Tuesday, September 28, 2010

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநில அளவில் மறியல் போராட்டம் -ராமதாஸ்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ராமதாஸ் பேசுகையில்,

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு வருடத்துக்குள் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியாக எடுக்கப்படும் கணக்கின்படி ஒவ்வொரு சாதியிலும் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. 40க்கும் மேற்பட்ட சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல்வரை சந்திக்க அணுகி உள்ளோம். உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விரைவில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் மீண்டும் அனைத்து சமூக அமைப்புகளும் கூடி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்துவோம்.

தமிழ்நாடு முழுவதும் 2 மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நடக்கும் என்றார்.

ராஜபாளையத்தில் பொதுக்குழு கூட்டம் :

இதற்கிடையே வரும் 30ம் தேதி பாமகவின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் ராமதாஸ் கலந்து கொள்கிறார்.

Thursday, September 23, 2010

பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை மறைக்க முயலும் கூட்டம்-ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 69 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று நினைக்கும் கூட்டம் தான், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம், பின்னர் தனியாக நடத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு இந்தக் கூட்டத்தின் சூழ்ச்சி தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வலியுறுத்த அனைத்து சாதி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.

யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், கொங்கு முன்னேற்ற கழகம் வி.ஆர்.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நாடார் பேரவை செயலாளர் புழல் ஏ.தர்மராஜ், அகில இந்திய தேவர் பேரவை நிறுவனர் வி.ராமகிருஷ்ணன், நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்பட 38 சமுதாய சங்கங்ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

1931க்குப் பிறகு ஆதிக்கம் செலுத்திய கூட்டம் (முற்பட்ட சாதியினர்) சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்திவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்து விடும் என்று அந்தக் கூட்டத்தினர் கூறும் காரணம் உண்மையல்ல. இதர பிற்பட்டோர் 69 சதவீதத்திற்கு மேல் இருக்கும் உண்மை தெரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் சூழ்ச்சி செய்து நிறுத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மாட்டோம், பின்னர் தனியாக எடுப்போம் என்று கூறிவிட்டது. இதில் தான் சூழ்ச்சி உள்ளது.

இந்த கணக்கெடுப்பை நடத்த ரூ.2,500 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இதை நடத்தினால் அவ்வளவு கோடிகள் தேவைப்படாது.

தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஆதிக்க சமூகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு நிறுத்தி விடுவார்கள்.

இதனால் இப்போது எடுக்கும் கணக்கெடுப்பிலேயே சாதி- ஓபிசி, சாதி பிரிவு என்ன? என்று போட்டுவிட்டாலே போதும். ஆனால், நம்மை ஏமாற்ற நினைக்கிறார்கள். தனியாக எடுக்கும் கணக்கெடுப்பிலும் தலையை மட்டும் எண்ணுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சமூக பொருளாதார நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து சமுதாயத்தினருக்கும் பொருளாதார நிலைகளுடன் கூடிய சாதிவாரி கணக்கு அரசிடம் இருக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ப்ரவரியில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்தாமல் தனியாக நடத்துவது என்று அறிவித்துள்ள முடிவை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதோடு சமூகப் பொருளாதார அந்தஸ்து குறித்த புள்ளிவிவரங்களோடு கணக்கெடுப்பு நடத்தினால் தான் உரிய பலன் விளையும் என்று அறிஞர்கள் தெரிவித்துவரும் கருத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தாமல், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு இந்த பணியை மேற்கொள்ளும் வரை காத்திருக்காமல், தமிழகத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள்ளாக, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழு விவரங்களோடு கூடிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மாநில அரசு முன்வர வேண்டும். அதற்கான உத்தரவை தமிழக அரசு காலதாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மீண்டும் பேசிய டாக்டர் ராமதாஸ், இந்த முடிவை தமிழக அரசு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2க்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தந்தை பெரியாரிடம் பாடம் படித்த முதல்வர் கருணாநிதி சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர். எனவே உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்த மாதம் 11ம் தேதி முதல்வரை அனைத்து சமுதாய தலைவர்களும் சந்தித்து வலியுறுத்துவோம்.

அதன் பின்னரும் இதுபற்றி அறிவிப்பு வரவில்லை என்றால் அக்டோபர் 21ம் தேதி அனைத்து சமுதாய சங்கத்தினரும் இணைந்து சென்னையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்துவோம் என்றார்.

ஓட்டு போட காசு வாங்காதீர்கள்: ராமதாஸ்

கும்மிடிப்பூண்டி: தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர்,

வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 1980ல் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 5,000 பேர் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு கூட நடைபெற்ற அந்த போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்டவர்கள் சிறை சென்றனர். அந்த வகையில் பா.ம.க. வரலாற்றில் கும்மிடிப்பூண்டி மறக்க முடியாத இடம்.

நாம் 2011ல் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்றால் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆட்சி நடத்தும் கட்சிகளின் நோக்கம் எல்லோரும் குடிக்க வேண்டும் என்பது தான்.

டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் பள்ளிக்கூட மாணவர்களும் மது குடிக்கிறார்கள். இன்னும் 5 வருடத்தில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலைமை உருவாகப் போகிறது.

2011ல் தமிழ்நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விவசாயம், கிராம வளர்ச்சி, இளைஞர்களின் மறுமலர்ச்சி, தமிழ் வளர்ச்சி இவற்றுக்கு எல்லாம் பாமகதிட்டம் போட்டிருக்கிறது. அதனை வல்லுனர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதை நிறைவேற்ற பாமக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பெண்கள் விதவைகளாக உள்ளனர். மதுக்கடை வேண்டாம் என்று கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நான்தான் கேட்டு வருகிறேன்.

நாட்டில் பல்வேறு புரட்சிகள் இருந்தது. தற்போது சாராய புரட்சி, ரியல் எஸ்டேட் புரட்சி நடக்கிறது.

ஆட்சி நடத்தியவர்கள், ஓட்டுப் போடும் ஜாதியாக மட்டுமே வன்னிய ஜாதியை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது. பாமக அரசியல் திட்டமே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை என்பது தான் என்றார் ராமதாஸ்.

Wednesday, September 22, 2010

''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'': இதுதான் நமது தாரக மந்திரம்-ராமதாஸ்

கும்மிடிப்பூண்டி & சேத்தியாதோப்பு: நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கும்மிடிப்பூண்டியில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நிறைவு நாளில் அவர் பேசுகையில்,

ஆறரை கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னிய இனம க்கள் மேம்பாடு அடையாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி வகை செய்யும்.

சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடுதான்.

வன்னியர்கள் மற்றும் தலித்துகள் இணைந்தால் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால், திராவிடக் கட்சிகள் சூழ்ச்சி செய்து இவ்விரு இனத்தவரிடையே பிரிவினைகளை உருவாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே அதிகமான விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணமான டாஸ்மாக் கடைகள் தான்.

பாமக ஆட்சிக்கு வந்தால் அவை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'':

முன்னதாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் திருமண விழாவில் பேசிய ராமதாஸ்,

வன்னியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள கல்விக் கோவிலில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டக் கல்லூரி துவங்கப்படும். வன்னியர் பிள்ளைகள் அனைவரும் அங்கு படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ்சாக வேண்டும்.

நமது சமுதாய மக்கள் அனைவரும் திருப்பதி, சபரிமலை மற்றும் முருகன் கோவிலுக்கெல்லாம் போகிறீர்கள். வன்னியர்களுக்காக கட்டப்பட்டுள்ள கல்விக் கோவிலுக்கு அனைவரும் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து பார்க்க வேண்டும்.

இந்த சமூகம் வாழ வேண்டும் என்றால், நாம் ஆள வேண்டும்.
இரண்டு கோடி மக்களை வைத்துக் கொண்டு, எனக்கு 40 இடம் கொடுங்கள்; 50 இடம் கொடுங்கள் என, யாரிடமாவது கையேந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இன்னும் யாரிடம் கையேந்துவது. பல கட்சிகளை வளர்த்து விட்டுக் கொண்டே இருந்தால், நாம் ஆட்சிக்கு வரவே முடியாது. வன்னியர் அனைவரும் என் பின்னால் வாருங்கள். நான் கை காட்டுபவர்களை ஆதரிக்க வேண்டும். இனியும் மனு கொடுக்கும் ஜாதியாக நாம் இருக்கக் கூடாது. மனு வாங்கும் ஜாதியாக வன்னியர்கள் மாற வேண்டும்.

நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டும் என்றார்.

மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு: பாமக போராட்டம்

மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது.

மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர்.

மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.

இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Thursday, September 16, 2010

இதுதான் கூட்டணி தர்மமா?: திமுக மீது ராமதாஸ் கடும் தாக்கு

ஜெயங்கொண்டம்: திமுக மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார் பாமக, நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சங்க பயிற்சி முகாமில் அவர் பேசுகையில்,

கடந்த சட்டசபை தேர்தலில் வன்னியர் சங்கத் தலைவர் குருவை திட்டமிட்டு தோற்கடித்தனர். கூட்டணியினர் வெற்றி பெற நாம் திட்டமிடுகிறோம். கூட்டணியை தோற்கடிக்க அவர்கள் (திமுக) திட்டமிடுகின்றனர். இதுதான் கூட்டணி தர்மம் என கூறுகின்றனர்.

குரு திருவண்ணாமலையில் போட்டியிட்டு டெல்லிக்கு சென்றால் இந்த தேசத்துக்கே ஆபத்து எனக் கூறி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுகின்றனர்.

அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு எனக் கூறிய இவர்கள் மீது காங்கிரஸ் கட்சி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடவில்லை.

ஆனால், ஒரு மண்டபத்தில் பேசிய பேச்சுக்காக குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டனர். குரு தனி மனிதர் அல்ல. இரண்டரை கோடி வன்னியர்களுக்கும் உரிமை வேண்டும் என கிராமம் கிராமமாக சென்று தட்டி எழுப்பி போராடும் போராளி.

அவரை சிறையில் தள்ளுவது இரண்டரை கோடி வன்னியர்களை சிறையில் தள்ளுவதற்கு சமம். குரு மீது இன்னும் கூட தொடர்ந்து வழக்கு போட்டு வருகின்றனர். வன்னியர் சங்கத்துக்கு குரு தலைவர் தான். ஆனால், வன்னியர் சங்க நிறுவனர் நான் தான். அவரது பேச்சுக்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்.

குருவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, உளவுத்துறை முயற்சி செய்தது. இதை விட வெட்கக்கேடு வேறு என்ன வேண்டும். இதுகுறித்து உள்துறை செயலாளரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இந்த பகுதியில் பாமக துவங்கப்பட்டிருக்காவிட்டால், குரு இன்னொரு தமிழரசன் ஆகியிருப்பார். அந்தப் பாதை வேண்டாம் என தடுத்து, அவரை ஜனநாயக பாதையில் அழைத்துச் சென்றோம் என்றார் ராமதாஸ்.

விஜய்காந்தின் தேமுதிக-பாமக கூட்டணி உருவாகலாம் என்று கருதப்படும் நிலையில் திமுக மீது ராமதாஸ் கடும் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, September 6, 2010

தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-ராமதாஸ்

திட்டக்குடி: நாடு சுதந்திரம் அடைந்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதை செயல்படுத்தாமல் முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார். அதற்கு வெறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து கணக்கெடுப்பை எடுக்கலாம். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் கொண்ட ஒரு கமிஷன் அமைக்கலாம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். நாங்கள் அனைத்து சாதியினரையும் சேர்த்துதான் கணக்கெடுக்க சொல்கிறோம். இலவசங்களை வழங்குவது மூலம் உண்மையான வளர்ச்சி அடைய முடியாது. எம்ஜிஆர் ஆட்சியின் போது இலவச காலனி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை மட்டும் செயல்படுத்தினார்.

1989ல் 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பேசிய கருணாநிதி , இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான் என்றார்.

இதை நான் இப்போது கூறும்போது கருணாநிதிக்கு கோபம் வருகிறது. அவர் 1989ல் சொன்னதைத்தான் தற்போது நான் திருப்பிச் சொல்கிறேன்.

இலவச டிவி கொடுப்பதால் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையிலேயே இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இலவச கழிவறை கட்டி தர வேண்டும்.

விவசாயிகளுக்கு ரூ. 25,000 பணமாகக் கொடுக்க வேண்டும். தற்போது விவசாய விளை நிலங்களை வெளி மாநிலத்தவர்கள் கைப்பற்றி வீட்டு மனைகளாக மாற்றி வருவது விவசாயத்தை அழித்துவிடும். இதனை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவர வேண்டும்.

இல்லையெனில் 5 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உணவுக்கு அடுத்த மாநிலத்தை எதிர்பார்க்கும்நிலை உருவாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் நாட்டின் வளர்ச்சிக்காக பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் பாமகவே முன்னின்று தமிழ்நாட்டில் இருந்து எந்தப் பொருளும் கேரளாவிற்கு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தி கேரளாவுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவோம்.

தேர்தலில் பாமக தனித்து நிற்பதன் மூலம் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வர வழி வகுப்பதாக கூற முடியாது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய ராமதாஸ்,

உலகில் அரசியல் இல்லாமல் ஒரு துரும்பு கூட அசையாது. ஒவ்வொரு குடிமகனின் தலைவிதியை நிர்ணயிப்பது அரசியல்தான்.

வடஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து திருவண்ணாமலை மாவட்டம் 30 ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் வளர்ச்சி அடைந்து எங்கேயோ போய் விட்டார்கள்.

பாமகஅத்திப்பூ என்கிறார்கள். பாமக பூசணி பூ, இது ஆண்ட கட்சி, அத்திமரம், உழைக்கும் மக்களின் கட்சி. தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

பின்னர் பேசிய அன்புமணி, நான் அமைச்சராக இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 அவசர ஊர்தி சேவை திட்டங்களை கொண்டு வந்தேன். இந்தியாவிலேயே ஐ.நாவால் பாராட்டப்பட்ட ஒரே திட்டம் இந்த சுகாதாரத் திட்டம்தான்.

ஒரு பக்கம் இலவசம். மறுபக்கம் டாஸ்மாக் கடை. 1995ம் ஆண்டு மதுபானம் மூலம் அரசுக்கு ரூ. 1,400 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு மதுக்கடை மூலம் ரூ. 13,000 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை மூலம் அடுத்த ஆண்டு ரூ.15,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் வயிற்றில் அடித்து, கிடைக்கும் இந்த வருமானம் மூலம் இலவசங்களை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக இலவச கல்வி, வேலைவாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

சோனியா காந்திக்கு ராமதாஸ் வாழ்த்து:

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு ராமதாஸ் பேக்ஸ் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், உங்களது செயல்திறன் மிக்க மற்றும் திறமையான தலைமையின் மூலம் சமூக ரீதியாகவும், கல்வியிலும், பொருளாதார நிலையிலும் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களின் துயரங்கள் தீர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

Thursday, September 2, 2010

திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும்-திருமாவளவன்

சென்னை: வட மாவட்டங்களில் திமுக கூட்டணி வலிமை பெற பாமக பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை.

திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுகின்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு அமையும். மீண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, அதிக அளவு பணத்தைக் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள். வட மாவட்டங்களில் கூட்டணி வலிமை பெறுவதற்கு பாமக வரவு பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்றார்.

Wednesday, September 1, 2010

விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்க்கும் ராகுலை கண்டிப்பாரா கருணாநிதி?: ராமதாஸ்

திருப்பத்தூர்: அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருந்த வானூர்தி நிலையத்தை இடம்மாற்றியது ஏன்? விளைநிலங்களை கையகப்படுத்தித்தான் வானூர்தி நிலையம் அமைக்கவேண்டுமென்றால் அது தேவையில்லை. இதனை தெரிவித்தால் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக என் மீது முதலமைச்சர் புகார் கூறுகிறார்.

அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா?.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது என்றார் ராமதாஸ்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: