிராமம் கிராமமாக சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறுவதோடு, அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கட்சியில் புதியவர்களாக சேர ஏராளமான இளைஞர்கள் குறிப்பாக எல்லா சாதி சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் முன்வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதியவர்களை கட்சியில் சேர்ப்பதில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்த்து வருகிறோம். புதிதாக கட்சியில் சேருபவர்களுக்கு பா.ம.க.-வின் கொள்கைகள், அரசியல் திட்டம், மக்கள் நலனுக்காக பாடுபடுவது போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் நாளைநடத்தப்படுகிறது.

காலையில் தீவட்டிபட்டி-மாலையில் ஓமலூர்:

இந்த முகாம் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் 26-ந் தேதி வருகிறார்கள். காலையில் தீவட்டிபட்டியிலும், மாலையில் ஓமலூரிலும் என 2 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றார் மணி.

Wednesday, August 18, 2010

புதிய விமான நிலையத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

சென்னை: சென்னை அருகே க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து எனது தலைமையில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் இருப்பிடங்களையும், விவசாயிகளின் விளைநிலங்களையும் அபகரிக்கக்கூடாது.

சென்னைக்கு அருகே க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பாதிக்கப்படாதவாறு வேறு மாற்று இடங்களை தேர்வு செய்து க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அரசு முன் வர வேண்டும்.

சென்னையை சுற்றி தனியார் வளைத்துப் போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை கையகப்படுத்தினால் விவசாயிகளுக்கும் விளை நிலங்களுக்கும் பாதிப்பு குறையும்.

விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் 23ம் தேதி திருவள்ளூரில் எனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Tuesday, August 17, 2010

சமூக நீதி குறித்து கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பேசக் கூடாது-ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை. முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் இது பற்றி பேசத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக தொடர் போராட்டங்கள் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸைப் பாராட்டி, அக்கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ராமதாஸ் பேசியதாவது:

இந்தக் கூட்டத்தை பாராட்டுக் கூட்டம் என்று கூறுவது சரியல்ல. தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கும் கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.

எனவே, தமிழக அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியாக வேண்டும்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு தொடரலாம் என்றும், அடுத்த ஆண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வளவு இடஒதுக்கீடு தேவை என்பதை தீர்மானிக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவேளை பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 85 சதவீதமாக இருக்குமானால், அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு.

நாடு சுதந்திரம் பெற்ற பின், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இப்போது மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பல மாநிலங்களுக்கு சென்று, ஆதரவை திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பா.ம.க.தான். தமிழகத்தில் எந்த கட்சியாவது இதற்காக குரல் கொடுத்தது உண்டா?

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து மாநில எம்.பி.க்களிடமும் பா.ம.க. கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியது. 174 எம்.பி.க்களின் கையழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சென்று அப்போதைய உள்துறை அமைச்சரிடம் அளித்தார் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி. அந்த மனுவில் பா.ம.க.வைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து போட மறுத்து விட்டனர்.

பல ஆண்டுகளாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஒரே தொகுப்பாகத்தான் வழங்கப்பட்டு வந்தது. வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இப்போது தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதும் பா.ம.க. மட்டுமே. இவ்வாறு தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசுக்கு எதிராக பா.ம.க. பெரும் போராட்டத்தில் ஈடுபடும். இதற்காக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்கு தொடர்ந்ததைப் போல என் மீது வழக்கு தொடர்ந்தாலும், அதைச் சந்திக்கத் தயார் என்றார் ராமதாஸ்.

Thursday, August 12, 2010

சாதிவாரி சென்ஸஸ்: இனி்ப்பு வழங்கி கொண்டாடிய பாமக

சென்னை: நாடு விடுதலைப் பெற்ற பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்தை பாராட்டி வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சலுகை நிறைவாகக் கிடைக்க உதவிடும் வகையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதற்காக கடந்த மக்களவையில் உறுப்பினர்களாக இருந்த 300க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து வாங்கி, அப்போது உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் உள்துறை அமைச்சரிடம் மனு அளித்தார்.

பாமகவின் தொடர் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

இதற்கு உறுதுணையாக இருந்த லாலு பிரசாத் யாதவ், முயலாம் சிங், சரத் யாதவ் உள்ளிட்ட சமூக நீதியில் அக்கறை கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய பாமகவினர்:

இதற்கிடையே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழகம முழுவதும் பாமகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

சென்னை தி.நகர் பஸ் நிலையம் முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது மணி பேசுகையில்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாமக போராட்டம் நடத்தி வருகிறது. 300 எம்.பிக்களின் கையெழுத்து வாங்கி மத்திய அரசிடம் அன்புமணி வழங்கினார்.

இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை இனி சட்டமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு கிராம நிர்வாக அதிகாரி மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

27% இட ஒதுக்கீடு-அமலாக்க கால நீட்டிப்பு கூடாது:

இந் நிலையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுவதுமாக அமல்படுத்த மேலும் மூன்று ஆண்டுகள் கால அவகாசத்துக்கு வழி செய்யும் மசோதாவுக்கு திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீத இடங்களை ஒதுக்கி, மூன்றாண்டுகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு எட்டப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கு மாறாக, மேலும் 3 ஆண்டுகள் காலத்தை நீட்டிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள சமூக நீதியாளர்கள், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள், கட்சிகளைக் கடந்து இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டுமா என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tuesday, August 10, 2010

விஜயகாந்துடன் கூட்டணிக்குத் தயார்-ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,
எங்கள் வாக்கு வங்கி சரியவில்லை. பாமகவுக்கு அடிப்படையாக இருப்பது வன்னியர்களும் வட தமிழகமும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களுக்கு பலமே வன்னியர்கள் ஆதரவுதான்.

தமிழகத்தில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிறைவேறி இருக்காது. ஆதரவு கொடுப்பதற்கு முன் ராஜ்யசபா சீட்டையும், மேலவையில் எத்தனை இடங்கள் என்பதையும் பேசி ஒப்பந்தம் போட நிர்பந்தப்படுத்தி இருந்தால் திமுக தரப்பில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்.

நாங்கள் அவர்களை நம்பினோம். திமுக நிர்வாக குழு கூடுவது வரை நூற்றுக்கு நூறு உறுதியளித்தார்கள். நிர்வாக குழு முடிவு வெளிவந்த அந்த நிமிடம் வரை அவர்களை நம்பினோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம். (அன்புமணி்க்கு ராமதாஸ் ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டார். ஆனால், 2013ம் ஆண்டு ராஜ்சபா தேர்தலில் தான் சீட் தருவோம். அதுவரை பாமக காத்திருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது)

இப்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. திமுகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஜி.கே.மணி தலைமையில் ஐவர் குழு முதல்வசர் கருணாநிதியை சந்தித்தது. அப்போது மீண்டும் பேசுவோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக இன்னும் காத்திருக்கிறேன்.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அல்லது 3வது அணி அமைவது போன்ற எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணிக்கான கதவை மூடிவிட்டதாகவும் சொல்ல முடியாது.

அரசியலில் எந்தக் கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது.

தேமுதிகவுக்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஆளும் கட்சிகளை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளை விமர்சித்தது இல்லை. விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் ராமதாஸ்.

தனித்து நின்றால் 20 கிடைக்கும்:

முன்னதாக நெல்லையில் பேசிய ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.

தேனியில் நேற்று அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.

பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.

திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவு அளிக்கிறது.

ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:

இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.

இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தச் சூழலில் தான் இன்று பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் தான் தேமுதிக, அதிமுக என எந்தக் கூட்டணிக்கும் தயார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்:

இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் பாஜக, திமுக, காங்கிரஸ் நீங்கலாக தமிழகத்தில் உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேச தயாராக இருக்கிறோம் என்றார்.

Sunday, August 8, 2010

எல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-அன்புமணி சவால்

சேலம்: பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.

20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

காவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண்டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே?

வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி

ஐவர் குழு தயார், திமுக அழைத்தால் பேசுவோம்-டாக்டர் ராமதாஸ்

மதுரை: திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அழைத்தால் பேசுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2011ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் மாற்றமில்லை.

திமுகவில் இணைவது குறித்து அக்கட்சியினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசி முடிவு செய்வோம்.

காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைந்தால் அதில்இடம் பெறுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்தபோது, ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிட ஒத்துழைக்குமாறு கேட்டோம். இதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இத்தகைய காரணங்களால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் ராமதாஸ்.

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்-ராமதாஸ்

பரமக்குடி: தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பரமக்குடி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமூகநீதிக் கட்சியான பா.ம.க.வில் தென் மாவட்டங்களில் நாடார், முக்குலத்தோர், பிள்ளைமார், யாதவர் ஆகிய சமுதாயத்தினருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி. என்பது பட்டியல் சாதியினர். இதனை பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அரசு ஆவணங்களில் தேவேந்திரகுலத்தினர் பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை மாற்றி தேவேந்திரகுலத்தார் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அருந்ததியருக்கு வழங்கப்படுவது போல் தேவேந்திரர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும்.

பூரண மதுவிலக்கு வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது 13 வயது இளைஞர்களும் குடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுக்குள் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். இதனால் 34 மாவட்டங்களிலும் மகளிரைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.

கடந்த 3 ஆண்டுகளில் குறைகளை சுட்டிக்காட்டியதால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டோம். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: