Friday, October 31, 2014

புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்து மதுவை ஆறாக ஓட வகை செய்ய அரசே முயல்வது நல்லதல்ல : ராமதாஸ்

புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்து  மதுவை ஆறாக ஓட வகை செய்ய  அரசே முயல்வது நல்லதல்ல : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 6800 மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 54 கோடி லிட்டர் மது வகைகளையும், 25 கோடி லிட்டர் பீர் வகைகளையும் அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தின் மது தாகத்தைப் பூர்த்தி செய்ய 11 மது ஆலைகளும், 7 பீர் உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6 மது ஆலைகளும், 4 பீர் ஆலைகளும் கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்டவை ஆகும்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து இந்த ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுவின் அளவு மாறுபடும்.

மது தயாரிப்பு ஆலைகளில் சென்னை வளசரவாக்கத்தை தலைமை அலுவலகமாகக் கொண்ட மோகன் புரூவரிஸ் நிறுவனத்தின் மது ஆலையும், பீர் ஆலையும் நிதி பிரச்சினைகள் காரணமாக அண்மையில் மூடப்பட்டன. அதேபோல், கோவை மாவட்டம் மாவுத்தம்பதியில் செயல்பட்டு வந்த இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் மற்றும் ஒயின் நிறுவனம் என்ற பெயரிலான மது ஆலையும் இதே காரணத்திற்காக சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன.

இந்த இரு நிறுவனங்களிடமும் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுக்கு 9 கோடி லிட்டர் மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதுதவிர குறிப்பிடத்தக்க அளவில் பீர் வகைகளும் மோகன் பீர் ஆலையிடமிருந்து அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இரு மது ஆலைகளும், ஒரு பீர் ஆலையும் மூடப்பட்டதால், அவை தயாரித்து வந்த 31 மது வகைகளும், 5 பீர் வகைகளும் இப்போது அரசு மதுக்கடைகளில் கிடைப்பதில்லை. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்ட போதும், காவிரி நீரை வழங்க கர்நாடகா மறுத்ததால் தமிழக அரசு, இப்போது இந்த மதுவகைகள் கிடைக்காததால் கவலைப்பட்டு கலங்கி நிற்கிறது.

இதனால், மது விற்பனை எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதே அளவிலான மது மற்றும் பீர் வகைகளை கூடுதலாக தயாரித்து வழங்கும்படி மற்ற மது ஆலைகளுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த மது வகைகளை நிரந்தரமாக தயாரித்துத் தருவதற்கு வசதியாக தமிழகத்தில் புதிய மது ஆலைகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக சிலரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கேரளத்தைப் பின்பற்றியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பல்வேறு தருணங்களில் அளித்த தீர்ப்பை மதித்தும் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளித்து மதுவை ஆறாக ஓட வகை செய்ய அரசே முயல்வது நல்லது அல்ல.

பொருளாதாரப் பிரச்சினைகளால் மது ஆலைகள் மூடப்பட்டிருந்தால், அதை தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு மது ஆலைகள் மூடப்பட்டதால் 17 விழுக்காடு மது உற்பத்தியும், ஒரு பீர் ஆலை மூடப்பட்டதால் 10 சதவீதம் பீர் உற்பத்தியும் குறைந்துள்ள நிலையில் அதற்கு இணையாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்திருந்தால் அது பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருந்திருக்கும்.

அதைவிடுத்து, அதிக மதுவை உற்பத்தி செய்யும் வகையில் புதிய மது ஆலைகளைத் திறக்க அரசு அனுமதித்தால், அது தமிழகத்தை மிக வேகமாக அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எனவே, மக்களின் நலனையும், தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.’’

Saturday, October 25, 2014

மக்களை பாதிக்கும் வரலாறு காணாத பால் விலை உயர்வை ரத்து செய்க! : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப் பட்டிருக்கின்றன. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படும் என்று தெளிவற்ற அறிவிப்பை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

பால் கொள்முதல் விலையை எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 9 ரூபாயும், பசும்பாலுக்கு 7 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று நானும் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். நீண்ட தாமதத்திற்குப் பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ள தமிழக அரசு, உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாமல் அரைகுறையாக நிறைவேற்றியிருக்கிறது. மேலும், ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் பால் விற்பனை விலையையும் உயர்த்தியிருக்கிறது.

பால் விற்பனை விலை குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெளிவாக வெளியிடவில்லை. சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படும் என்று பொத்தாம் பொதுவாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படியானால், தரப்படுத்தப்பட்ட பால், ஃபுல்கிரீம் பால் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாது என்று அர்த்தமா? அல்லது அனைத்து வகையான பாலின் விற்பனை விலையும் சராசரியாக லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படும் என்று அர்த்தமா? என்பது தெரியவில்லை. சமன்படுத்தப்பட்ட பால் அட்டை விலை மட்டும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படும் என்பதை மட்டும் அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, மற்ற வகை பாலின் அட்டை விலையும், அனைத்து வகை பாலின் விற்பனை விலையு ம் இன்னும் கூடுதலாக உயர்த்தப் பட்டிருக்குமோ? என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. பால் விற்பனை விலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெளிப்படையாக இல்லை என்பதையே இந்த அறிவிப்புக் காட்டுகிறது.

ஒருவேளை அனைத்து வகையான பாலின் விலையும் சராசரியாக லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது தமிழக மக்களால் தாங்க முடியாத சுமையாகும். இந்த விலை உயர்வுக்குப் பிறகு சமன்படுத்தப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.37 ஆகவும், தரப்படுத்தப் பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.41 ஆகவும், ஃபுல்கிரீம் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 45 ஆகவும் இருக்கும். இவை தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான தனியார் பால் வகைகளின் விலையை விட அதிகமாகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 19.11.2011 அன்று அனைத்து வகை பால்களின் விலை லிட்டருக்கு ரூ¯ ‚.5.50 முதல் ரூ.9.50 வரை உயர்த்தப்பட்டன. அதன்பின் மூன்று ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், பால் விலை லிட்டருக்கு மீண்டும் ரூ.10 உயர்த்தப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பால் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ. 19.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் மூன்றரை ஆண்டுகளில் பால் விலை இந்த அளவுக்கு மிகக் கடுமையாக உயர்த்தப்படதில்லை. மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் போது அதை சமாளிப்பதற்காக விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ உயர்த்துவதில் தவறில்லை. இவ்வாறு குறைந்த அளவில் விலை உயர்த்தப்படும்போது மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், ஒரே தடவையில் லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தினால், தினமும் ஒரு லிட்டர் பாலை பயன்படுத்தும் குடும்பத்திற்கு மாதம் ரூ.300 கூடுதல் செலவாகும்; பாலுக்காக மட்டும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 1350 வரை செலவிட வேண்டியிருக்கும். இதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது. ஆவின் பாலில் ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஆளுங்கட்சிக்காரர் ஒருவர் கலப்படம் செய்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளார். இதையெல்லாம் தடுத்தாலே பாலை ஏற்கனவே இருந்ததைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். அதை விடுத்து பால் விலையை உயர்த்துவது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களை பாதிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். ஒருவேளை ஜெயலலிதா ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே அவரது ஆட்சியில் இருந்ததைவிட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்த ஓ.பன்னீர்செல்வம் அரசு முடிவு செய்திருக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், மக்களின் சுமையை உணர்ந்து பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

Friday, October 24, 2014

உள்ளூர் வானொலி மூலம் இந்தியை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் : ராமதாஸ்

 
 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
’’தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3 மண்டல வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வானொலி நிலையங்களில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளன.

அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கோப்பு எண் 13/20/2014&றி-மிமிமி/125 என்ற அந்த சுற்றறிக்கையில் அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் கடந்த 20.10.2014 அன்று தமிழகத்தில் உள்ள தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங் களுக்கும், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் மண்டல வானொலி நிலையங்கள் மூலம் நாளை மறுநாள் முதல் தினமும் 7 மணி நேரத்திற்கு வர்த் தக ஒலிபரப்பை விரிவுபடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் வானொலி நிலையங்களின் தயாரிப்புச் செலவை குறைக்கவும், விளம்பர வருவாயை அதிகரிக்கவும் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அனைத்திந்திய வானொலி நிலைய அதிகாரிகள் தரப்பில் காரணம் கூறப்படுகிறது. ஆனால், இந்நடவடிக்கையின் உண்மையான நோக்கம் அனைத்து மாநிலங்களிலும் இந்தியைப் பரப்புவது தான் என்று நம்புவதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது அவை தமிழ் நிகழ்ச்சிகளாகத் தானே இருக்க வேண்டும்; இதை மறு ஒலிபரப்பு செய்வதில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படலாம்.

சென்னை மண்டல வானொலி நிலையம் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான 7 மணி நேர வர்த்தக ஒலிபரப்பில், 10 மணி முதல் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும் மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. அதேநேரத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் மொத்தம் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதன்மூலம் ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உள்ளூர் வானொலிகளிலும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்க இதைவிட மோசமான கொல்லைப்புற வழி எதுவும் இருக்க முடியாது.

ஆங்கிலேயர் காலத்தில் கூட தமிழர்கள் மீது ஆங்கிலம் இந்தளவுக்கு வலிந்து திணிக்கப் பட்டதில்லை. ஆனால், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தான் இந்தியா என்பதைப் போலவும், மற்ற மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் அதன் காலணி மாநிலங்கள் என்பது போலவும் கருதிக் கொண்டு இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் மூலம் இந்தித் திணிப்பு, பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தித்திணிப்பு, ஆசிரியர்  குரு உத்சவ் ஆக கொண்டாட வேண்டும்; பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்பதன் மூலம் சமச்கிருதத் திணிப்பு என்று தமிழ்நாட்டு மக்கள் மீதான கலாச்சார மற்றும் மொழித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தூய்மையை வலியுறுத்துவதற்கான தூய்மை இந்தியா என்ற திட்டம் கூட ‘ஸ்வாச் பாரத்’ என்ற இந்தி வார்த்தைகளின் மூலம் தான் பரப்பப்படுகிறது. வலிந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் நேரத்தைக் குறைத்துவ ிட்டு, இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை ஏற்க முடியாது. 

அதேபோல், தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளில் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்படவுள்ளதால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் கொதிப்படைந்திருக்கின்றனர். இந்த மூன்று உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும் தலா 50 லட்சம் நேயர்கள் உள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வது சரியல்ல. எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து உள்ளூர் வானொலிளில் வர்த்தக ஒலிபரப்பு மூலம் இந்தியை திணிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.’’

Thursday, October 23, 2014

மழை பாதிப்புகளை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்திலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் இடைவிடாமல் பெய்துவரும் மழையால் பெருஞ்சேதம் ஏற்பட்டிருப்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் குறுவை நடவு மிகவும் தாமதமாகவே தொடங்கியது. இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள்ளாக முடிவடைந்திருக்க வேண்டிய  அறுவடை தாமதம் ஆன நிலையில், இப்போது பெய்த மழையில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிந்து விட்டன. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்து விட்டன. இதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை, வெள்ளத்தால் நாசமடைந்திருக்கின்றன.கடந்த ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நடப்பாண்டில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பயிர்களுக்கு மட்டுமின்றி, வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளும் மழையால் சேதமடைந்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமடை, வீரவநல்லூர்  ஆகிய இடங்களில் தூர்வாரப்படாத ஏரி, குளங்கள் உடைந்ததால் பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரு சில நாட்கள் பெய்த மழையையே தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் பல்லாங்குழிகளைப் போல மாறிவிட்டன. சென்னையின் பல பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் கூட இந்த மழையில் காணாமல் போய்விட்டன. சேதமடைந்த சாலைகளில்   மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில் அதில் தடுமாறி விழுந்து 500&க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு சக்கர ஊர்திகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் பழுதடைந்து விட்டன.

மழையால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் போதிலும் இவற்றையெல்லாம் தமிழக அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சிலரை மீட்டதைத் தவிர அரசின் சார்பில் இன்று வரை எந்த வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்கள் தங்களின் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி 5 நாட்களாகியும் குறிப்பிடும்படியாக எந்தவிதமான சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. சென்னையில் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை. மழை தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அதிகாரிகளையே மாநகராட்சி நிர்வாகம் இப்போது தான் நியமித்திருக்கிறது.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சரும், அமைச்சர்களும் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குக் கூட அவரது அனுமதியை வேண்டி காத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. எனவே, தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், தாழ்வானப் பகுதிகளிலிருந்து வெள்ளநீரை அகற்றுதல், மழை காரணமாக நோய்கள் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் அரசு மேற்கொள்ள வேண்டும். மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிளிலும் இதேபோன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும், உழவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Wednesday, October 22, 2014

போலி பதிவுத் திருமணங்களைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை! ராமதாசு அறிக்கை!


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் கடந்த 2013&ஆம் ஆண்டில்  விதிகளுக்கு முரணான முறைகளில் செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஓராண்டில் மட்டும் 3500&க்கும் மேற்பட்ட திருமணங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தாம் காதல் மணம் செய்து கொண்ட மனைவி அவரின் பெற்றோரது சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொருவரும் அதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில் சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்த போது, தங்களின் கணவர் என்று கூறிக்கொள்பவரை தெரியும்; ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் போலியாக திருமணப் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலிப்பதிவுத் திருமண மோசடி குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.சி.சி.டி) நடத்திய விசாரணையில் தான் வடசென்னை, இராயபுரம் ஆகிய பதிவாளர் அலுவலகங்களில் நடந்துள்ள இந்த மோசடி அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

வடசென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1559 திருமணங்களும், இராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1937 திருமணங்களும் விதிகளுக்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான திருமணங்கள் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான திருமணங்கள் மணமகள் இல்லாமலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய திருமணங்களை குறிப்பிட்ட சில வழக்குரைஞர்கள் தான் செய்து வைத்திருப்பதாகவும், அவர்களது இந்த சட்டவிரோத செயலுக்கு சார் பதிவாளர்கள் துணை போயிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்களால் அவர்களின் அறைகளில் சட்டவிரோதமாக செய்து வைக்கப்பட்ட திருமணங்கள் செல்லாது என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்ற போதிலும், இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்கள் சமூகத்தில், குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையில், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை சமூகநலனில் அக்கறையுள்ளவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல், அப்பெண் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே வராமல், அவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக பதிவுத் திருமணச் சான்றிதழை தயாரிக்க முடியும் என்றால், தமிழகத்தில் உள்ள எந்த இளம் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தான் கருத வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படும் வழக்கறிஞர் ஒருவர், பதிவுத்துறையில் பணியாற்றும் தமது மனைவியின் உதவியுடன் 2000-க்கும் மேற்பட்ட காதல் நாடகத் திருமணங்களை பதிவு செய்து, பெண்ணின் பெற்றோரிடம் பணம் பறிக்க உதவினார். இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களுக்குப் பிறகே சமூக விரோத கும்பல்கள் நடத்திய காதல் நாடகத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேபோன்ற திருமணங்கள் சென்னையில் வேறு வடிவில் அரங்கேற்றப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. 

இவ்வாறு செய்யப்பட்ட திருமணங்களில் பெரும்பாலானாவை பணம் பறிக்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட காதல் நாடகத் திருமணங்களாகத் தான் இருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்கப்பட்ட இரு பெண்கள், தாங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை  என்றும், தங்களுக்கு அறிமுகமான இளைஞர்கள் தங்களைத் திருமணம் செய்துகொண்டதாக போலிப் பதிவு சான்றைத் தயாரித்து தங்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர். அவர்களில் ஒரு பெண் தங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த ஒருவர், தம்மை திருமணம் செய்து கொண்டது போல ஆவணம் தயாரித்து மிரட்டுவதாக நீதிபதிகளிடம் முறையீடு செய்திருக்கிறார். பெண்களைக் கவர்ந்து, காதல் நாடகத் திருமணங்களை அரங்கேற்றி சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் பறிக்கும் செயல்களில்  ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இப்போது போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கமும் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்று பெற்றோரிடையே எழுந்துள்ள அச்சத்தை ஒதுக்கிவிட முடியாது.

வடசென்னை, இராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் சில வழக்கறிஞர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட போலிப் பதிவு திருமணச் சான்றுகளில் எத்தனை அப்பாவிப் பெண்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. எந்தத் தவறும் செய்யாத அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டு சென்ற பின், அவர்கள் வேறு யாரையோ திருமணம் செய்ததாக போலியாகத் தயாரிக்கப்பட்ட பதிவுத் திருமணச் சான்றிதழ் வெளியானால், அப்பெண்களின் வாழ்க்கை என்னவாகும்? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

சென்னையில் இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் ஒரே ஆண்டில் 3500க்கும் மேற்பட்ட திருமணங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் எத்தனை திருமணங்கள் செய்யப்பட்டுள்ளன? எத்தனை அப்பாவிப் பெண்களின்  வாழ்க்கைக் கேள்விக்குறியாகியிருக்கிறது? என்பது தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி போலிப்பதிவு திருமணங்களின் பின்னணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு துணை போன பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்களால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இனி, இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்கள் நடக்காமல் தடுக்கத் தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர  வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Saturday, October 18, 2014

டீசல் விலைக்குறைப்பு வரவேற்கத்தக்கது: விலைக் கட்டுப்பாட்டைத் நீக்கக் கூடாது: ராமதாஸ் அறிக்கை



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைந்திருப்பதையடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் டீசல் விலையை விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது.

மத்தியில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் எரிபொருள் மானியத்தை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதன் மூலம் அதற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை முந்தைய காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. தொடர்ந்து டீசல் மானியத்தையும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், 2009 ஆம் ஆண்டு ஜனவரியில்  தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாலும் டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு நீங்கி லாபம் கொட்டத் தொடங்கியது. அதன்பயனாகத் தான் டீசல் விலையை 70 மாதங்களில் முதன்முறையாக மத்திய அரசு  குறைத்துள்ளது.

அதேவேளையில், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டது. 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.18 மானியம் வழங்கப்பட்டுவந்தது. இந்த மானியம் இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இனியும் டீசலுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று நினைத்ததால் தான் டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதன்மூலம் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறுப்பை  தட்டிக் கழித்திருக்கிறது.  டீசல் விலை உச்சத்தில் இருக்கும்போது விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால், சரியான நேரத்திற்கு காத்திருந்து  உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நேரத்தில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக மக்கள் நலனுக்கு உகந்த முடிவல்ல.

டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் உடனடியாக  பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியது. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்கு உயர்ந்தால், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை அதிகரிக்கும். அவ்வாறு உயர்ந்தால் பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.

எனவே, டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்றவகையில் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய்  நிறுவனங்களுக்கு  அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்கள் நலன் கருதி உள்நாட்டில் டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Sunday, October 12, 2014

வக்கீல்கள் சமூக நீதி பேரவை சார்பில் நடைபெற்ற வக்கீல்களின் மாநில மாநாடு ( படங்கள் )

 

வக்கீல்கள் சமூக நீதி பேரவை சார்பில் வக்கீல்களின் மாநில மாநாடு சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் இன்று நடந்தது. சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல்பாலு, தலைமை தாங்கினார். தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ஜெயராமன் வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அன்புமணி ராமதாஸ் எம்.பி. விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஊழலுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு மக்களிடம் நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் சில சக்திகள் தீர்ப்பை விமர்சிப்பதோடு நீதிபதியையும் விமர்சிக்கின்றனர். 4 மாநகராட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளில் கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜனநாயகம் தழைப்பதற்கான அடி மரமாக திகழும் நீதித்துறை மீது வெந்நீரை ஊற்றும் இத்தகைய செயல்களை கண்டிக்கிறோம். நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் அனைத்து சக்திகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சென்னை ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்.

* ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

* சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளையை அமைக்க வேண்டும்.

* தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

* இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நீதிபதிகளை தேர்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே.ராஜன், நடராஜன், தங்கவேல், தணிகாசலம், மூத்த வக்கீல்கள் ஆர்.காந்தி, மாசிலாமணி, ராஜகோபால், தமிழ்நாடு– புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ், தேசிய பிற்படுத்தப்ப ட்டோர் ஆணைய உறுப்பினர் கார் வேந்தன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் தமிழ்மணி, தமிழ்நாடு– புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பரமசிவம், வக்கீல்கள் சரவணன், பாலாஜி, தமிழரசன், சுஜாதா, இந்திராணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மாலையில் டாக்டர் ராமதாஸ் நிறைவுரையாற்றுகிறார்.

ஜெ.வை அடைத்துள்ள ஜெயிலுக்குப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்குப் போகும் அமைச்சர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29 ஆம் தேதி புதிதாக பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகத்தை எட்டிப் பார்த்த அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின் இப்போது வரை தங்களின் அறைகளுக்கு திரும்பவில்லை. இதனால் தலைமைச்செயலகம் வெறிச்சோடி கிடப்பதுடன் மக்கள் நலன் சார்ந்த பணிகளும் அரசு நிர்வாகமும் அடியோடு முடங்கிக் கிடக்கின்றன.தமிழக அமைச்சர்களில் ஒருபிரிவினர் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவை இதய தெய்வம் என்று கூறிக் கொண்டு, அரசு பணிகளை செய்யாமல், அவருக்காக தீச்சட்டி சுமப்பது, மண்சோறு சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பிரிவினரோ ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாகம் தான் தங்களின் தற்காலிக தலைமைச் செயலகம் என்ற எண்ணத்தில் அங்கேயே முகாமிட்டிருக்கின்றனர்.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் என்ற முறையில் அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக முகாமிட்டு தங்களின் விசுவாசத்தைக் காட்டுவதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், அமைச்சர்கள் என்ற முறையில் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசியக் கொடி பறக்கும் காரில் தமிழகத்தில் இருந்து பெங்களூர் மத்திய சிறைக்கு சென்று காலை முதல் மாலை வரை காத்திருந்துவிட்டு திரும்புவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.முந்தைய ஆட்சியின்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த உறவினர் சுரேஷ்குமார் என்பவரை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அரசு காரில் சென்று சந்தித்ததாக குற்றச்சாற்று கூறப்பட்டது. இதைக் கண்டித்து 27.10.2010 அன்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதன்பின் 16.11.2010 அன்று இதேகோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட ஜெயலலிதா, ''நீதிமன்றக் காவலில் உள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசிய கொடியுடன் கூடிய அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஓர் அமைச்சர், கொலைக் குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி எதற்கும் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். இது, அவரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது" என்று விமர்சித்திருந்தார்.இப்போது ஜெயலலிதாவை சந்திப்பதற்காக தேசியக் கொடி பறக்கும் காரில் அமைச்சர்கள் பெங்களூர் சென்று தவம் கிடப்பது அரசியலமைப்பு சட்டப்படியான செயலா? இதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது செயலற்ற தன்மை இல்லையா?ஊழல் குற்றவாளியை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே போற்றுவதும், அவருக்காக நடத்தப்படும் வன்முறைகளை கண்டும் காணாமலும் இருப்பதும், அரசு நிர்வாகத்தை முடக்கி வைத்திருப்பதும் தேசிய அளவில் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. இனியாவது ஆட்சியாளர்கள் விழித்துக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடி பறக்கும் காரில், ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற அமைச்சர்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.bangalore-jail-asks-ramadoss-212768.html

Thursday, October 9, 2014

சகாயம் குழு விசாரணைக்கு முட்டுக்கட்டை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு, அக்கடமையை செய்யத் தவறியதுடன், கனிமக் கொள்ளையருக்கு ஆதரவாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விலை மதிப்பற்ற கிரானைட் கற்கள் கிடைக்கின்றன. அதேபோல் இயற்கை அளித்தக் கொடையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அரிய வகை தாது மணல் கிடைக்கிறது. ஆறு ஓடும் அனைத்து மாவட்டங்களிலும் தரமான மணல் கிடைக்கிறது. 

இத்தகைய இயற்கை வளங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் மாநில அரசின் கருவூலத்தை நிரப்புவதற்குப் பதிலாக ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற சில தனி மனிதர்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்டிருப்பது தான் தமிழகத்தின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கிரானைட், தாது மணல், ஆற்றுமணல் ஆகிய இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதால் அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்த முயன்ற அதிகாரிகள் அனைவரும்  உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்களே, தவிர கனிமக் கொள்ளையர் தண்டிக்கப்படவில்லை.

கனிமக் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசை நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றமே தலையிட்டு, கனிமக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கடந்த மாதம் 11-ஆம் தேதி ஆணையிட்டது.

அதன்பின் இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில்,  சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணை தொடங்குவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. கனிமக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தும் பணியை சகாயத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைத்த பிறகும், அப்பணியை மேற்கொள்ள வசதியாக அவர் தற்போது வகித்து வரும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து தமிழக அரசு இன்று வரை விடுவிக்காதது தான் கனிமக் கொள்ளை குறித்த விசாரணை தொடங்கப்படாததற்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. 

கனிமக் கொள்ளை தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் 28 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சகாயம் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கெடு முடிய இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சகாயம் குழு எப்போது விசாரணையை தொடங்கும்?, எப்போது அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்? என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை.

கிரானைட் மற்றும் தாது மணல் முறைகேடு தொடர்பான விசாரணையை தமிழக அரசு பல ஆண்டுகளாக தாமதப்படுத்தி வருகிறது. தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் முதல்கட்ட விசாரணை அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை; இறுதி அறிக்கையை அக்குழு தயாரித்து பல மாதங்கள் ஆகியும் அதை அரசு இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. அதன்பின் சகாயம் குழு அமைக்கப்பட்டதும் அதை எதிர்த்து தமிழக அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும் சகாயம் குழு விசாரணையை தொடங்க அனுமதி அளிக்காமல்  தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. 

இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சகாயம் தலைமையில் குழு அமைத்து உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது, இந்த விசாரணையை விரைந்து முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்நேரத்தில் சகாயம் தலைமையில்  புதிதாக ஒரு குழுவை அமைத்தால் விசாரணை தாமதமாகும் என்றும் தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கனிம கொள்ளை குறித்த விசாரணையை விரைந்து முடிக்க விரும்புவதாக உயர்நீதிமன்றத்தில் நாடகமாடிய தமிழக அரசு, இப்போது சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் விசாரணைக்கு அனுமதி அளிக்காததிலிருந்தே இப்பிரச்சினையில் தமிழக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது. 

கனிமக் கொள்ளையில் தொடர்புடையவர்களுடன் அமைச்சர்கள் பலருக்கு தொடர்புள்ளதாக  ஏற்கனவே  குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் கிரானைட் கொள்ளையர் மீதும், தாதுமணல் கொள்ளையர் மீதும் தொடங்கப்பட்ட விசாரணைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு  அரசு முட்டுக்கட்டை போடுவதைப் பார்க்கும்போது கனிம ஊழலை  மூடி மறைக்க முயல்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஊழல் செய்ததற்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிழலாக ஆட்சி செய்யும் புதிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்னொரு ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது. சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி சகாயம் தலைமையிலான  குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றம் மட்டுமின்றி தமிழக மக்களும் ஆட்சியாளர்களுக்கு சரியான தண்டனை வழங்குவார்கள்.   

பெண் திருமண வயது 21: உயர்நீதிமன்ற பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’பருவக்கோளாறு காரணமாக ஏற்படும் காதலால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவ தைத் தடுக்க அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யோசனை தெரிவித்திருக்கிறது. நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, பெண்களின் நலனில் அக்கறை கொண்டு உயர்நீதிமன்றம் அளித்துள்ள இப்பரிந்துரை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

காதல் என்பது ஒரு காலத்தில் புனிதமானதாக இருந்த நிலை மாறி, இப்போது பொழுதுபோக்கான ஒன்றாகிவிட்டது. 

பெண் வீட்டாரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்குடன் காதல் நாடகத் திருமணங்கள் நடத்தப்படுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து விட்டது. இதைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறேன். தருமபுரியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோராலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அப்பாவி தந்தை ஒருவர் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து இத்தகைய நாடகக் காதல் திருமணங்களைத் தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டதையடுத்து, எனது தலைமையில் உருவாக்கப்பட்ட அனைத்து சமுதாய பேரியக்கத்தின் முதல் கூட்டத்திலேயே பெண்களின் திருமண வயதை 18&லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தான் , பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி திருமணம் செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு பரிந்துரையை அளித்திருக்கிறது. காதல் நாடகத் திருமணங்கள ாலும், கடத்தல் திருமணங்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் பெற்றோரும் அனுபவித்துவரும் வேதனைகளையும், மன உளைச்சலையும் உள்வாங்கி நீதிபதிகள் அளித்துள்ள பரிந்துரையும், தெரிவித்த கருத்துக்களும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் மனக்காயங்களை ஆற்றும் மாமருந்தாக அமைந்துள்ளன.

‘‘ பல பெண்கள் பருவக்கோளாறால் காதல் வயப்பட்டு 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செ ய்து கொள்கின்றனர். திருமணம் என்பது மிகவும் புனிதமானது. பெண் குழந்தைகளை பாசத்துடன் வளர்த்து, கடன் வாங்கி படிக்க வைப்பதுடன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் பெற்றோர் நிச்சயமாக தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல துணையைத் தேடித் தருவார்கள். ஆனால், பெற்றோரை மீறி காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டு திரும்பும்போது, அவர்களை பாதுகாக்கும் கடமை முழுவதும் பெற்றோரின் தலையில் தான் விழுகிறது.

இன்றைய சூழலில் திரைப்படங்களும், மற்ற ஊடகங்களும் பெண் குழந்தைகளிடையே காதலை விதைக்கின்றன.அறிவியல் வளர்ச்சி காரணமாக பெருகிவரும் இணையதளம், செல்பேசி ஆகியவற்றின் மூலம் காதல் எளிதாகிறது. இப்படியெல்லாம் காதலிக்கும் பெண்களின் திருமணம் தோல்வியடையும் போது அவர்கள் படும் வேதனைகளை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. 

பெண்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும் வேண்டுமானால் 18 வயது சரியானதாக இருக்கும். ஆனால், காதலித்து மணம் புரிவதற்கான பக்குவமும், உளவியல் முதிர்ச்சியும் 18 வயதில் நிச்சயமாக கிடைக்காது. எனவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆராய வேண்டும்’’ என்று நீதிபதிகள் மணிக்குமார், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரைத்துள்ளது.

காதல் நாடகத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் இதைவிட சிறப்பாகவும், பொறுப்பாகவும் எவராலும் கூற முடியாது. மெத்தப்படித்தவர்களுக்கே சரியான வேலை கிடைக்காத நிலையில், 21 வயதுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லித் தெரியவில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதே கருத்தைத் தான் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,‘‘ பள்ளி&கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப்பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலிவேடம் பூணாமல் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்திற்கு முன்னுரிமை அளித்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று குறிப்பிட்டிருந்தோம். 

இந்தக் கருத்துக்களை உயர்நீதிமன்றமும் தெரிவித்திருப்பதை எங்கள் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

காதல் திருமணம் தொடர்பான வழக்குகளில், பெண்கள் அவர்களாகவே முன்வந்து காதலனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், பெண்ணின் பெற்றோர் புகார் அளிக்கும்பட்சத்தில், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உரிய ஆணையை பெற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்துள்ள ஆணை உள்நோக்கத்துடன் செய்யப்படும் நாடகக்காதல் திருமணங்களை தடுக்க நிச்சயமாக உதவும்.

மொத்ததில், திருமண வயது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த பரிந்துரைகள் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரின் வயிற்றிலும் பால் வார்க்கும். 

இப்பரிந்துரையை அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள். பெண்களின் திருமண வயது தொடர்பாக 12.05. 2011 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் இதே கருத்து தான் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே, திருமண வயது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக சட்டமாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.’’

Tuesday, October 7, 2014

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பதவி நீக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில் அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் படங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. 

மக்கள் பிரதிநிதிகளுக்கும், நாடு போற்றும் தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் தான் அரசு அலுவலகங்களில் அவர்களின் புகைப்படங்கள் மாட்டப்படுகின்றன. 24.10.1980 அன்று பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசு ஆணையின்படி,பதவியில் இருக்கும் குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரின் உருவப்படங்களுடன் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் படங்கள் தமிழக அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில்  பல ஆண்டுகளாகவே இந்த தலைவர்களின் புகைப்படங்களை வைப்பதை விடுத்து முதலமைச்சரின் புகைப்படங்களை மட்டுமே வைப்பது வழக்கமாக உள்ளது. இதை மரபுசார்ந்த விஷயமாக வைத்துக் கொண்டாலும் கூட, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே அரசு அலுவலகங்களில் இருந்து  அவரது படங்கள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாதாரண கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் ஜெயலலிதா புகைப்படமே நடுநாயகமாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்கள், பண்ணை பசுமைக் கடைகள், கூட்டுறவு வங்கிகள் போன்ற இடங்களிலும் ஜெயலலிதாவின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து திரையரங்குகளிலும் பல்வேறு தலைப்புகளில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் விளம்பரப் படங்கள் அரசு செலவில் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழக அரசின் முதன்மை இணையதளம் தவிர, தமிழக சட்டப்பேரவை இணையதளம் உள்ளிட்ட அனைத்துத் துறை இணையதளங்களிலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக புதிய அரசின் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் ஆளுனர் முன்னிலையில் ஜெயலலிதா படத்தை மேடையில் வைத்து வணங்கிவிட்டு தான் முதலமைச்சராக பதவியேற்றார். அரசியல் சாசனப்படி உறுதியேற்கும் விழாவில், முதலமைச்சராக பதவியேற்கும் ஒருவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின்  புகைப்படத்தை ஆளுனர் முன்னிலையில் வணங்குவது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தின் கீழ் அமர்ந்து அதிகாரிகள் பணியாற்றினால், அவர்களும் ஊழல்வாதிகள் என்ற எண்ணம் அலுவலகத்திற்கு வருபவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிடாதா?

 அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் இன்னும் ஜெயலலிதாவின் பெயரும், படமும் நீடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஓ.பன்னீர் செல்வம் என்ற தனிநபருக்கு  வேண்டுமானால் ஜெயலலிதா இதயதெய்வமாக இருக்கலாம். இதற்காக அவரது சொந்த இல்லத்திலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ ஜெயலலிதாவின் படத்தை வைத்து வணங்கிக் கொள்ளலாம். அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஆனால், ஏழரை கோடி தமிழக மக்களின் பிரதிநிதி என்ற முறையில், தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை வணங்குவது மக்களுக்கு செய்யும் அவமரியாதை ஆகும்.

அரசு அலுவலகங்கள் விடுமுறையில் இருப்பதால் தான் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம்   புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே, அவரின் படத்தை அனைத்து அரசு அலுவகங்களிலும் மாட்டும் அளவுக்கு மின்னல் வேகத்தில்  செயல்படும் அதிகாரிகள், இப்போது அரசு விடுமுறையால் தான் ஜெயலலிதா படத்தை அகற்றமுடியவில்லை என்று சொல்வதை அவர்களின்  மனசாட்சியே நம்பாது. ஜெயலலிதாவின் படங்கள் திட்டமிட்டே தான் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை  அதிகாரிகளின் விளக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. 

தமிழகத்தில் நடைபெறும் அத்துமீறல்களையும், சட்டமீறல்களையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டாம். தமிழக நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதால் தான், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்றுவதுடன்,  அனைத்து சட்டங்களையும் மதித்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Monday, October 6, 2014

ஸ்டிரைக்கில் ஈடுபடும் பள்ளி, பஸ்கள் உரிமங்களை 'எஸ்மா'வை பயன்படுத்தி ரத்து செய்க: ராமதாஸ் ஆவேசம்

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பள்ளி, கல்லூரிகள், ஆம்னி பஸ்கள் உரிமங்களை எஸ்மா சட்டத்தின்கீழ் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும் அறிவித்துள்ளன. கல்வி நிறுவனங்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்ததைக் கண்டித்து சென்னையில் நாளை நடக்கும் போராட்டத்தில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் பங்கேற்க இருப்பதால்தான் பள்ளிகள் மூடப்படுவதாக தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதே காரணத்திற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்காரணங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவர் செய்த ஊழலுக்கான தண்டனை ஆகும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்காக கல்வித் துறையினர் போராட்டம் நடத்துவது தேவையற்றதாகும். கடந்த காலங்களில் புயலும், மழையும் தாக்கினால் கூட அரசின் ஆணையை மதித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு முன்வராத தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக நீதித்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.ஆட்சியாளர்கள் செய்த ஊழலுக்கு ஆதரவாக பள்ளிக் குழந்தைகளை சந்திக்கு இழுப்பதை சகித்துக்கொள்ள முடியாது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த அதிகாரத்தை இத்தகைய அமைப்புகளுக்கு கொடுத்தது யார்?இப்போராட்டங்களை தனியார் பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் தன்னிச்சையாக நடத்துவதாக ஆளுங்கட்சித் தரப்பில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மை அதுவல்ல.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போதும், தண்டிக்கப்பட்ட போதும் அவருக்காக அனுதாபம் கூட தெரிவிக்க முன்வராத பல்வேறு தரப்பினரும் இப்போது போட்டிப்போட்டுக் கொண்டு போராட்டங்களை நடத்துவதிலிருந்தே இதன் பின்னணியில் நடந்ததை அனைவராலும் யூகிக்க முடியும். ஒருவேளை ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றன என்றால் அவற்றின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 2003 ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்ட போது, அதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதாகக் கூறி டெஸ்மா சட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் பேரை தமிழக அரசு நிரந்த பணி நீக்கம் செய்தது.நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தியபோதே ஆசிரியர்கள் மீது அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இப்போது ஊழலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி மாணவர்களின் கல்வியை சீர்குலைப்போரை தண்டிக்க அரசு தயங்கக் கூடாது.அதுமட்டுமின்றி, 2003 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஒருநாள் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தபோது அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, அரசு நிதி உதவியை நிறுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்போதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு எதிராக அதேபோன்ற எச்சரிக்கையை தமிழக அரசு விடுக்க வேண்டும்.இன்னொருபுறம் ஆம்னி பேரூந்துகள் நாளை வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. கடைகளை அடைக்கும்படி வணிகர்களுக்கும் நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன. தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை கட்டாயக் கடையடைப்பு செய்யப்படவுள்ளது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா உத்தமமானவர் என்பதால் அவருக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக நடப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சி முயலுகிறது.ஆனால் ஆளுங்கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு பணிந்து இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது தான் உண்மை. நீதித்துறைக்கு எதிராக இவ்வாறு போராட்டங்கள் தூண்டிவிடப்படுவதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஜெயலலிதா மனுக்கள் மீது இவற்றின் அடிப்படையிலேயே முடிவெடுக்க வேண்டும்.ஊழலுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடந்த போது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அப்போராட்டத்தை மக்கள் வரவேற்றனர். ஆனால், இப்போது ஊழலுக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.எனவே, இவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், தமிழ்நாடு இன்றியமையா சேவை பராமரிப்புச் சட்டத்தை பயன்படுத்தி தனியார் பள்ளி, கல்லூரிகளின் அங்கீகாரத்தையும், ஆம்னி பேரூந்துகளின் உரிமங்களையும் ரத்து செய்யக் கூட தயங்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

சட்டம் ஒழுங்கு நிலவரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதை  உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க மற்றும் பா.ம.க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நீதிபதி குன்ஹாவை விமர்சித்து  வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறும் அந்த உத்தரவில்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கோவையில் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. கடந்த ஆண்டில் நாங்கள் போராட்டம் நடத்தாமலே எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். டாக்டர் ராமதாசை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 8 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 140 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று அ.தி.மு.க.வினர் எங்கு பார்த்தாலும் அனுமதியின்றி போராட்டம் செய்து வருகிறார்கள். பஸ்கள் கொளுத்தப்பட்டு உள்ளன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக 2 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று மட்டும் 45 இடங்களில் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. எனவே கவர்னர் நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தரக்குறைவாக பேசுவது சட்டத்தை அவமதிப்பு செய்வது ஆகும். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். எனவே ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஆளும் கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம். ஆனால் அதை செய்யாமல் வீதிகளில் இறங்கி போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று பஸ் உரிமையாளர்களை மிரட்டி, தனியார் பஸ்களை ஓடாமல் செய்து உள்ளனர். அதுபோன்று பள்ளிக்கூட நிர்வாகிகளையும் மிரட்டி பள்ளிக்கூடங்களையும் திறக்க விடாமல் செய்ய உள்ளனர். எனவே இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Sunday, October 5, 2014

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: கருணாநிதிக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில், பவானி சிங் நியமனத்துக்கு க.அன்பழகன் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞரை தமிழக அரசே நியமிப்பது நீதிப் படுகொலை என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் பிணை வேண்டி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நாளை மறுநாள் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் பிணை மனு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசுத் தரப்பில் வாதிடுவதற்கான சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்ததில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மீறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்ட போது, அவ்வழக்கின் அரசுத்தரப்பு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி கர்நாடக மாநில அரசு நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
அதன்படி, அரசு வழக்கறிஞராக முதலில் ஆச்சாரியாவும், பின்னர் பவானி சிங்கும் நியமிக்கப்பட்டு, வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டது. இப்போது இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதாடுவது யார்? என்ற வினா எழுந்தது.
இவ்வழக்கை நடத்தும் வழக்கறிஞரை கர்நாடக அரசு தான் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு, இவ்வழக்கில் இறுதி மேல்முறையீடு முடிவடையும் வரை பொருந்தும். ஆனால், தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் அரசு வழக்கறிஞரை நியமிப்பது எப்படி? என கர்நாடக அரசு தயங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வழக்கை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக தமிழக அரசின் கையூட்டு ஒழிப்புத்துறை நியமித்திருக்கிறது.
இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் போது ஜெயலலிதாவுக்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் வாதாடுவது உறுதியாகிவிட்டது. பவானி சிங்கின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது அவரது நியமனம் இவ்வழக்கின் விசாரணை நியாயமாக நடப்பதை சீர்குலைத்து விடும்.
இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கும், கர்நாடக மாநில அரசுக்கும் தான் உள்ளதே தவிர, தமிழக அரசுக்கோ அல்லது இவ்வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்ட தமிழக கையூட்டு ஒழிப்புத்துறைக்கோ இல்லை. தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டு விட்ட போதிலும், அவரால் நியமிக்கப்பட்ட பொம்மைகள் தான் தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்த தமிழக கையூட்டு ஒழிப்புத்துறை அலுவலத்தில் இன்னமும் ஜெயலலிதாவின் உருவப்படம் தான் அலங்காரமாக மாட்டப்பட்டிருக்கிறது.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகும் ஊழல் குற்றவாளியான அவரது படத்தைத் தான் முதலமைச்சர் முதல் கையூட்டு ஒழிப்புத்துறை அதிகாரிகள் வரை அனைவரும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆதிக்கம் இந்த அளவுக்கு தலைவிரித்தாடும் ஒரு துறையின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர் அவருக்கு எதிராக வாதிடுவார் என்று எதிர்பார்ப்பது மூடநம்பிக்கையின் உச்சமாகும்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தபோதே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்பட்டார். வழக்கை இழுத்தடிக்க ஜெயலலிதாவுக்கு துணை போனதற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதுடன் அபராதத்துக்கும் ஆளானார். மேலும் தமக்கு எதிராக பவானிசிங் தான் வாதாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடரும் அளவுக்கு ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக பவானிசிங் இருந்து வருகிறார். இப்படிப்பட்டவர் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்டால், அது நீதியை படுகொலை செய்யும் செயல் ஆகும்.
இன்றைய நிலையில் நீதி படுகொலை செய்யப்படுவதை தடுப்பது கர்நாடக அரசு அல்லது இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்படுவதற்கு காரணமான தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால், "சொத்துக்குவிப்பு வழக்கின் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் கர்நாடகஅரசு வாதியோ அல்லது பிரதிவாதியோ இல்லை. எனவே, அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் நாங்களாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதாக இல்லை. அதேநேரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்" கர்நாடக சட்டத்துறை செயலாளர் செங்கப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும் நீதிமன்ற உத்தரவுப்படியே செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதியை நிலைநாட்டும் பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. 2003 ஆம் ஆண்டில் இந்த வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அதைவிட அதிக காரணங்கள் பவானிசிங்கை மாற்றுவதற்கு உள்ளன. இதற்கு முன் 2011 ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கையூட்டு ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
அவ்வழக்கில் கையூட்டு ஒழிப்புத்துறையின் சார்பில் வாதிட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான், கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.டி. நானய்யா ஆகியோர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அப்போது அன்பழகன் தான் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன், கையூட்டு ஒழிப்புத்துறையின் சார்பில் வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்சநீதிமன்ற அறிவுரைப்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 19.08.2011 அன்று தீர்ப்பளித்தார்.
அப்போது நிலவிய சூழலும், இப்போது நிலவும் சூழலும் ஒரே மாதிரியாக இருப்பதால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கையூட்டு ஒழிப்புத் துறை நியமித்ததை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் வழக்கு தொடர வேண்டும். இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு உண்டு.
ஊழலுக்கு துணை போன கட்சி என்ற அவப்பெயர் தி.மு.க.வுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கருணாநிதி எப்போதும் உறுதியாக இருப்பவர் என்பதால், ஜெயலலிதா உள்ளிட்டோரின் பிணை மனுக்கள் நாளை மறுநாள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது பவானிசிங் நியமனத்துக்கு க.அன்பழகன் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வைப்பார் என நம்புகிறேன்.

Thursday, October 2, 2014

அதிமுகவினர் நடத்துவது போராட்டமே அல்ல; அது ஒரு கேலிக்கூத்து என காவல்துறை கருதுகிறதா?: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் குடும்பங்களை ஆதரவற்றவர்களாக்கி வரும் மது அரக்கனை ஒழித்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இன்று பா.ம.க. சார்பில் எனது தலைமையில் அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்ப ட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்ததால் கடைசி நேரத்தில் போராட்டத்தை கைவிட நேர்ந்தது.

தமிழகத்தின் இன்றைய முதன்மைத் தேவை மதுவிலக்கு தான்.  இத்தகைய உன்னத நோக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்திற்கு அனுமதி தர காவல்துறையினர் தயாராக இல்லை. இதற்காக காவல்துறை அதிகாரிகள் கூறிய காரணம் போராட்டம் நடத்துவதற்குரிய சூழல் தமிழகத்தில் இல்லை என்பது தான். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளையும், போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்காக காவல்துறை கூறும் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குழந்தைகளுக்கு கூட சிரிப்பு வந்து விடும். தமிழகத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.

வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரும், தலைகுனிவும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை தமிழகத்தில் இப்போது தான் அரங்கேறுகிறது.

சென்னை அண்ணா சாலையில் கடந்த 30 ஆம் தேதி 18 இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் அனுமதிக்கப்பட்ட 3 இடங்களைத் தவிர வேறு எங்கும் போராட்டம் நடத்தினால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்த போதிலும், அ.தி.மு.க.வினரின் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முன்வரவில்லை; மாறாக ஆளுங்கட்சியினரின் போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்ததுடன், அவர்களுக்கு தேவையான மற்ற உதவிகளையும் செய்தனர். இப்படிப்பட்ட காவல்துறை தான் நியாயமான காரணத்திற்காக போராட அனுமதி கேட்டால், போராட்டம் நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை என்று கூறுகிறது. 

ஒருவேளை அ.தி.மு.க.வினர் நடத்துவது போராட்டமே அல்ல; அது ஒரு கேலிக்கூத்து என சென்னை காவல்துறை கருதுகிறது போலிருக்கிறது.

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கருதப்பட்ட தமிழ்நாடு காவல்துறையின் இன்றைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எஃப்.வி. அருள், வி.ஆர். லட்சுமிநாராயணன் போன்றவர்கள் தமிழக காவல்துறை தலைவர்களாக இருந்த போது காவல்துறைக்கு தனி மரியாதை இருந்தது. 

அந்த காலத்தில் காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தது; குற்றம் செய்வோருக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால், இப்போது குற்றம் செய்யும் ஆளுங்கட்சியினருக்கு பாதுகாப்பாகவும், மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் திகழும் அளவுக்கு காவல்துறை தரம் தாழ்ந்துவிட்டது.

நீதித்துறையை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக அ.தி.மு.க.வினர் நடத்தும் வன்முறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களால் அப்பாவி பொதுமக்களுக்கு சொல்லொனாத் துயரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரூந்துகளை எரித்த சிலரைத் தவிர இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு காரணமானோரை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. 

வேலைவாய்ப்பு கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பார்வையற்றவர்களை கைது செய்து சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள சுடுகாட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டு தவிக்கவிட்ட மனிதநேயமற்ற காவல்துறையினர், இப்போது வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரை கைது செய்யத் தயங்குவதில் இருந்தே அவர்களின் பணி அக்கறையையும் நடுநிலையையும் அறிந்து கொள்ள முடியும். நீட்டிக்கப்பட்ட பதவிக்கால மும் அடுத்த மாதத்துடன் முடிவடையவிருக்கும் நிலையில், அடுத்து ஆலோசகர் பதவி ஏதேனும் கிடைக்குமா? என எதிர்பார்க்கும் அதிகாரிகளின் தலைமையில் செயல்படும் காவல்துறையிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

தமிழ்நாடு இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ஊழல் செய்ததற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தலைமை, ஆட்சிப்பணியை கவனிப்பதைவிட அதிக நேரத்தை பெங்களூர் சிறைச்சாலைக்கு பயணம் செய்வதிலும், தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தலைமையின் படத்தை வணங்குவது மற்றும் கண்ணீர் விடுவதிலும் செலவிடும் புதிய முதல்வர், உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆட்களைத் திரட்டும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்களை கவனிக்க ஆள் இல்லாமல் தமிழக ஆட்சித் தலைமை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நிர்வாகத் துறையினரும், காவல்துறையினரும் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட்டால் தான், பொருளாதார வளர்ச்சியில் ஏற்கனவே கடைசி இடத்திற்கு சென்று விட்ட தமிழகத்தை அதைவிட அதலபாதாளத்திற்கு சென்று விடாமல் தடுக்க முடியும். இதை உணர்ந்து ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இல்லாமல், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதை விடுத்து, நீதிக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Wednesday, October 1, 2014

நீதிக்கு தலைவணங்க வேண்டும்: சட்டத்தை வளைக்க முயலக்கூடாது: ராமதாஸ் அறிக்கை

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும்  கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை. மாறாக, ஊழல் செய்ததற்காகத் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 

இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல... வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த  முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1991 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக பெற்றது வெறும் ரூ.60 மட்டுமே. இந்தக்காலத்தில் இவரும், இவரை சார்ந்தவர்களும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 66.65 கோடி ஆகும். வாங்கிய ஊதியத்தை விட ஒரு கோடி மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார்; கணக்கில் வராத ஊழல் பணத்தில் தான் அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாற்று ஆகும். 

ஜெயலலிதா ஊழல் செய்யாத உத்தமராக இருந்திருந்தால் தாம் வாங்கிய சொத்துக்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது  என்பதை நீதிமன்றத்தில் விளக்கி குற்றமற்றவர் என நிரூபித்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் தான் இவ்வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார். அதன்பிறகும் தாம் ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை என்பதால் தான் அவரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தண்டித்திருக்கிறது.

ஜெயலலிதா எவ்வளவு மோசமான குற்றத்தை செய்துள்ளார்; அது இந்த நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் நீதிபதி தெளிவாக விளக்கியுள்ளார். ‘‘ கொடநாட்டில் 900 ஏக்கர் உட்பட மொத்தம் 3,000 ஏக்கர் நிலங்களை மட்டும் ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்பது நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவும்  மற்றவர்களும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருப்பது,  ஒருவர் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அது சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்து ஜனநாயக அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஊழலை ஒழிப்பது தான் நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அதன்படி தான் இவ்வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று நீதிபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா மீதான வழக்கின் முக்கிய ஆதாரங்களாக விளங்கியவை அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளாலும், நீதிபதிகளாலும் ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டவை ஆகும். இவற்றின் அடிப்படையில் தான் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இதில் யாருடைய தலையீடும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சட்ட வல்லுனர்களே கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த வழக்கை இந்தியாவிலுள்ள எந்த நேர்மையான நீதிபதி விசாரித்திருந்தாலும் இதே தீர்ப்பைத் தான் வழங்கியிருப்பார்கள் என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.

விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உடன்பாடு இல்லை என்றால் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; சிறை தண்டனை அனுபவிப்பதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகி பிணை பெறலாம். அதைவிடுத்து, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை களங்கப்படுத்த முயல்வதும் முறையல்ல. காவிரிப் பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினரும், அவர்களின் அடிப்பொடிகளும் குற்றஞ்சாற்றுவது  மிக அபத்தமானது என்பது மட்டுமின்றி, இருமாநில உறவை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதும் ஆகும். இன்னொருபுறம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயலலிதாவுக்கு  தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

இன்னொருபுறம், ஜெயலலிதா  சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனால் அவரது பிணை மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள ஆளுங்கட்சித் தரப்பு, ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதற்காக திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து, அவர்களை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட வைக்கும் பணியில் தமிழக அரசே ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரிவாக வெளியிடும்படி  செய்தி&மக்கள் தொடர்பு அதிகாரிகள் நெருக்கடி தருவதாக ஊடகத்துறையினர் குற்றஞ்சாற்றுகின்றனர்.

இவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்பதுடன், இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களில், ஜெயலலிதாவின் படத்தை போட்டு ‘கடவுளை மனிதன் தண்டிப்பதா?’, ‘ உச்சநீதிமன்றமே... உத்தமியை விடுதலை செய்’ என்பன போன்ற வாசகங்களை அச்சிட்டு நீதிமன்றங்களை மிரட்டும் தொனியில் செயல்படுவது அருவருக்கத்தக்கதாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஜெயலலிதா மீது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று ஆளுங்கட்சியினர் நினைத்தால், அது தவறாகவே இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா கொள்ளையடித்தது தங்களின் வரிப்பணத்தை தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. இத்தகைய போக்குகள் அனுமதிக்கப்பட்டால், அவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையும், நீதிபதியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு  நிலைமை மோசமாகி விடும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

மனுநீதி சோழன் தோன்றிய இந்த பூமியில் நீதிக்கு தலைவணங்குவதே சரியானதாக இருக்கும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள்  முதன்மையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். எனவே, ஊடகங்கள் அமைதியை கலைத்து, ஒருசார்பு நிலையை தவிர்த்து சட்டத்தையும், நீதியையும் வளைக்கும் ஆளும் கட்சியினரின் முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: