Friday, April 29, 2011

பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

சென்னை, ஏப்.29- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயால் பொதுமக்களுக்கும் வேளாண் நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.


இந்நிலையில், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளே போதுமானது என்று கூறி மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.


விளைச்சலை அதிகரிப்பதற்காக பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு ஏற்பட அனுமதிக்க கூடாது.


வேளாண் விளைச்சலை அதிகரிக்க முயற்சி என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவது என்பது, இந்திய விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலாகவே இருக்கும்.


இந்தியாவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, April 23, 2011

ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவது உறுதி! - ராமதாஸ்

சென்னை: கணிப்புகளைப் புறம் தள்ளி திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது உறுதி. 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பார், என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆறாவது வது முறையாக தமிழக முதல்வ ர் பொறுப்பை கருணாநிதி ஏற்று, நல்லாட்சியைத் தொடர்வார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானதுதான்", என்றார்.

Wednesday, April 13, 2011

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் ஓட்டு பதிவு

திண்டிவனம் : திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில், நேற்று காலை 10.10 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வந்தார். அவரது மனைவி சரஸ்வதி, மகன் அன்புமணி, மருமகள் சவுமியா, மகள் ஸ்ரீகாந்தி, மருமகன் பரசுராமன், மற்றொரு மகள் கவிதா ஆகியோரும் வந்தனர்.


இவர்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர். பின் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி. கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி. இதற்கு மக்களும் தயாராக உள்ளனர்' என்றார்.


முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கூறுகையில், "தி.மு.க.,வின் சாதனைகள் தொடர மக்கள் விரும்புகின்றனர். எங்கள் கூட்டணி வெற்றிப் பெறும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார்' என்றார்.

Monday, April 11, 2011

சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை, ஏப். 11: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.

மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் தி.மு.க. தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்? தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் தி.மு.க. அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அ.தி.மு.க. அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.

தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sunday, April 10, 2011

விஜயகாந்திற்கு "அ, ஆ' தெரியாது : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திட்டக்குடி:""அரசியலில் விஜயகாந்திற்கு, "அ, ஆ' தெரியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

திட்டக்குடி தொகுதி வி.சி., வேட்பாளர் சிந்தனைச்செல்வனை ஆதரித்து, அவர் பேசியதாவது:திட்டக்குடி தொகுதியில் சிந்தனைச்செல்வன் போட்டியிடவில்லை. நான் நிற்கிறேன், தி.மு.க., தலைவர் கருணாநிதி நிற்கிறார் என நினைத்து நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். பா.ம.க., வும், வி.சி.,யும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.தமிழகத்தில், இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளேன். தொகுதியில் யாரைக் கேட்டாலும் கருணாநிதிக்குத் தான் ஓட்டு என்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டவர் அவர் தான் என்கின்றனர்.

கருணாநிதி உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க, அறிவை வளர்க்க, "லேப்-டாப்' தருகிறேன் என்று சொன்னால், ஜெயலலிதா, "வீட்டிற்கு 4 ஆடு, ஒரு மாடு தருகிறேன்' என்கிறார்.நாங்கள் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டுமென முதல்வரிடம் கேட்டதற்கு, அவர், "நானும் உங்கள் கொள்கை உடையவன் தான். படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன்' என்றார்.ஆனால், கொள்கையே இல்லாத நடிகர் கட்சித் தலைவர், மேடையில் பேசும்போது ஆடுகிறார், தள்ளாடுகிறார், தடுமாறுகிறார். தொண்டர்களை, "ஆப்' அடிக்கச் சொல்கிறார். கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் நல்ல தம்பிகள் தான்.

அவர்களை திருத்தி தி.மு.க.,- பா.ம.க., - வி.சி., கட்சிகளுக்கு கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன் என அடம் பிடித்தவர், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டார். நடிகர் சொல்கிறார் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றால், அண்ணனாக, அப்பாவாக நடிப்பேன் என்கிறார். நீ எதையாவது நடி, எங்காவது பம்பரம் விடு. உனக்கு அரசியலில் "அ, ஆ' தெரியாது.திட்டக்குடி சிந்தனைச்செல்வனை வெற்றி பெறச் செய்து பெரிய விழா கொண்டாடுங்கள் நான் வந்து பேசுகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ஆட்சியில் பங்கு தேவையில்லை : பா.ம.க., ராமதாஸ் திட்டவட்டம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து மரக்காணம், முருக்கேரி, கந்தாடு ஆகிய பகுதிகளில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது ராமதாஸ் பேசியதாவது :தி.மு.க.,வில் மற்ற கட்சிகளுக்கு முன், முதலில் கூட்டணி வைத்தது பா.ம.க., தான். எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம், கடைசிவரை ஆதரவு தருகின்றோம் என, கூறினேன். தொகுதிகள் பிரித்த ஒரு மணி நேரத்தில் திண்டிவனம் தொகுதியை தி.மு.க., தலைமை பா.ம.க.,விற்கு ஒதுக்கியது. அடுத்த முறை இந்த தொகுதி தி.மு.க.,வைச் சேர்ந்த ரவிகுமாருக்கு ஒதுக்கலாம்.இந்த தொகுதி வெற்றி பெறும் ஓட்டுகள் மரக்காணம் நகரத்தில் தான் உள்ளன. நீங்கள் பத்தாயிரம் ஓட்டுகளை பெற்றுத் தர வேண்டும். உங்கள் பகுதியில் எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒரு போன் செய்துவிட்டு, தைலாபுரத்தில் வந்து என்னிடம் கூறுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Saturday, April 9, 2011

மக்களுக்காக துரும்பை கூட கிள்ளி போடாதவர் ஜெ.,: ராமதாஸ்

திண்டிவனம்: தனது ஆட்சியில் ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



திண்டிவனம் நகரில் தீர்த்த குளம், முருங்கப்பாக்கம், ரோஷணை, கரிய கவுண்டர் வீதி, அவரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது : நான் திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளி வர ரோடில் இறங்கி போராடியுள்ளேன். மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த போது, அரசு மருத்துவமனைக்கு செய்த நன்மைகள் ஏராளம். நிச்சயம் கருணாநிதி தான் முதல்வராக வருவார்.அவர் மூலம் திண்டிவனத்திற்கு நீங்கள் விரும்புகின்றவற்றை செய்து தருவேன். சங்கர் நல்ல வேட்பாளர். இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ஜெ., மாணவர்களை ஆடு, மாடு மேய்க்க போகுமாறு கூறுகிறார். கருணாநிதி மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்து, படிக்க கூறுகிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர். அப்படிபட்ட அ.தி.மு.க.,விற்கு எப்படி ஓட்டு போட முடியும்? கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை ஜெ., காப்பியடித்துள்ளார். கருணாநிதி மக்கள் உண்ண, உடுக்க, உறங்க வழி செய்துள்ளார். வேட்பாளர் சங்கர் கடுமையாக உழைப்பவர். நானே எம்.எல்.ஏ.,வாக இருந்து அவரை இயக்குவேன். தி.மு.க., தலைமையிலான கூட்டணி சமய, சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்

Friday, April 8, 2011

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு: கருணாநிதி உறுதி

திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வைத்த வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது : தி.மு.க.,விற்கு ஆட்சி பொறுப்பை அளிப்பதற்காக இந்த கூட்டம் நடப்பதாக ராமதாஸ் கூறினார். நலிந்த, அடித்தட்டு மக்களை வாழ வைக்கும் இயக்கம் எந்த இயக்கமோ, அந்த இயக்கத்திற்கும், அதனுடன் தொடர்புடைய இயக்கங்களுக்கும் என்றென்றும் கடமை பட்டுள்ளோம் என, தலைவர்கள் கூறினர். எல்லோரும் ஓர் குலம் என்பது போல், ஒரே குரலாக உள்ளவர்கள் தான் இங்கு அமர்ந்துள்ளோம். என் குலம் இழிவாக, கேவலமாக நடந்தப்பட்ட இனம். அதே போல் தான் ராமதாஸ் இனமும், திருமாவளவன் இனமும், காதர் மொய்தீன் இனமும் நடத்தப்பட்டன. இனம், இனத்தோடு சேரும் என்பது போல் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரையும் இணைய வைத்து, கூட்டணி ஏற்படுத்தியதாக புகழாரம் சூட்டப்பட்டது. இதை நான் ஒப்புக் கொள்கிறேன், இந்த இரு சக்திகளும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை பொருந்தியவை. எனக்கு அம்பேத்கருடன் நேரடி தொடர்பில்லை. ஆனால், அம்பேத்கரின் கொள்கைகளை அரவணைத்துக் கொண்டவன் நான்.அம்பேத்கர் மீது எனக்கு காதல்.

மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கர் பல்கலை கழகம் துவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பத்து ஆண்டுகள் ஆன பின்பும் ஏற்படுத்தவில்லை. அதை கண்டித்து தி.மு.க., கிளர்ச்சி நடத்தும் என, அறிக்கை விட்டேன். உடனே நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய மராட்டிய கவர்னர் அலெக்சாண்டர் எனக்கு கடிதம் எழுதினார். மும்பையில் அம்பேத்கர் பல்கலைக் கழகம் அமைய நானும் ஒரு காரணம். நான் முதல்வராக இருந்த போது, முதல்வருக்காக கிரீன்வேஸ் ரோடில் கட்டப்பட்ட பங்களாவை, நான் அம்பேத்கர் பல்கலை கழக அலுவலகமாக அறிவித்தேன்.

ராமதாஸ், திருமாவளவன் உறவு தொடர்ந்திருந்தால், தமிழகத்தில் எத்தனையோ சமத்துவம் மலர்ந்திருக்கும். இனியும் இவர்கள் இணைப்பு தொடர வேண்டும். இதே போல் முஸ்லிம் லீக்கும் தொடர வேண்டும். இவர்கள், எங்களை அறிந்தவர்கள். நாங்கள், அவர்களை அறிந்தவர்கள். இனி மேல் எங்களுக்குள் சிக்கல் வரக்கூடாது. இனியும் சிக்கல் வராமலிருக்க, பொதுமக்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றாக இருந்தீர்களே, உங்களுக்குள் என்ன கேடு வந்தது என நீங்கள் (பொதுமக்கள்) கேட்க வேண்டும். நாங்கள் ஓரணியில் இருந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். ராமதாஸ் ஒரு கோரிக்கை வைத்தார். அதிர்ச்சியடையும் கோரிக்கையாக இருக்கும் என, பயந்தேன். அவர் இடஒதுக்கீடு கோரிக்கையை தான் கேட்டார். இது எங்களுக்குள் சகஜமானதாகும். அவர் கேட்டு நான் மறுத்ததில்லை. ஆட்சியை நடத்த போகிறவன் என்பதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். இடஒதுக்கீடு கோரிக்கையை நாங்கள் கைவிட வில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை நிச்சயமாக நிறைவேற்றி தருவேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Wednesday, April 6, 2011

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

சேலம்: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த தேர்தலில் திமுக அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். மக்கள் மனதில் அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களின் மகத்தான ஆதரவு ஒரு புறம், கூட்டணி கட்சிகளின் பலம் மற்றொரு புறம் என இரண்டும் சேர்ந்து திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரும்.

திமுக கூட்டணியில், பா.ம.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என வாக்கு வங்கி கொண்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் ஒரே சீரான வாக்கு வங்கி இல்லை. அந்த கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவம். அந்தக் கூட்டணியில் உள்ள விஜயகாந்த் கட்சி, ஆரம்பத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்ற ரீதியில் தன்னை முன்னிலைப்படுத்தி 2 தேர்தலை சந்தித்தது. அதனால் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

ஆனால் விஜயகாந்த் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அவர் பத்தோடு பதினொன்றாகிவிட்டார். எனவே இந்தத் தேர்தலில் அவருடைய கட்சி வாக்கு வங்கி குறைந்து விடும். அவருடைய கட்சி தொண்டர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மிகவும் பாரபட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் 100 சதவீதம் ஒரு தலைப்பட்சமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை மாநில அரசின் நிர்வாகத்தையே தேர்தல் ஆணையம் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாகும்.

மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மத்திய மந்திரி மீது பொய் வழக்கு போடச் சொல்லி மிரட்டுகிறார் என்று தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி புகார் தெரிவித்து உள்ளார். தேர்தல் ஆணையத்துக்கும் புகாரை அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் தெரிவித்த தேர்தல் அதிகாரி சுகுமாறன் மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள். 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சந்தித்த கொடுமைகள் மாறாத வடுக்களாக வாக்காளர்கள் மனதில் பதிந்துள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை கொடுக்க தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக சில ஊடகங்கள்தான் பொய்யை பரப்பி வருகின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு திமுக மீது எந்த வெறுப்பும் இல்லை.

தமிழ் பெண்களின் கற்பை பற்றி இழிவு படுத்தி கூறிய நடிகை குஷ்பு, திமுக-பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது வேறு. அந்தப் பிரச்சனைபற்றி இப்போதும் வழக்கு நடந்து வருகிறது. மேலும் பிரச்சனை நடந்த நேரத்தில், தான் அவ்வாறு கூறவில்லை என்று குஷ்பு மறுத்தும் உள்ளார் என்றார்.

Tuesday, April 5, 2011

எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும்தகுதியற்றவர் ஜெயலலிதா: ராமதாஸ்

சென்னை:சென்னை தீவுத்திடலில் நடந்த, ஐ.மு.கூட்டணி பிரசார கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முற்போக்கு கூட்டணி; எதிரணி கூட்டணி பிற்போக்கு கூட்டணியாக இருக்கிறது. கடந்த 2001-06 ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதாகவும், காஸ் சிலிண்டர் வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்; எதையும் செய்யவில்லை. 2006-11ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் சொன்னதைச் செய்தார்.
பொதுவாக மத்தியில் உள்ள அரசுக்கும், மாநில அரசுக்கும் நல்லிணக்கம் தேவை. நரசிம்மராவ் இந்திய பிரதமராக இருந்த போது, தலைமுறை இடைவெளி இருப்பதாக அந்த கூட்டணியில் இருந்து கொண்டே ஜெ., விமர்சித்தார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு செலக்ட்டிவ் அம்னீஷியா இருப்பதாகவும், வாஜ்பாய் செயலற்ற பிரதமர் என்றும் விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜெ., மன்னிப்பு கேட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை பலகீனமான கால்களை பெற்ற பிரதமர் என்றும் பேசினார். தி.மு.க., ஆட்சி தொடர்ந்து நடந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும்; அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வீழ்ச்சி அடையும்.தேர்தல் கமிஷன் ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறது என்பதை நாங்கள் தெரிவித்து வருகிறோம். மதுரை கலெக்டர் சகாயத்தின் அத்துமீறல்கள் ஏராளம். டில்லி தேர்தல் கமிஷனுக்கும், இங்கிருக்கும் சிலருக்கும், "ஹாட் லைன் ' இணைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும் தகுதியற்றவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக 18 பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்துள்ளனர். அதில், ஒரு பங்கைக் கூட அ.தி.மு.க., வினர் செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகம் இருண்டு விட்டதாக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. வாக்காளர்கள் புத்திசாலிகள்; ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்

தி.மு.க. அணிக்கு ஆதரவு அலை: ராமதாஸ்

சென்னை, ஏப். 5: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு அலை வீசத் தொடங்கியுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை, பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர். தனபாலனை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் செவ்வாய்க்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசியதாவது: தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கும் நேரத்தில், இது ஒரு சமூக நீதி போராட்டத்துக்கான அணி என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். அதை உண்மையாக்கும் விதத்தில், உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஓர் அணியை அவர் உருவாக்கியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் மிகச் சாதாரண மக்களால்கூட பாராட்டப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலத்தில், மக்களுக்கு செய்த சாதனைகள் என குறிப்பிட்டு கூற எதுவுமே இல்லை. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி செலவில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குள சாவுகள் ஆகியவை மட்டும் எப்போதும் மறக்க முடியாத வகையில், மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டன.

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் தி.மு.க. அணிக்கு ஆதரவாக அலை வீசத் தொடங்கியுள்ளது. மிகப் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றி பெற்று, ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி என்றார் ராமதாஸ்.

கூட்டத்தில் வேட்பாளர் என்.ஆர். தனபாலன், தொ.மு.ச. பேரவைத் தலைவர் செ. குப்புசாமி, பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: