Tuesday, June 28, 2011

5 சீட், 8 சீட்டுக்குப் பறப்பதை விட்டு விட்டு கான்ஷிராம் போல வளர வேண்டு-திருமா.வுக்கு ராமதாஸ் அறிவுரை

சென்னை: அம்பேத்கர் சொன்னதை நாம் மறந்து விட்டோம். 5 சீட், 8 சீட்டுக்காக நாம் ஏன் அலைய வேண்டும். உங்களோடு நானும் வருகிறேன். இனிமேல் சீட்டுக்காக அலைவதை விட்டொழிப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

பெரியார் திடலில் நடந்த விழாவில் ராதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது, திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு பெரியார் ஒளி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீனுக்கு காயிதே மில்லத் பிறை விருது, எழுத்தாளர் சோலைக்கு காமராஜர் கதிர், மு.சுந்தரராஜனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தணிகை செல்வனுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்பட்டது.

விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

இந்த ஆட்சியில், கிரைண்டர், மிக்சி முதல் ஆடு, மாடுகள் வரை எல்லாம் இலவசம் வழங்கப்படுகிறது. தலித் மக்கள் ஒன்றுபட்டால் கல்வி புரட்சி ஏற்படும். அம்பானி குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற தரமான கல்வி தலித் இளைஞர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

எங்கே தமிழ் என்றால் எங்கேயும் தமிழ் இல்லை. இந்த நிலை மாற உங்களால் முடியும். விடுதலை சிறுத்தைகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களோடு ஒன்று சேர்ந்து போராடுவோம். நானும் உங்களோடு ஒருவனாக சேருகிறேன்.

உத்தரப் பிரதேசத்தில் கான்ஷிராம், மாயாவதி போல இங்கு திருமாவளவனால் செயல்பட முடியாதா?. 5 சீட்டுக்கும், 8 சீட்டுக்கும் ஏன் ஆலாய் பறக்க வேண்டும். சமூக மாற்றத்தை ஏன் நாம் கொண்டு வரமுடியாது? ஆகவே நாம் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்றார்.

திருமாவளவன் பேசுகையில்,

ஆடு, மாடுகள் வழங்கும் இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஆடு, மாடு மேய்க்க வைக்கிறார்கள். இலவச திட்டங்களுக்கு பதிலாக இலவச கல்வியை வழங்குங்கள் என்றும், சமச்சீர் கல்வி திட்டத்தை கொடுங்கள் என்றார்

Tuesday, June 21, 2011

சிங்கள தாக்குதலிலிருந்து தப்பிக்க மீனவர்களுக்கு துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு-ராமதாஸ்

சென்னை: தமிழக மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்குவதிலிருந்து தடுத்துக் காத்திடும் வகையில், தமிழக மீனவர்களுடன் ஆயுதம் ஏந்திய போலீஸ் குழுவையும் பாதுகாப்புக்கு உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வங்கக் கடலில் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரை அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டம் நடத்தியும், கோரிக்கைகள் வைத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

2011ம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் மொத்தம் 6 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை இலங்கை படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களை அவர்கள் விரட்டி அடித்திருக்கின்றனர். தமிழக மீனவர்களைத் தாக்குவது, சிறை பிடிப்பது என்பது போன்ற இலங்கைப் படையினரின் கொடுமைகள் முடிவின்றி தொடர்கின்றன.

கடந்த 4 மாதங்களில் 6 தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் படுகொலை செய்தபோதிலும் அதற்காக இலங்கை மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதிலும் விளக்கம் கேட்பதுடன் இந்திய அரசு அதன் கடமையை முடித்துக்கொள்வதால், தமிழக மீனவர்களை என்ன செய்தாலும் இந்தியா கேட்காது என்ற துணிச்சல் இலங்கைப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறாத வரை தமிழக மீனவர்களின் துயரமும் மாறாது.

எனவே இலங்கைப் படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும் மீட்க தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கினாலோ அல்லது கைது செய்தாலோ கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் படகுகளில் துப்பாக்கி ஏந்திய தமிழக காவல்துறையினரை பாதுகாப்புக்கு அனுப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

Saturday, June 18, 2011

திருமதி ஓய்ஜிபி, டிஏவி ஜெயதேவ் கல்வியாளர்களா? - ராமதாஸ் கேள்வி

சென்னை: சென்னையிலேயே அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை நடத்தும் திருமதி ஒய்ஜிபி மற்றும் டிஏவி ஜெயதேவ் ஆகியோர் கல்வியாளர்களா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வி பற்றி முடிவெடுப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி.பார்த்திசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உச்சநீதிமன்றம், 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இருவரும் இடம்பெறவேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான்.

ஆனால், குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் 2 பள்ளிகளின் முதலாளிகள். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் தரும் பணக்காரர்களுக்காக மட்டுமே பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும்பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இருக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் ஒரு சார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலைப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.

Thursday, June 16, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி 20ம் தேதி பாமக முழக்கப் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி வருகிற 20ம் தேதி பாமக சார்பில் தமிழகம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்போது, அதை மற்ற வகுப்புகளுக்கும் நீடிப்பதற்கு தடை எதுவும் இருக்க முடியாது.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போதைய கல்வியாண்டில் வேறு பாடத்திட்டத்தில் படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும்.

எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் மூலமாக இக்கருத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை நினைவரங்கம் அருகே எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Wednesday, June 8, 2011

குடிக்க கூடாது என சொல்வது நான் மட்டும்தான்: ராமதாஸ்

திருக்கோவிலூர் : ""ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என மூன்று விதமான படிப்புகள் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.



விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது:நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.



ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான்.சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும். இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Tuesday, June 7, 2011

சமச்சீர்க் கல்வியை தமிழக அரசு கைவிடக் கூடாது-ராமதாஸ்

சென்னை: சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்களும் அறிஞர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், சமச்சீர்க் கல்வி முறையை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த முன்வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்காக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள முன்வடிவில், முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படாதது உட்பட சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிக்கிறது.

இதன்மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர்க் கல்வி திட்டம் முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டது, பா.ம.க. சார்பில் பேசிய சட்டப்பரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி சமச்சீர்க் கல்விக்கான சட்ட முன்வடிவில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், முத்துக்குமரன் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியதை சுட்டிக்காட்டி, இது தொடர்பான பா.ம.க.வின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று வினா எழுப்பியிருக்கிறார்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக பா.ம.க.வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகத்தான் உள்ளது. தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை போல, சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சில குறைகள் இருப்பதை பா.ம.க. எப்பாதும் மறுக்கவில்லை. ஆனால், அந்த குறைகளைக் காரணம் காட்டி சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நிறுத்திவிடக்கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

சமச்சீர்க் கல்வித் திட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்றுதான் நான் வலியுறுத்தினேன்.

சமச்சீர்க் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சமச்சீர்க் கல்வித் திட்டம் மீண்டும் எப்போது செயல்படுத்தபடும் என்று அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துபார்க்கும்போது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட அரசு திட்டமிட்டிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். செயல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: