Friday, August 29, 2014

மனித நேயமின்றி மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினர்: அன்புமணி இராமதாஸ் கண்டனம்

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி 40க்கும் மேற்பட்ட வீடுகள் இராட்சத எந்திரங்களின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. காவல்துறையினரின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

குள்ளவீரன்பட்டியில் வருவாய்த் துறைக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அந்த நிலத்தில் அப்பகுதிகளைச் சேர்ந்த வீடில்லாத மக்கள் வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். அங்கு 56 ஏக்கர் பரப்பளவில் காவல்துறை பயிற்சிப் பள்ளி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான நிலம் கடந்த 06.06.2014 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த நிலத்தில் ஏற்கனவே பலர் வீடுகளைக் கட்டியிருந்தார்கள். காவல்துறைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் சிலர் வீடுகளை கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. காவலர் பயிற்சிப் பள்ளி கட்டுவதற்காக இந்த வீடுகளை இடிக்க காவல்துறை முயன்றதை எதிர்த்து அங்குள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதை விசாரித்த நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்திருந்தால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கூடாது எனத் தீர்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இல்லை என்றும், அந்த நிலம் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட பிறகு தான் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் கூறி அங்கிருந்த வீடுகளை காவல்துறையினர் இடித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை விட, அதை எதிர்த்து போராடிய அப்பாவி மக்களை ஒடுக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறை மிகவும் மோசமானதாகும். வீடுகளை இடிப்பதை தடுப்பதற்காக, வீட்டுக்கதவை உட்புறமாக மூடிக் கொண்டு உள்ளே இருந்த மக்களை கதவுகளை உடைத்து வெளியேற்றிய காவலர்கள், கொடூரமாக தாக்கியுள்ளனர்.  கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட இந்தத் தாக்குதலுக்கு தப்பவில்லை. தாக்குதலில் காயமடைந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து கொடுமைப் படுத்தியிருக்கின்றனர்.

காவல்துறையினர் நினைத்திருந்தால் இந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், மனித நேயமின்றி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இதனால், 40க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் குடியிருப்பதற்கு கூட இடமின்றி வெட்டவெளியில் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு மனித நேயத்துடன் செயல்பட்டு ஏழை மக்களின் இந்தத் துயரத்திற்கு முடிவு கட்ட முன்வர வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியரும், காவல் அதிகாரிகளும் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கி, வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கும்படி தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, August 26, 2014

பழைய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து புதிய பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் தான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் வரமாக இருந்த இத்திட்டம், அதில் செய்யப்பட்ட திருத்தங்களால் சாபமாக மாறியுள்ளது.

நாடு முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி ஓர்  ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.15,500 வரை இழப்பீடு பெற முடியும். இதற்காக ரூ. 160 மட்டும் பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இதனால், இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போனால், அதற்காக அதிகபட்சமாக ரூ.2450 மட்டுமே இழப்பீடாக பெற முடியும். 

அதேநேரத்தில் புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி ஓர் ஏக்கருக்கான பிரிமியமாக ரூ.350 செலுத்த வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவையானால், அதற்காக கூடுதல் பிரிமியம் செலுத்தவேண்டும். முந்தைய அளவுக்கு இழப்பீடு பெற வேண்டுமானால், முன்பு செலுத்தியதைவிட சுமார் 12 மடங்கு அதிகமாக பிரீமியம் செலுத்த வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இவ்வளவு பிரிமியம் செலுத்தினால் கூட உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்காக மத்திய, மாநில அரசுகளே செலுத்துகின்றன என்ற போதிலும், இந்த சலுகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலான விவசாயிகள் தங்களின் சொந்தப் பணத்தில் பிரிமியம் செலுத்தும் நிலையில், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் நெற்பயிர் பாதிக்கப்பட்டால் அதற்காக ஏக்கருக்கு ரூ2450 மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்பது நியாயமற்றதாகும். இது விவசாயிகள் செலவழிக்கும் தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகும். இதனால், விவசாயிகள் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை விட்டு விலகும் நிலை உருவாகும். பழைய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 2012&13ஆம் ஆண்டில்  10 லட்சம் பேர் சேர்ந்திருந்த நிலையில், புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க  அளவில் விவசாயிகள் சேரவில்லை என்பதிலிருந்தே  புதிய திட்டத்திற்கு உள்ள எதிர்ப்பை உணரலாம்.

மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றவாறு உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். இதற்காக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். மாறாக வேளாண்மையிலிருந்தே விவசாயிகளை விரட்டியடிக்கும் வகையில் செயல்படக்கூடாது. விவசாயிகள் வேளாண் தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாற வேண்டும் என 2012ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். அந்த மன்மோகன்சிங் அரசு தயாரித்த புதிய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அப்படியே செயல்படுத்துவதுவது தேவையா? என்பதை பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும்.

இன்னொருபுறம் வறுமையில் வாடும் உழவர்களுக்கு பயிர்க் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன. இதனால், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு பெருமளவில் குறையும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. 

எனவே, புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து விட்டு ஏற்கனவே இருந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவும், கடந்த காலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் பழைய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு புதிய பயிர்க் கடன்களை வழங்கவும் மத்திய & மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, August 24, 2014

திருப்போரூர்: 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக- அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழகத்தில் ஆளும் கட்சிகளை எதிர்த்து துணிவோடு கேள்வி கேட்கும் ஒரே நபரும் நான் தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கலந்து கொண்டார்.
திமுக - அதிமுக ஆட்சி... மதுவை ஒழிக்க எந்த மகன் வரப்போகிறான் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க- அ.தி.மு.க. மாறி மாறி மதுக்கடைகளை அதிகம் திறந்து வருமானத்தை பெருக்கியுள்ளது.
முதல் கையெழுத்து... நான் முதலமைச்சராக வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதுதான். தேர்தல் நேரத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சாராயத்தை ஒழிப்போம்... நமது கட்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று சாராயத்தை பா.ம.க. தான் ஒழிக்கும் என பெண்களிடம் சத்தியம் செய்யுங்கள். குடிகாரன் கூட மதுவை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறான். மதுக்கடைகள் இருப்பதால் தான் குடிப்பதாக தெரிவிக்கிறான்
தமிழகத்தில் லஞ்சம் பெருகிவிட்டது. காற்றாலையை நம்பிதான் இந்த அரசாங்கம் இயங்கி வருகிறது. இந்த ஆட்சியில் புதியதாக ஒரு யூனிட் கூட மின்உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழகத்தில் துணிவோடு கேள்விகேட்கக்கூடிய ஆள் நான் மட்டுமே. மற்றவர்கள் பயப்படுகிறார்கள். எத்தனை அவதூறு வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பேன்.
இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. இருகட்சிகளையும் ஒழிக்க காங்., பாஜக, கம்யூ. உள்ளிட்ட எந்த கட்சியாலும் முடியாது. இரு கட்சிகளையும் ஒழிக்கின்ற அவதாரத்தை பா.ம.க. எடுத்துள்ளது' 

Saturday, August 23, 2014

மின்வெட்டு விவகாரத்தில் தன்னைத் தானே தமிழக அரசு ஏமாற்றிக் கொள்கிறது : ராமதாஸ்

x
 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததையடுத்து சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் நாள் தோறும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மின்நிலைமை குறித்து கடந்த மே மாதம் 27 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றியதில் பெருமிதம் அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலம் என்று 3 ஆண்டுகள் சிரமப்பட்டு ஜெயலலிதா உருவாக்கி வைத்த மாயை மூன்றே மாதங்களில் கலைந்து போயிருக்கிறது. தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்ற உண்மையும் இப்போது அம்பலமாகியிருக்கிறது.
மின்வெட்டு நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த சில நாட்களிலேயே பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டது. இதை நான் சுட்டிக்காட்டியபோது, முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாதித்தார். ஆனால், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதைப் போல இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. கடந்த 18ஆம் தேதி 360 மெகாவாட் அளவுக்கும், 19ஆம் தேதி 340 மெகாவாட் அளவுக்கும் 20ஆம் தேதி 940 மெகாவாட் அளவுக்கும், 21ஆம் தேதி 1190 மெகாவாட் அளவுக்கும், 22 ஆம் தேதி 966 மெகாவாட் அளவுக்கும் மின்வெட்டு செய்யப்பட்டதாக தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கிட்டத்தட்ட அதே அளவுக்கு மின் தேவையும் உயர்ந்திருப்பதால் தமிழகத்தின் மின்பற்றாக்குறை குறையாமல் அதே அளவிலேயே இருந்து வருகிறது. இந்த இடைவெளியை குறைத்து மின்வெட்டை போக்க வேண்டுமானால், புதிய அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தான் ஒரே வழியாகும். ஆனால், அதை செய்யாமல், ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் கிடைக்கும்  காற்றாலை மின்சாரத்தை நம்பி தமிழகம் மின்வெட்டே இல்லாத மாநிலம் என்பது போன்ற பொய்யானத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் அரசு தீவிரம் காட்டுகிறது. இதன்மூலம் மின்வெட்டு விவகாரத்தில் மக்களை மட்டுமின்றி தன்னைத் தானே தமிழக அரசு ஏமாற்றிக் கொள்கிறது என்பது தான் உண்மை.
 மாநிலத்தின் மின்நிலைமை கவலையளிக்கும் வகையில் இருக்கும்போதிலும் அதை சரி செய்ய வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும். மின்வெட்டு தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்திருந்த அமைச்சர் விஸ்வநாதன், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், 26.07.2013 அன்று ஒப்பந்தப் புள்ளியும், 05.02.2014 அன்று விலைப்புள்ளியும் பிரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு அதன்பின் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை பணி ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கும் ஒப்பந்தப்புள்ளி மற்றும் விலைப்புள்ளி பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் ஒப்பந்தம் வழங்கப்பட வில்லை.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் 1000 மெகாவாட் மின்திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் மின்னுற்பத்தியை தொடங்கும் என  அமைச்சர் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் முடிவடையப்போகும் நிலையில், அங்கு மின்னுற்பத்தி தொடங்குவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. மின்வெட்டை சமாளிக்க ஆகஸ்ட் மாதத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தாலும் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக வாங்கப்படவில்லை. மின்வெட்டை சமாளிப்பதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் ஆகும்.
மின்னுற்பத்தியை அதிகரித்து, மின்வெட்டை போக்குவதற்கு பதிலாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் தமிழக அரசின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதாக கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஜெயலலிதா அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இனியாவது மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடாமல், உண்மையான அக்கறையுடன் மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, August 19, 2014

மக்கள் நலப் பணியாளர்களை மதுவிலக்கு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மக்கள் நல பணியாளர் பணி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   அனைத்து பணியாளர்களுக்கும் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வேலை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மதுவிலக்கு குறித்த அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள நீதிபதிகள், இப்பணியாளர்களை மது எதிர்ப்பு பரப்புரைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் ஆணையிட்டுள்ளனர். ஒரே ஆணையில் இரு நண்மைகளை செய்துள்ள இத்தீர்ப்பு பாராட்டத்தக்கது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு இந்த ஆட்சியில் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அ.தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி, பணி நீக்கப்பட்ட  மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க ஆணையிட்டார். ஆனால், இந்த தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதன்மீது தீர்ப்பளித்த 2 நீதிபதிகள் அமர்வு மக்கள் நல பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை இழப்பீடாக வழங்கிவிட்டு அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று ஆணையிட்டது. இதற்கு எதிரான தொழிலாளர்களின் மேல்முறையீட்டை  விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன்  இவ்வழக்கை மறு விசாரணை செய்யும்படி ஆணையிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்பதற்காக அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், அவர்களை ஆக்கபூர்வமான வழியில் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் விளக்கியுள்ளனர்.

மக்களின் நுண்ணூட்ட சத்து அளவு, வாழ்க்கைத்தரம், பொது சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது தான் மக்கள் நல அரசின் பணியாக இருக்க வேண்டும்; மருத்துவ பயன்பாட்டை தவிர்த்து முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால்,  தமிழக அரசோ ஆண்டு தோறும் மதுவிற்பனையை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.21,641 கோடி வருவாய் கிடைத்துள்ள போதிலும், கூடுதலாக ரூ.2000 கோடி லாபம் ஈட்டும் நோக்குடன் வரி மற்றும் விலையை உயர்த்த சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. இவ்வளவு  வருவாய் கிடைக்கும் போதிலும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்ய வெறும் ரூ.1 கோடியை  மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமானதல்ல என்பதால் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தி மது எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபடுத்தலாம்’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது குறித்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்யாமல் மது விற்பனையை அதிகரித்து மக்களை கெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவது குறித்தும் நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது அவர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்த சமூக அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் அனைத்து சீரழிவுகளுக்கும் அடிப்படை ஆகும்.

இதை உணர்ந்து, மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் பணி நீக்கப்பட்ட அனைத்து மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி, அவர்களை மது எதிர்ப்பு பரப்புரையாளர்களாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கவலையை உணர்ந்து  தமிழ்நாட்டில் மதுவை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா: ராமதாஸ் கண்டனம்



சென்னை தேனாம்பேட்டையில் பாமகவின் தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 19.08.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

இந்த ஆட்சியில் மின்சாரத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தைப் போல அரசே தண்ணீரை விற்கும் அவலம் வேறு எங்கும் இல்லை. 2023ல் ஒளிமயமான எதிர்காலம் என தமிழக மக்களை அதிமுக ஏமாற்றி வருகிறது.

அரசின் விளம்பரத்தை கருவியாக பயன்படுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அதிமுக அரசு பறித்து வருகிறது. பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது. தொலைக்காட்சி சுதந்திரம் கிடையாது. விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவா பத்திரிக்கை சுதந்திரம். இங்கு நடப்பது ஹிட்லர் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி. இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா. இவ்வாறு பேசினார்.

Sunday, August 17, 2014

2016 தேர்தல் - அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாமக முடிவு!

விழுப்புரம்: 2016 சட்டசபைத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவிக்க பாமக தீர்மானித்துள்ளது.இதுதொடர்பன முடிவை, அக்கட்சியினர், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் வீட்டில் கூடி ஆலோசித்து எடுத்துள்ளனர்.பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தைலாலபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்தார்
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அமர்வில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. கூட்டங்களில் கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை 2016ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கலாமா என்று நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதம்
இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், நம்முடைய கட்சியின் கொள்கையான மது ஒழிப்பு, இலவச கல்வி உள்ளிட்ட கொள்கைகளை மக்களிடம் கூறி அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த வேண்டும். 2
வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் நம் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி. இதற்காக உங்களுடைய சம்மதத்துடன் நம் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளோம்.

இம்மாத இறுதியில் நம் கட்சியின் பொது குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. அதில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படுவார் என்று ராமதாஸ்
 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: