Sunday, January 30, 2011

கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை-வேறு கட்சிகளும் எங்களுடன் பேசுகின்றன: ராமதாஸ்

நெய்வேலி: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக வேறு கட்சிகளும் எங்களுடன் பேசி வருகின்றன. இதனால் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவும் கூட்டணியில் இடம் பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து நெய்வேலியில் நடந்த பாமக நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் ராமதாஸிடம் கேட்டபோது, டெல்லியில் பேட்டியளித்த கருணாநிதி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பா.ம.க.வின் உயர்நிலைக் குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை.

பிப்ரவரி முதல் வாரத்தில்தான் கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்போம். கூட்டணியில் சேருவது பற்றி வேறு கட்சிகளின் தூதர்களும் பா.ம.க.வுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர் என்றார்.

அப்படியானால் அதிமுகவும் பேசுகிறதா என்று கேட்டதற்கு பல்வேறு கட்சிகள் பேசி வருகின்றன என்றார் ராமதாஸ்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக இருந்தபோது, திமுக ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராமதாஸ். சகித்துக் கொள்ளவே முடியாது என்ற நிலை வந்தபோதுதான் பாமகவை கூட்டணியை விட்டு நீக்கியது திமுக.அதன் பின்னர் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் ராமதாஸ். ஆனால் படு தோல்வியைச் சந்தித்தார். ஒரு இடத்தில் கூட அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பாமக வட்டாரம், பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2வது இடத்தைப் பெற்று, தனது வாக்கு வங்கி போண்டியாகவில்லை என்பதை நிரூபித்து அரசியலில் தாங்களும் உயிருடன்தான் உள்ளோம் என்பதை நிரூபித்தது.

அதன் பின்னர் மீண்டும் திமுக அணியில் சேர பேரம் பேசுவதை தொடங்கியது பாமக தரப்பு. முதல்வர் கருணாநிதியை பாமக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு என்ற போர்வையில் பாமக வட்டாரம் சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியது. அதன் அடிப்படையிலேயே மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்க்க முன்வந்தார் கருணாநிதி. அதை நேற்று தனது வாயாலேயே டெல்லியிலும் அறிவித்துள்ளார். இந்தநிலையில், வேறு கட்சிகளின் தூதர்களும் தங்களை அணுகியிருப்பதாக கூறியுள்ளார் ராமதாஸ்.

படுத்துக்கொண்டே வெல்வோம்

முன்னதாக நெய்வேலியில் நடந்த பாமக பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

வன்னியர்களுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. வன்னியர்களுக்கு தகுதி இல்லையென்றால் வேறுயாருக்கும் தகுதி கிடையாது. கட்டி வா என்றால் வெட்டிக் கொண்டு வரும் சமுதாயம் நம் சமுதாயம்.

நெய்வேலி தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டாலும் படுத்துக் கொண்டே வெற்றிபெறுவோம்

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் ஒருவர் கூட உயர் பதவியில் இல்லை. இந்நிறுவனத்தின் தலைவராக ஒரு வன்னியர் வரவேண்டும் அதற்கு பா.ம.க. பாடுபடும்.

அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். பாமக தலைமையில் ஆட்சி அமையும்போது, அம்பானி வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற கல்வி நம்மை போன்ற ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வோம்.

தனியாக டியூசன் எடுப்பவர்களை சிறையில் அடைப்போம். வீட்டுப் பாடம் ரத்து செய்யப்படும், தினமும் 2 மணி நேரம் விளையாட்டு. இதுபோன்ற சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று பேசினார் ராமதாஸ்

திமுக கூட்டணியில் பாமகவும் இருக்கிறது-டெல்லியில் கருணாநிதி அறிவிப்பு

டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருப்பதாக முதல்வர் கருணாநிதி டெல்லியில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கருணாநிதி டெல்லி வந்துள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது எந்தெந்த கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, இப்போதைக்கு திமுக, காங்கிரஸ் தவிர, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகியவையும் உள்ளன என்றார்.

காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து விடுமா என்று கேட்டதற்கு ஜனவரி 31ம் தேதி சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளேன். பேசிய பிறகுதான் அதுகுறித்துக் கூற முடியும். இப்போதே கூற முடியாது என்றார் முதல்வர்.

காங்கிரஸ் தலைவர்களுடன் பேசப் போவது என்ன என்ற கேள்விக்கு, எத்தனை தொகுதிகளில் கட்சிள் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளை யார் யார் எடுத்துக் கொள்வது என்பது குறித்து பேசுவோம், நாளைதான் (இன்று) அது முடிவாகும் என்றார் கருணாநிதி.

தனது பேட்டியின் மூலம் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளை அறிவித்துள்ளார் கருணாநிதி. அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

சரத் பவார், வயலார் ரவியுடன் சந்திப்பு

டெல்லி வந்து சேர்ந்த பின்னர் முதல்வர் கருணாநிதியை வேளாண் அமைச்சர் சரத் பவார் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தமிழக மழை, வெள்ள நிவாரண நிதியை விரைவில் விடுவிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதேபோல அமைச்சர் வயலார் ரவியும் முதல்வரை வந்து சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான ங்கள் வந்து போகும் வகையில் தரம் உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் விமானப் போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் முதல்வர் விவாதித்தார்.

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் கருணாநிதி. அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்யப்படவுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸாருடன் திமுக பேசும்.

Saturday, January 29, 2011

45 தொகுதிகள் -ராமதாஸ் பட்டியல்

சென்னை: எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

திருமுல்லை வாயலை அடுத்த சோழம்பேடு பகுதியில் ஆவடி மற்றும் மதுரவாயல் தொகுதி பா.ம.க. கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடாது. கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதே போன்ற கூட்டணி அமையும். கூட்டணி பற்றி இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடுகிறேன்.

எந்தக் கூட்டணி என்றாலும் பா.ம.க.விற்கு மொத்தம் 45 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கோருவோம். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 3 தொகுதிகளையாவது பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி கோருவோம்.

பிளான் முக்கியம்...

சட்டசபை தேர்தலையொட்டி இப்போதிருந்தே மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் மைக்ரோ பிளானிங் எனப்படும் நுண் திட்டமிடல் முறையை பின்பற்றி 2-வது இடத்தை பிடித்தோம். அதே போல் வரும் தேர்தலிலும் திட்டமிட்டு நாம் பணியாற்ற வேண்டும்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பா.ம.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகம் உள்ளன.

திண்ணைப் பிரச்சாரம்....

பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். ஆவடி தொகுதிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சிவகோவிந்த ராசும், மதுரவாயல் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் கே.என்.சேகரும் தலைமை தேர்தல் பணிக்குழு அமைப்பாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.

தேர்தலில் நாம் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றாலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சிகளின் கொள்கைகளையும், நமது கட்சி கொள்கைகளையும் சேர்த்து பிரசாரம் செய்யவேண்டும். பிப்ரவரி மாதத்திற்குள் தொகுதி மாநாடுகளை நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்...", என்றார்.

Sunday, January 23, 2011

விஜயகாந்தெல்லாம் ஆட்சிக்கு வர இளைஞர்கள் வாய்ப்பளித்து விடக் கூடாது-ராமதாஸ்

அரியலூர்: தமிழகத்தில் 1967க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று ராமதாஸ் பேசுகையில்,

தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்டவர் தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.

சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பா.ம.க.,வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பா.ம.க., கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.

இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது.

இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு , விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும்.

வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும், கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர்.

காடுவெட்டி ஜெயங்கொண்டத்தில் போட்டி

தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை.

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன் என்றார் ராமதாஸ்.

கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கையுடன் உறவை முறிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும்போது அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கையைத்தான் இந்தியக் கடற்படை எடுக்கிறது.

ஆனால் தமிழக மீனவர்களை இவர்கள் நமது எதிரிகள் என்ற கோணத்தில் சிங்களக் கடற்படையினர் பார்ப்பதால்தான் இதுபோன்ற கொலைகள் நடத்தப்படுகின்றன.

கடந்தவாரம் ஒரு தமிழக மீனவரை சிங்களப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்காக இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

ஆனால், இலங்கை அரசோ தமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று கூறிவிட்டது. இலங்கை அரசின் இந்த வாதம் பொய்யானது என்பதை நிரூபிக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் இதுபோன்ற தாக்குதல் கள் தொடருகின்றன. அதுவும் இந்தியக் கடலோரக் காவல்படையின் தென்மண்டலத் தளபதி எஸ்.பி. மிஸ்ரா, இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்த ஒருசில மணி நேரங்களிலேயே இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும் இந்த விஷயத்தில் பொறுமை காக்கமுடியாது. சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொன்று குவிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தீர்வு கச்சத் தீவை மீட்பதும், இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதும்தான்.

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரைத் திரும்பப் பெறுவதுடன், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Saturday, January 22, 2011

விவசாயத்தை ஊக்கப்படுத்த பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும்: ராமதாஸ்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தில் பா.ம.க., மாவட்ட துணைச் செயலாளர் பாலசக்தி- நதியா திருமண விழா நடந்தது.



விழாவிற்கு தலைமை தாங்கி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பெண்களை சமுதாயத்தில் சமமாக பாவிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை திரட்டி பா.ம.க., சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று நல்லது, கெட்டது எது நடந்தாலும் குடிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.இதனை ஒழிக்கும் வரை ஏழைகள், கிராம மக்கள் முன்னேற முடியாது.



விலைவாசி உயர்வுக்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம்தான். காய்கறிகளை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்து சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் விலையை கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும். இன்னும் 5 ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும். ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து நிலங்களை வாங்கி கரம்பாக போட்டு வைக்கின்றனர். அது போன்ற நிலங்களை விற்ற விவசாயிகளே உழுது பயிர் வைக்கலாம். அதனை தடுக்க யார் வந்தாலும் அந்த இடத்திற்கு நான் வந்து முதல் ஆளாக நிற்பேன். இதற்கு அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.



விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கி விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். இதனை சொல்வது இந்த ராமதாசும், பா.ம.க.,வும்தான். அதற்கு பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும். இது மக்களுக்கு புரிய மாட்டேங்குது, புரிய வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Friday, January 21, 2011

7 புதிய நீதிபதிகள் நியமன சிபாரிசு பட்டியல்: வன்னியர்கள் இடம்பெறாததற்கு ராமதாஸ் அதிருப்தி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான சிபாரிசு பட்டியலில் வன்னியர்கள் யாரும் இடம் பெறாதது வருத்தம் தருகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பதில் தொடர்ந்து வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை வெறும் 4 வன்னியர் குல வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 51 நீதிபதிகள் இருக்கின்றனர். இதில் ஒரே ஒருவர் தான் வன்னியர்.

தற்போதுள்ள 7 நீதிபதிகள் காலியிடங்களுக்கு நீதிபதிகள் நியமனக்குழு 7 பேரை பரிந்துரை செய்துள்ளதாகத் செய்திகள் வந்துள்ளன. இந்த சிபாரிசில் ஒரு வன்னியர் கூட இல்லை என்பது தான் வன்னியர் குல வழக்குரைஞர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது.

தொடர்ந்து குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதிலும் நியமனக் குழுவில் இருப்பவர்கள் சமூகத்தினர் தான் தொடர்ந்து நீதிபதிகாளாகின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

நீதிபதிகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இந்த நியமனம் வெளிப்படையாகவும், தகுதி, திறமை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கி்ன்றனர். சில விதிமுறைகளை மீறி தற்போது சிபாரிசு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.

தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் எந்தவித போராட்டத்தையும் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று சம்பந்தப்பட்ட பொறுப்புடையவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தற்போது அனுப்பப்பட்டுள்ள இந்த சிபாரிசு பட்டியலை உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பி அனைத்து சமூகத்தினருக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து புதிய பட்டியலைத் தயாரித்து கொடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் அனைத்து சமூக வழக்குரைஞர்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன என்றார்.

Thursday, January 13, 2011

கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு, அதை ஒழிக்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை : பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமக சார்பில் சென்னை அமைந்தகரை குஜ்ஜி நாய்க்கன் தெருவில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத வேறுபாடு இன்றி பொங்கல் வைத்தனர். விழாவில் தமிழர்களின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தும் கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், மான் கொம்பு ஆட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், சாட்டைக் குச்சியாட்டம் என ஏராளமான கிராமிய கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், தமிழர்களின் வாழ்வு முழுவதும் கலையோடு தொடர்புடையது. தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது மகிழ்ச்சி, சோகம், களைப்பு என எல்லா சூழல்களிலும் பாட்டுகளை பாடும் மரபு, தமிழர்களுடையது.

அதேபோல் எவ்வளவோ வீர விளையாட்டுகள் இருந்திருக்கின்றன. பெண்களுக்காக மட்டுமே 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. ஆனால், இன்று தமிழர்கள் தங்கள் கலைகளை, வீர விளையாட்டுகளை இழந்திருக்கிறார்கள். நாம் நமது பண்டைய கலைகளை காப்பாற்றியாக வேண்டும்.

எனவே, குழந்தைகளை மாலை நேரங்களில் கட்டாயம் விளையாடச் செய்யுங்கள். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதேபோல் நம் வீர விளையாட்டுகளெல்லாம் மறைந்து, இப்போது ஊரெல்லாம், தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இங்கே கிராமத்தில் இருந்து பாரம்பரியம் நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதே வேலையில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு குத்துபாட்டு சென்று கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களின் போது சினிமா பாடல்களை பாட வைத்து ஆடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

மதுவை ஒழிக்க பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மதுவினால் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்று வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இந்த போராட்டத்திற்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும். நானே நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

விழாவில் கிருஷ்ணமூர்த்தி ஆதீனம், கத்தோலிக்க பேராயர் சின்னப்பா, இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம், புதுப்பேட்டை பள்ளிவாசல் இமாம் தாஜீதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Saturday, January 8, 2011

ஆளுநர் உரை: அரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அதிமுகவுக்கு 'குட்டு'!

சென்னை: சட்டசபையில் ஆளுநரின் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை என்றும், அதே நேரத்தில் ஆளுநரை உரையாற்றவிடாமல் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தடுத்திருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னர் உரை வழக்கம்போல் இருந்தாலும் பிரதான எதிர்க்கட்சியும், வேறு சில கட்சிகளும் வழக்கத்திற்கு மாறாக பேரவையில் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் நடவடிக்கை அளவிற்கு மிஞ்சியது என்பதில் சந்தேகமில்லை.

கவர்னர் உரையாற்ற முற்படும்போது அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அமைதியாக எழுந்து நின்று எதிர்ப்பு அறிக்கையைப் படித்துவிட்டு வெளிநடப்பு செய்வது என்பதுதான் இதுவரை மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், நேற்று இந்த மரபு மீறப்பட்டிருக்கிறது. கவர்னரை உரையாற்ற விடாமல் கூச்சல் குழப்பமிட்டு அவையில் தர்ணா போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயக வரம்பை மீறிய செயலாகும்.

ஆளுநர் உரையில் பெரிய அளவில் பரபரப்பு ஏதும் இல்லை. வழக்கமான அறிவிப்புகள் கொஞ்சம் கூடுதலாக உள்ளன.

குடிசைகளே இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகளே இல்லாத நகரங்கள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவை கனவாக முடிந்துவிடாமல் நனவாக வேண்டும்.

ஆனால், மக்களின் சமூக- பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேப் போன்று வேலைவாய்ப்பை பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கான பெரிய அளவிலான திட்டங்களும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண ஆரம்ப கட்ட முயற்சி கூட இதுவரை மேற்கொள்ளப்படாமல் இருப்பது, முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமையடையாமல் இருப்பது; தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது ஆகியவைப் பற்றி கவர்னர் உரையில் மேலெழுந்த வாரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பிட வேண்டுமே என்பதற்காக குறிப்பிடாமல் ஒரு காலக்கெடுவுடன் இவற்றிற்கெல்லாம் தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தவறியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதுதொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஓங்கி குரல் கொடுத்திருக்க வேண்டும். இது ஒன்றுதான் இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து காக்கவும் ஒரு உந்து சக்தியாக அமையும்.

மொத்தத்தில் இந்தாண்டு கவர்னர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியுரையாகும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்று கூறப்படும் நிலையில் ஆளுநர் உரையை 50:50 சதவீதம் ஆதரித்தும், விமர்சித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அதிமுகவை அவர் கண்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

Friday, January 7, 2011

பொங்கலுக்கு பிறகு தான் கூட்டணி குறித்து தெரிய வரும்-ராமதாஸ்

விழுப்புரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதியில் பாமக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இளைஞர்களையும், இளம் பெண்களையும் தான் பாமக அதிகமாக நம்பியிருக்கிறது. அதனால் தான் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மயிலம் சட்டசபை தொகுதியில் பாமகவுக்கு 269 கிளைகள் உள்ளன. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும்.

நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். ஆனால் இந்நாள் வரை ஒரு வன்னியர் கூட முதல்வராக முடியவில்லை.

வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது பிற கட்சியினர் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்தால் வாங்கிக் கொண்டு மாம்பழ சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.

வரும் தேர்தலில் பாமக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பொங்கலுக்குப் பிறகு தான் கூட்டணி குறித்து தெரிய வரும். பாமக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

Sunday, January 2, 2011

எங்களை மதிக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி-பாமக தீர்மானம்

திண்டிவனம்: பாமகவை மதித்து நடத்தும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானம் போட்டுள்ளது.

கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெற்ற பாமக

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் என்று நடுநிலையாளர்கள் பாராட்டினார்கள். இந்த சாதனையின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி பீனிக்ஸ் பறவையைப்போல அரசியலில் புத்துயிர் பெற்று புதிய உற்சாகத்துடன் இந்த சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது.

மதிக்கிற கட்சியுடன் கூட்டணி

கூட்டணியை பொறுத்தவரை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் முடிவே இறுதியானது. கட்சிக்கு எது நல்லது, எது வெற்றியை தேடி தரும் என்பதை அலசி ஆராய்ந்து நம்மை மதிக்கிற கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதற்கான முடிவை தக்க தருணத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.

இலங்கை போரின் போதும், போருக்கு பின்னரும் இலங்கை ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்களையும், அத்துமீறல்களையும் போர் குற்றங்களாக கருதி விசாரணை நடத்த இங்கிலாந்து உள்ளிட்ட சில மேலை நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் முன்வந்திருப்பதை பொதுக்குழு வரவேற்கிறது.

ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்

இந்த விசாரணையை விரைவாக நடத்தி முடித்து, ராஜபக்சே, அவரின் சகோதரர்கள், அவருக்கு கீழ் பணியாற்றிய ராணுவ தளபதிகள், போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொலை செய்த அக்கிரமத்திற்கு காரணமான ராணுவ அதிகாரிகள் ஆகியோரை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இலங்கையில் மத்திய அரசு தமிழக பகுதிகளில் நடத்துகின்ற விழாக்களில் இனிமேல் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்படும் என்ற ராஜபக்சே அரசின் அறிவிப்பை பா.ம.க. பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இது தமிழர்கள் மீது சிங்களத்தை கட்டாயமாக திணிப்பதற்கு ஒப்பாகும். இந்த கட்டாய சிங்கள திணிப்பை கைவிட இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அப்படி ஒப்புதல் பெறாமல் இன்னமும் தொடரும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதன் விளைவாக உயர்நிலை கல்வி முதல் தடவையாக ஊர்புறங்களை எட்டிப்பார்க்கிறது. இப்போது அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு என்றால் சமுதாயத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்த பிரிவினர் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிற மாற்றத்தை இழக்க நேரிடும்.

பொது நுழைவுத் தேர்வு கூடாது

எனவே அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்ற திட்டத்தை தமிழகம் எப்பாடு பட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் ஆபத்து வந்தபோது எப்படி தமிழகம் ஒன்றுபட்டு போராடி உரிமையை நிலைநாட்டியதோ, அதேபோல இப்போது தமிழகத்தின் உயிர்மூச்சு கொள்கைக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு என்ற திட்டத்தை ரத்து செய்ய ஒன்றுபட வேண்டும்.

இந்த ஆண்டு நெல்கொள்முதல் விலையை உயர்த்த அரசு முன்வர வேண்டும். விலைவாசி உயர்வினால் அல்லல்படுகிற ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், அதனோடு இணைந்த மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வீட்டுக்கடனை வட்டியோடு ரத்து செய்ய வேண்டும்.

நூல் தட்டுப்பாட்டிற்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதியே காரணம். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல நூல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு பருத்தி மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழ் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது ஆங்கிலம். அதனால்தான் ஆங்கில புத்தாண்டை கொண்டாட எனக்கு விருப்பமில்லை. எனவே புத்தாண்டு பிறந்த 2-வது நாள் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி, தமிழ் புத்தாண்டை நீங்கள் உங்களது உறவினர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்ட கட்சி பா.ம.க. தியாகம் செய்து, தழும்புள்ள நிர்வாகிகளாக நீங்கள் இல்லாமல் கட்சி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. அப்படி பாடுபட்டு, கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நாமும் 10 ஆண்டுகளாக டெல்லியில் நடந்த ஆட்சியில் பங்கு பெற்றோம்.

கடந்த ஆண்டு ஒவ்வொரு பொறுப்பாளர்களும் குறைந்த பட்சம் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறினேன். ஆனால் அதை நீங்கள் முழுமையாக செய்யவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பொறுப்பாளர்கள் அனைவரும் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என அமல்படுத்துவேன். பசுமையை உருவாக்கிய கட்சி என்று அனைத்து கட்சியினரும் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 100 இளைஞர்கள் ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நமது கட்சியின் கொள்கைகளை போல வேறு எந்த கட்சியிலும் கிடையாது என்றும், அப்படி இருந்தால் அந்த கட்சியோடு சேர்ந்துவிடுகிறேன் என 3 ஆண்டுகளாக சவால் விட்டு வருகிறேன். நம்முடைய கட்சியில் உயர்ந்த, உன்னதமான, காலத்திற்கு ஏற்ற, மக்களுக்காக, மக்களை சார்ந்த கொள்கைகள் உள்ளன.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க போராடி வருகிறோம். நம்முடைய பொறுப்பாளர்கள் யாரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகவில்லை என நம்புகிறேன். அப்படி மது பழக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் தற்போது மீண்டு விட்டார்கள். இந்தியாவில் உள்ள எந்த கட்சியாவது பொறுப்பாளர்கள் குடிக்க கூடாது என வற்புறுத்தி சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள்.

இந்த ஆண்டு இளைஞர்கள் ஆண்டு என டாக்டர் அன்புமணி கூறினார். அவர் அப்படி சொல்லும்போது நானும் இளைஞராக மாறிவிட்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் நமது இளைஞர்கள் பேட்ஜ் அணிந்து மற்ற கட்சியினர் வியக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். .

பா.ம.க. தேர்தலுக்கு, தேர்தல் அணி மாறுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல என ஏற்கனவே நான் கூறியிருந்தேன். எந்த கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறவில்லை.

அரசியலில் கூட்டணி குறித்து அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். முதல் இந்த காலத்து கலைஞர் வரை பல்வேறு காரணங்களை சொல்லியிருக்கிறார்கள். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். மக்களின் உணர்வுகள், எண்ணங்களை காலம் எப்படி மாற்றுகிறதோ? அதற்கு ஏற்ப கூட்டணி என்று கலைஞர் சொல்லியிருக்கிறார்.

மாறிவரும் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு எடுப்பதுதான் புத்திசாலிதனம். அதுதான் நல்ல முடிவும், அரசியலும் கூட என்று வெங்கட்ராமன் கூறியிருக்கிறார். நாமும் செய்வது நல்ல அரசியல்தான். இப்படி கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை அரசியலில் கூட்டணி மாறி, மாறி வருகின்றன.

இவையெல்லாம் தேர்தலின் ஆதாயத்தின் அடிப்படையில் கட்சிகள் சேர்கின்றன. தனித்தனியாக செயல்படுகிறவர்கள் ஒரு ஆண்டுகூட பிரிந்து இருக்க மாட்டார்கள். கூட்டணியில் இருந்தவர்கள் 6 மாதம் கூட கூட்டாக இருந்தது கிடையாது. அரசியலில் அணி மாறாதவர்கள் யார்? பா.ம.க.வை மட்டும் பழி சொல்வது ஏன்?

கூட்டணி கட்சியுடன் தென் மாவட்டங்களில் தொகுதி கேட்டு போட்டியிடுவோம். எந்த தொகுதியில் போட்டியிடுவது பற்றி சூசகமாக கேட்போம். பொங்கலுக்கு பிறகு டாக்டர் அன்புமணி மதுரைக்கு செல்வார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசுவார் என்றார் அவர்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: