Sunday, January 24, 2016

3 சித்த மருத்துவ மாணவிகள் படித்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?... ராமதாஸ்

சென்னை: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன? என்பதை ஆராய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்திலுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் நேற்று மாலை அருகிலுள்ள கிணற்றில் ஒன்றாக குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது. அந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் மூன்று மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? என்பதை ஆராய வேண்டும். எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கட்டணக் கொள்ளை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதியின்மையை எதிர்த்து அங்கு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சில மாணவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த அறிக்கையை மேல்நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது. ஆனால், அதன் மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் தமிழக சுகாதாரத்துறை எடுக்கவில்லை.அதுமட்டுமின்றி, சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகி வாசுகியும், அவரது மகன் சுதாகரும் அடிமைகளைப் போல நடத்தியுள்ளனர். கல்லூரி வளாகத்திலுள்ள முள் மரங்களை வெட்டுவது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.எதிர்த்து கேள்விக் கேட்பவர்கள் கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த அடியாட்களால் மிரட்டப்பட்டிருக்கின்றனர். பாலியல் சீண்டல்களும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத மாணவிகள்,‘‘கட்டிய பணம் கூட தேவையில்லை... சான்றிதழ்களை கொடுங்கள். நாங்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்கிறோம்'' என்று கெஞ்சிய போதும் அதை கல்லூரி நிர்வாகம் பொருட்படுத்தாததால் மாணவிகள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்புகார்கள் எதையும் புறக்கணிக்க முடியாது.எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசும் மருத்துவப் பல்கலைக்கழகமும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அரசியல் கட்சி பிரமுகர் மூலம் அதே சமுதாயத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெண் உயரதிகாரிக்கு பெரும் தொகை தரப்பட்டு சித்த மருத்துவக் கல்லூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.சித்த மருத்துவக் கல்லூரி மீது ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், அதன்மீதும், அது குறித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பிய விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசு தான் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமான அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியை மூடி முத்திரையிட்டு அதில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

அமித் ஷாவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து


பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து  செய்தி அனுப்பியுள்ளார்.

’’அன்புள்ள திரு. அமித் ஷா அவர்களுக்கு,
பெருமையும், கவுரவமும் மிக்க பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தொடர்ந்து  இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
உங்களது சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பாரதிய ஜனதாக் கட்சியும், நாடும் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன்.’’

Saturday, January 23, 2016

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஜெயலலிதா? பொதுவிவாதத்துக்கு தயாரா? :ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தமது அரசு நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். அதையும் தாண்டி மக்களுக்காக பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை  50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மக்களின் மறதி மட்டும் முதலீடாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே நிறைவேற்றிவிட்டதாக வீர வசனம் பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. அதேபோல் தான் இப்போதும் 2011-ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், 10% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட  நிலையில், மீதமுள்ள 90% இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

*   2013-ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; 3000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; 4 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரு மெகாவாட் கூட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.
*   வேளாண் வளர்ச்சிக்காக இரண்டாம் விவசாயப் புரட்சித் திட்டம் செயல்படுத்தப்படும்; வேளாண் துறையில் 9% வளர்ச்சி எட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு புரட்சியும் நடக்க வில்லை. மாறாக வேளாண்மை வளர்ச்சி மைனஸ் 12.1% என்ற அதல பாதளத்துக்கு சென்றது.

*   கரும்பு கொள்முதல் விலை 2011 ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்;கரும்பு உற்பத்தி 475 லட்சம் டன்னிலிருந்து 1000 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்றார்கள். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக கரும்புக்கான பரிந்துரை விலையை தமிழக அரசு ரூ.200 குறைத்தது; சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.1050 கோடியை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கரும்பு சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துவிட்டது.

*   விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று அதிமுக கூறியது. ஆனால், இழப்பு தான் இரட்டிப்பானது. இதனால் 4 ஆண்டுகளில் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

*  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும்; இதற்காக 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பால் உற்பத்தியை தினமும் ஒரு கோடி லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மாறாக குடிநீர் விலைக்கு விற்கப்பட்டதும், பால் சாலைகளில் கொட்டப்பட்டதும் தான் நடந்தது.

*   கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என்றார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசு சார்பில் ஒரு கேபிள் டி.வி.யைத் தொடங்கி, பிடிக்காத தொலைக்காட்சிகள் பழிவாங்கப்படுகின்றன.

*   கச்சத்தீவு மீட்கப்படும் என்றனர். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுதான் நடந்தது.
*   அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்; சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவுமே நடக்காததால் அரசுத்துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

*   ஊக வணிகம் தடுக்கப்பட்டு விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ஊக வணிகம் தழைக்கிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.260 என்ற உச்சவிலையைத் தொட்டது.

*   58 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இலவச பேரூந்து பயண அட்டை திட்டமும் நிறைவேறவில்லை.

*   தமிழகத்தில் ரூ.1.20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும். தமிழகம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு பைசா கூட கூடுதல் வருவாய் ஈட்டப்படவில்லை. மாறாக  ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை ரூ.4.12 லட்சம் கோடி கடனாக அதிகரித்தது தான் சாதனை.
*   சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றார்கள். கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்ததுதான் மிச்சம். கடந்த 5 ஆண்டுகளில் 9,948 கொலைகளும், ஒரு லட்சம் கொள்ளைகளும் நடந்துள்ளன.

*   உயர்கல்வித்துறையில் புதிய சாதனைகள் படைக்கப்படும் என்றார் ஜெயலலிதா. அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக அனுமதியில்லாத திருவள்ளூர் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர்கள்  படிப்பையும், பணத்தையும் இழந்தது தான் மிச்சம். நேற்று கூட விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரியில் படித்து வந்த  மாணவிகள் 3 பேர் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பாலியல் தொல்லை தரப் பட்டதாலும் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்த அவலம் நடைபெற்றிருக்கிறது.

அ.தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பட்டியல் நீளமானது. ஆனால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், 90% நிறைவேற்றப் படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருப்பதாக நான் கூறுகிறேன். இது குறித்து   முதலமைச்சருடன் பொதுவிவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா தயாரா?’’

பாமக 130 இடங்களில் வெல்லும்- அன்புமணிக்கு 62% ஆதரவு... இது எங்க கருத்து கணிப்பு... சொல்வது ராமதாஸ்

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பினை போலியான ஒன்று என்றும் அதனால் மக்கள் மனதினை மாற்ற இயலாது என்றும் விமரிசித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், "தேர்தல் நேரத்தில் மிகச்சிறந்த வணிகமாக உருவெடுத்திருப்பது கருத்துக்கணிப்பு தான். அறை யில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சிக்கு சாதகமான புள்ளி விவரங்களை தொகுத்துத் தருவதற்கு கோடிகளில் பணம் கிடைப்பதால், கடந்த காலங்களில் அரைகுறையாக சேர்த்து வைத்திருந்த பெயரை முதலீடாக மாற்றி பலரும் கருத்துக்கணிப்பு வணிகத்தை தொடங்கி யுள்ளனர். இது ஜனநாயகத்திற்கே அவமானம்
பூச்சி மருந்து ஊழல், பழைய வீராணம் ஊழல் தொடங்கி உலகையே அதிர வைத்த 2ஜி ஊழல் வரை அனைத்து ஊழல்களின் கதாநாயகன் தி.மு.க. தான். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி என்று சர்க்காரியா ஆணையத்தால் விமர்சிக்கப்பட்டது தி.மு.க. தான். அதேபோல், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து ஊழல் சுனாமியாக உருவெடுத்திருப்பது அதிமுக ஆகும்.மதுவிலக்கிற்காக உறுதியாக போராடும் கட்சிகளில் முதலிடம் (22.40%) பா.ம.க.வுக்கு என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. மது தான் வரும் தேர்தலின் முடிவுகளை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் என்று 23.40% மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பா.ம.க.வுக்கு குறைந்த வாக்குகளே கிடைக்குமாம். இந்த சறுக்கலை சமாளிப்பதற்காக மது முக்கியப் பிரச்சி னையாக இருந்தாலும், அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று 51.4% மக்கள் கருதுவதாக இடையில் ஒரு வரி சேர்க்கப்பட்டிருக்கிறது. மனசாட்சியும், ஆறாவது அறிவும் உள்ள எவராலும் இதைப் போன்று மோசமான கருத்துத்திணிப்பை வெளியிட முடியாது. மனசாட்சியை விற்றவர் களால் தான் இது சாத்தியம்.தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இந்த கருத்துக் கணிப்பு 5464 பேரிடம் மட்டும், அதாவது ஒரு தொகுதிக்கு 23 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. 10,000 பேருக்கு ஒருவர் வீதம் நடத்தப்படுவது கருத்துக் கணிப்பாக இருக்காது; திணிப்பாகவே இருக்கும்.2011 மற்றும் 2014 தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியை தூக்கி நிறுத்துவதும், திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் பா.ம.க.வின் வளர்ச்சியை மறைப்பதும் தான் இந்த கருத்துக்கணிப்பின் நோக்கம் ஆகும். ஏற்கனவே பல நிறுவனங்களின் மூலம் கருத்துக்கணிப்பை நடத்தியும், பல ஊடகங்களை விலைக்கு வாங்கியும் தங்களுக்கு சாதகமான தோற்றத்தை ஏற்படுத்த அக்கட்சி முயல்கிறது. இதுபோல் எத்தனை வித்தைகளை செய்தாலும் அக்கட்சிக்கு வெற்றி கிட்டாது.பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையை அறிந்து கொள்வதற்காக பா.ம.க. சார்பில் அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பா.ம.க 120 முதல் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்க்கு 62% ஆதரவு உள்ளது. தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க. தான் என்று 73% மக்கள் தெரிவித்துள்ளனர். இது தான் உண்மை. மோசடியாக கருத்துத் திணிப்புகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை மாற்ற முடியாது. வரும் தேர்தலில் பாமக பெரும் வெற்றி பெறப்போவது உறுதி" என்று தெரிவித்துள்ளார்
 

Friday, January 22, 2016

நாம் விரும்பும் சென்னை".. தலைநகரில் நகர்வலம் வந்த அன்புமணி

சென்னை: நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் சென்னை நகர மக்களைச் சந்திக்கும் பயணத்தை பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கினார்.சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று அவர் சென்று மக்களைச் சந்தித்து சென்னையை மேம்படுத்தத் தேவையானவை குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்தார்.சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வகையில் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் பாமகவும் பல்வேறு திட்டங்களை அன்புமணியை முன்வைத்து தீட்டி செயல்படுத்தி வருகிறது.
பிரசாரம் தொடக்கம் இந்த பிரசாரம் இன்று காலை தொடங்கியது. சூளைமேட்டில் தனது பிரசாரத்தை அன்புமணி தொடங்கினார். அவருடன் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் உடன் வந்தனர்

மக்களிடம் கலந்துரையாடல் இந்த சந்திப்பின்போது மக்களிடம் நீங்கள் சென்னையை எந்த விதத்தில் மாற்றியமைக்க விரும்புகிறீர்கள் என்று கருத்து கேட்டார் அன்புமணி.
 
பகுதி பகுதியாக தொடர்ந்து புரசைவாக்கம், தங்கசாலை, ராயபுரம், திருவொற்றியூர் என அன்புமணியின் பிரசாரம் தொடர்ந்தது. அவர் போன இடங்களிலெல்லாம் பெரும் திரளான மக்கள் கூடி அன்புமணியுடன் பேச ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, January 13, 2016

புதியதோர் தமிழகம் விரைவில் உருவாக தமிழர் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்: ராமதாஸ்

 

தை பிறக்கும்... நல்ல வழி பிறக்கும் மாற்றம் வரும்... முன்னேற்றம் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள  தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அறுவடைத் திருநாளான பொங்கலை இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும், அத்திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர் அனைவரும் வீடுகளில் தோரணம் கட்டி,புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு  மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளங்களான கரும்பு, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்துமே  இனிப்பை பிரதிநிதித்துவப் படுத்துபவை ஆகும். ஆனால், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆண்டு கசப்பே பரிசாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு போதிய இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவில் அறிவிக்கப்பட்ட இழப்பீடும் கிடைக்குமா? என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உழவர்களைப் போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரும் தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கின்றனர். 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டு வரும். ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத, கல்வி மற்றும் சுகாதாரச் செலவு இல்லாத, குடிசைகள் இல்லாத, வறுமையில்லாத, வளம் நிறைந்த, அறிவு செறிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரின் தலைமையில் புதியதோர் தமிழகம் விரைவில் உருவாகப்போவது உறுதி. அதற்காக உழைக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, January 12, 2016

சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதத்தில் முடித்த ஜெ. ஜல்லிக்கட்டுக்காக நீதிமன்றத்தை நாடவில்லை: ராமதாஸ்


சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடித்து சாதகமான தீர்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டிய ஜெயலலிதாவும், தமிழக அரசும் கடந்த 19 மாதங்களில் ஒருமுறை கூட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா? என்ற வினா எழுந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் உண்ணாநிலை, கருப்புக்கொடி போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இப்போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் காவல்துறை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்ததையடுத்து, தென் மாவட்ட மக்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. அதே உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், மக்களின் உற்சாகம் வடிந்து கோபமாக கொந்தளிக்க தொடங்கியிருக்கிறது. 

அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 20&க்கும் மேற்பட்ட இடங்களில் உண்ணாநிலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் மாடுபிடி வீரர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய, மாநில அரசுகளும் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு முழுக்க முழுக்க தமிழக அரசு தான் காரணம். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட்டு 19 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தடையை அகற்றவோ, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 19.05.2014 அன்றே தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டு விட்ட நிலையில், அம்மனுவை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்து தடையை அகற்ற வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தொடங்கி இப்போது வரை அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் குறைந்தபட்சம் 20 முறையாவது தமிழக அரசை வலியுறுத்தியிருப்பேன். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடித்து சாதகமான தீர்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டிய ஜெயலலிதாவும், தமிழக அரசும் கடந்த 19 மாதங்களில் ஒருமுறை கூட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவில்லை. நீதிமன்றத்திடம் நியாயத்தை வலியுறுத்தி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத  அரசு, நியாயம் கேட்டு மக்கள் நடத்தும் போராட்டத்தை முடக்க முயல்வது அடக்குமுறையின் அடையாளமாகும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிப்பதற்காக விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் முன்வைக்கும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உண்மையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்திருப்பதால் காளைகளுக்கு நன்மை ஏற்படாது; மாறாக தீமை தான் ஏற்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காக குழந்தைகளைப் போல பாசம் காட்டி காளைகள் வளர்க்கப் படுகின்றன. நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கண்காணிப்பில் தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதால் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.  இத்தகைய சூழலில், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதால் அதற்காக வளர்க்கப்பட்ட மாடுகள் அனைத்தும் இறைச்சிக்காக கொல்லப்படும். இதைத் தான் விலங்குகள் நலவாரியங்கள் விரும்புகின்றனவா? என்று தெரியவில்லை.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு அப்போட்டிகளை நடத்த மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அதற்கு தடை போடுவது சரியானதாக இருக்காது. எனவே, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தில்லி விரைந்து பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அது முடியாவிட்டால் கூட ஜல்லிக்கட்டு குறித்த தங்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பொதுமக்கள் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், நிறைவேற்றிக் கொள்ளவும்  அரசு தடை போடக்கூடாது. அதேபோல், மாடுபிடி வீரர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, தற்கொலை போன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, January 11, 2016

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

 

பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு சமுதாய மக்கள் இணையும் நிகழ்ச்சி சேலத்திலுள்ள குகை பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பல்வேறு சமுதாயத்தினர் ஒருங்கிணைந்த அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டி.இரவிகிருஷ்ணன் தலைமையிலான நூற்றுக்கணக்கானவர்கள் பா.ம.கவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். இரு திராவிடக் கட்சிகளை ஒதுக்கி, மக்கள் நலனில் அக்கறைக் காட்டும் கட்சியாக பா.ம.க.வை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். திராவிட ஆட்சிக்கு விடுதலை வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பா.ம.க.வுக்கு வருகின்றனர்.

திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தவறு செய்தோம். இனி அந்த தவறை செய்ய மாட்டோம். அதற்கு மக்கள் மத்தியில் மன்னிப்பும் கேட்டுவிட்டோம். தொடர்ந்து மன்னிப்புக் கேட்டு வருகிறோம்.

2006-இல் பெரிய கூட்டணி அமைத்தும் திமுக 95-இடங்களில் மட்டுமே வென்றது. அதைத் தொடர்ந்து நடந்த 2011-தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட அவர்களால் வர முடியவில்லை. தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை.

அக்கட்சி 7-தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக உள்ள திமுக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்திக்கும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டுவர ராமதாஸ்தான் குரல் கொடுத்தார், பா.ம.க. ஆதரவுடன் ஆட்சி நடத்திய திமுக தலைவர் கலைஞர் அவர்களை ஒரு வகையில், மிரட்டித்தான் சமச்சீர் கல்வியை தமிழகத்தில் கொண்டு வந்தோம், அதை நடைமுறை படுத்தினோம்.
 
தலித்துக்கு எதிரான கட்சி என பா.ம.க. மீது பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்துச் சமுதாயத்துக்கான கட்சியாக பா.ம.க. உருவெடுத்து வருகிறது. தலித் மக்களுக்கோ, மற்ற தலித் மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்பினருக்கோ நாங்கள் எதிராவர்கள் இல்லை. தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த பூட்ட்டாசிங், டாக்டர் அம்பேத்கருக்கு பிறகு தலித் மக்களுக்கு அதிகப்படியான சலுகைகளை வழங்கியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் என சென்னையில் நடந்த மாநாட்டில் பேசினார். வரும் காலங்களில், தலித் மக்களுக்கு மட்டுமல்ல.. அனைத்துச் சமுதாயத்தினருக்கும் பாதுகாப்பாக நாங்கள் இருப்போம். மக்கள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம் என்றார்.

கூட்டத்துக்கு பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, “திமுக, அதிமுக தவிர பாமக தலைமையை ஏற்கும் அனைத்து   கட்சியையும் நாங்கள் வரவேற்கிறோம். சிறப்பான கட்சிகள் இணைத்தால், கூட்டணி ஆட்சியை பா.ம.க அமைக்கும். அதில், துணை முதல்வர் உள்ளிட்ட பல பொறுப்புகள் கூட்டணிக்கு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, பா.ம.கவின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.

Sunday, January 10, 2016

அமைச்சரின் ஆபீஸுக்கே பாதுகாப்பு இல்லை.. டாக்டர் ராமதாஸ் பாய்ச்சல்

சென்னை: அதிமுக அரசின் ஆட்சியில் அமைச்சரின் வீடு, அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை. மக்கள் அச்சத்திலும், கலக்கத்திலும் உள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் டி. ராஜுவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மதுரை காலவாசல் சந்திப்பு அருகில் சம்மட்டிபுரத்தில் உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த அலுவலகத்திற்கு இரு சக்கர ஊர்தியில் வந்த இருவர், பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இக்குண்டுகள் வெடித்ததில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்ற போதிலும், அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது.அதே நேரத்தில் மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகளும், நாட்டு வெடிகுண்டும் வீசப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காத நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்து லேசான சேதம் ஏற்பட்டிருக்கிறது.இந்த இரு அலுவலகங்களும் அமைச்சர் செல்லூர் ராஜு கட்டுப்பாட்டில் இருப்பவை. அவரை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இதற்கு காரணம் யார் என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சட்டம் -ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது. மூத்த அமைச்சரின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், அப்பாவி மக்களை காவல் துறை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது அச்சமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Saturday, January 9, 2016

சென்னையை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை: அன்புமணி ராமதாஸ் பேட்டி

இயற்கை பேரழிவில் இருந்து சென்னை நகரத்தை பாதுகாப்பது மற்றும் சென்னையை சிறந்த மாநகரமாக பராமரிப்பது பற்றிய விரிவான திட்டங்கள் அடங்கிய ‘‘நாம் விரும்பும் சென்னை’’ என்ற புதிய செயல்திட்ட கையேடு ‘பசுமை தாயகம்‘ சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. 

சென்னையில் இதனை வெளியிட்டு பேசிய பா.ம.க.வின் முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,

இயற்கை சீற்றத்தில் இருந்து சென்னையை பாதுகாக்க நிரந்தர தீர்வு என்ன? புதிய திட்டங்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய செயல் திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டு உள்ளோம்.

இதை மக்கள் மத்தியில் ஒரு பிரசார இயக்கமாக கொண்டு சென்று அவர்களின் கருத்துக்களையும் நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து அடுத்த மாதம் இறுதி அறிக்கையை வெளியிடுவோம். சென்னையில் பெரும் மழை, பெரு வெள்ளம் ஏற்படுவது புதிதல்ல. சராசரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி பெரும்மழை பெய்துதான் வருகிறது.

கடந்த 2005–ம் ஆண்டு இதேபோல் பெரும் மழை பெய்தது. அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னையை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து அதே போல் பெரும்மழையும், பேரழிவும் ஏற்பட்டது.

ஆனால் இதை தடுப்பதற்கு அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய திட்டங்கள் என்ன? பெருமை மிக்க சென்னையில் முதல் பிரச்சினை நிர்வாக பிரச்சினை தான். மாவட்ட கலெக்டர், மாநகர நிர்வாகம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை என்று பல நிர்வாக பிரிவுகள் இருந்தும் அவைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை.

கால நிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம். தற்போது ஏற்பட்ட பேரழிவு ஒரு செயற்கை பேரழிவுதான். ஏரிகளில் நீர்மட்டத்தை முன்கூட்டியே குறைக்க வில்லை. ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படவில்லை.

கடந்த 2010–ம் ஆண்டிலேயே சென்னையில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

சென்னையில் மிகப்பெரிய கால்வாய், பக்கிங்காம் கால்வாய், 30 மீட்டர் அகலமும், 10 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த கால்வாய் ஆந்திராவின் பெத்தகஞ்சம் என்ற இடத்தில் தொடங்கி சென்னை நகர், மரக்காணம் வழியாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வரை நீள்கிறது. ஆனால் இந்த கால்வாயின் இப்போதைய நிலையை எண்ணி பாருங்கள். பள்ளிக் கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருகிறது.

பக்கிங்காம் கால்வாய் தண்ணீரை நேரடியாக கடலில் வடியும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆறு மற்றும் கால்வாய் வழித்தடங்களை மீட்டெடுக்க வேண்டும். குப்பைகள் அகற்றுவதற்கு, சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு உரிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவையெல்லாவற்றுக்குமான தீர்வுகளை நாங்கள் நிபுணர்களுடன் கலந்து இந்த அறிக்கை வாயிலாக மக்களுக்கு வழங்குகிறோம். சென்னையை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இவ்வாறு கூறினார்.

Thursday, January 7, 2016

திமுக, அதிமுக-வை மக்கள் புறக்கணிப்பார்கள்: அன்புமணி ராமதாஸ்

வரும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில், அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பங்கேற்று உரையாற்றினார்.

தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனச் சாடினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருகிற தேர்தலில், அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தது எத்தனை முறை?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களை சந்திப்பதில்லை எனக் குற்றம்சாட்டும் மு.க.ஸ்டாலின், எத்தனை முறை, முழுமையாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Wednesday, January 6, 2016

மோசடி கருத்துத்திணிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’கோயில் திருவிழாக்களின் போது கோவிலைச் சுற்றிலும் புதிது புதிதாக கடைகள் தோன்றுவதைப் போல, தேர்தல் காலத்தில் புதிது புதிதாக கருத்துக்கணிப்புக் கடைகள் முளைப்பது வழக்கமாகி விட்டது. இதைவிட ஆபத்து என்னவெனில், மக்களால் தண்டிக்கப்பட்டு ஒதுக்கப் பட்டோரின் கூலிப்படையாக அவை மாறி, திரிக்கப்பட்ட கணிப்பைக் கூறி, மக்கள் மனநிலையை மாற்றுவதற்கு முயல்வது தான்.

கருத்துக் கணிப்புகள் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்துடன் தொடர்புடையவை என்பதால் கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்ட  போதிலும் அக்கோரிக்கையை பா.ம.க. ஆதரித்ததில்லை. ஆனால், ஊடகங்களும், பாரம்பரியம் மிக்க நிறுவனங்களும் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தி வந்த நிலை மாறி, இப்போது யார் வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பை நடத்தலாம்; யார் பெருந்தொகை தருகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கலாம் என்ற மலிவான கலாச்சாரம் பரவி விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி சென்னை லயோலா கல்லூரியின் பெயரைப் பயன்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் தான் இதற்கு உதாரணம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு அபத்தமானவையாகவும், நகைப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன. முதலமைச்சர் ஆக வாய்ப்புள்ளவர் யார்? என்ற கேள்விக்கு ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒருவர் மட்டுமே முன்னிறுத்தப் படுவது வழக்கம். ஆனால், இந்தக் கணிப்பில் ஒரே கட்சியிலிருந்து இருவர் முன்னிறுத்தப்பட்டதுடன்,  அதில் சாத்தியமே இல்லாத ஒருவருக்குத் தான் அதிக செல்வாக்கு இருப்பதாக கூறியதிலிருந்தே அந்த கருத்துக்கணிப்பு யாருக்காக, யாருடைய செலவில் நடத்தப்பட்டிருக்கும் என்பது புரிந்து விட்டது.

அதன்பின், கடந்த 4&ஆம் தேதி இன்னொரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டது. முந்தைய கருத்துக்கணிப்பே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு, இதன் பின்னணியில் இருப்பவர்களை அப்பட்டமாக அடையாளம் காட்டும் அளவுக்கு அமைந்திருந்தன இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள். இந்த கருத்துக் கணிப்பு யாருக்காக யாரால் நடத்தப்பட்டது என்பது சமூக ஊடகங்களில் கேலியும் , கிண்டலுமாக அம்பலப்படுத்தப்பட்டது. இந்த இரு கணிப்புகளிலும் கருத்து கேட்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3500&க்கும் குறைவு. ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர் என்ற அளவுக்கும் குறைவானவர்களிடம் கருத்துக் கேட்பது மிகப் பெரிய மோசடி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த இரு கருத்துக் கணிப்புகளும் தமிழ்நாட்டு அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படவுள்ள கட்சியை தூக்கி நிறுத்த திட்டமிட்டு நடத்தப்பட்டவை தான். இப்படி செய்வதைவிட மோசமாக இந்திய ஜனநாயகத்தை யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது.

இதுபோன்று திட்டமிட்டு கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்கும்போது அவை தேவையா? என்ற வினா எழுவதை தவிர்க்க முடியவில்லை. கருத்து சுதந்திரம், மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பெரும்பாலானோரின் மனநிலை கருத்து கணிப்புக்கு  எதிராகவே உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி தேர்தலின் போது கருத்துக்கணிப்புகள் நடத்துவதால் ஜனநாயகத்துக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு யாராலும் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. இந்தியாவில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் அறிவியல் பூர்வமானவை அல்ல; அவை மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிப்பதில்லை; மாறாக அவை ஜனநாயகத்தை காயப்படுத்துகின்றன. அறிவியல்பூர்வமாக கருத்துக்கணிப்பு நடத்துவதன் மூலம் மக்களின் மனநிலையை ஓரளவு சரியாக கணிக்க முடியும் என்ற போதிலும், அதற்காக பெருமளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால், அத்தகைய உண்மையான கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு எந்த நிறுவனமும் தயாராக இல்லை.

மாறாக ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பை நடத்தி, அதற்காக அந்தக் கட்சியிடம் இருந்து பெருமளவில் பணம் வசூலிக்கலாம் என்ற எண்ணம் தான் இப்போது மேலோங்கி யிருக்கிறது.  இந்தியாவின் புகழ்பெற்ற தேர்தல் கருத்துக்கணிப்பாளர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். கருத்துக் கணிப்புகள் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவை.‘‘ கருத்துக்கணிப்பு நடத்தும் சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை அணுகுகின்றன.அவை முறையாக கருத்துக்கணிப்பு  நடத்தினாலும்,  அதன் முடிவுகள், கருத்துக் கேட்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக மாற்றி வெளியிடுகின்றன. இதற்காக அந்தக் கட்சியிடமிருந்து பெருமளவில் பணம் பெற்றுக் கொள்கின்றன’’ என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய துப்பறிவில் , சி&வோட்டர்ஸ் என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு முடிவுகளை எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாற்றித் தர தயாராக இருப்பதாக ஒப்புக் கொண்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா டுடே இதழ் ரத்து செய்தது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி  வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் திரிக்கப்பட்டவை என்பதை தேர்தல் முடிவு அம்பலப்படுத்தியது.

புகழ்பெற்ற கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளே இந்த லட்சனத்தில் இருக்கும் போது, தமிழகத்தில் விரக்தியின் விளிம்பில் இருக்கும் சில கட்சிகள் கூலிப்படைகளை அமைத்து நடத்தும் கருத்துக்கணிப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். 

இத்தகைய கருத்து திணிப்புகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார் கள். தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஆனால், அதை குலைக்கும் வகையில் தான் திட்டமிட்டு கருத்துத் திணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இவை ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை என்பதால், அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்புகளைத் தவிர மற்ற கருத்துத் திணிப்புகளை சட்டப்படியாக தடை செய்ய மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

Tuesday, January 5, 2016

பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யகோரி 11-.ல் பா.ம.க. போராட்டம்!

 

’’உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தரும் தேயிலையை உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதற்கு உரிய விலை கிடைக்காததால் உற்சாகமிழந்து சோர்ந்து கிடக்கின்றனர். அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசோ இன்னும் உறக்கத்தை களைய மறுக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடியில் சுமார் 65,000 சிறு மற்றும் குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த 16 ஆண்டுகளாகவே தேயிலை சாகுபடி கடுமையான சோதனைகளை எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச சூழலைக் காரணம் காட்டி உள்ளூர் சந்தையில் பசுந்தேயிலையின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும் வகையில் சில சக்திகள் பார்த்துக் கொள்கின்றன. ஒரு கிலோ பசுந்தேயிலையை உற்பத்தி செய்ய ரூ.17.35 செலவு ஆவதாக பெங்களூரில் உள்ள இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் கணக்கீடு செய்திருக்கிறது. வேளாண்மை விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை செய்வதற்கான முறையை எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்திருக்கிறது.  

ஒரு வேளாண் விளைபொருளை சாகுபடி செய்வதற்காக ஆகும் செலவுடன் விவசாயிகளின் லாபமாக 50% சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரையாகும். அதன்படி பார்த்தால் சாகுபடி செலவு 17.35 ரூபாயுடன்  லாபமாக ரூ. 08.68 சேர்த்து பசுந்தேயிலைக்கான கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.26.03 நிர்ணயிக்க வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலை.

ஆனால், தேயிலை விலை முறையாக நிர்ணயிக்கப்படாததால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக தொடரும் இந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த12.10.2012 அன்று அளித்த தீர்ப்பில்,‘‘பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிறு& குறு தேயிலை உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் பசுந்தேயிலைக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். தேயிலை கொள்முதல் விலையை நிர்ணயிக்க இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் நடத்திய ஆய்வின் முடிவுகளை எடுத்து கொள்ளலாம் அல்லது புதிய ஆய்வை நடத்திக் கொள்ளலாம்’’ என ஆணை

யிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை தமிழக ஆட்சியாளர்கள் காற்றில் பறக்கவிட்டனர். பசுந்தேயிலைக்கு அரசு அல்லது தேயிலை வாரியம் தான் விலை நிர்ணயிக்க வேண்டும். ஆனால்,  இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற வகையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  ஒரு பொருளுக்கு சாகுபடி செலவு அடிப்படையில் தான் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், உள்ளூர் சந்தையில் தேயிலைத் தூள் என்ன விலைக்கு ஏலம் விடப்படுகிறதோ, அதில் ஐந்தில் ஒரு பங்கு தான் பசுந்தேயிலைக்கான விலை என்று  நிர்ணயிக் கப்படுகிறது. அந்த வகையில் தேயிலைத் தூள் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுவதால் பசுந்தேயிலையின் விலையாக ரூ.12 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோ பசுந்தேயிலையை சாகுபடி செய்ய ரூ.17.35 செலவாகும் நிலையில், அதை ரூ.12&க்கு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது பெரும் துரோகமாகும்.

தேயிலை வாரியத்தில் சிறு & குறு தேயிலை விவசாயிகளை உறுப்பினர்களாக நியமித்திருந்தால், அவர்கள் தேயிலை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டிருப்பார்கள். ஆனால்,  தேயிலை நிறுவனங்களுக்கு ஆதரவானவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமிப்பதால் அவர்கள் விவசாயிகளின் நலனை விட தேயிலை நிறுவனங்களின் நலனுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். அதன்பயனாகத் தான் பசுந்தேயிலை அடிமாட்டு விலைக்கு வாங்கப்படுகிறது. தேயிலை விவசாயி என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்காக ஒரு சிறு துரும்பைக் கூட ஜெயலலிதா தலைமையிலான அரசு அசைக்கவில்லை. இந்நிலை நீடித்தால் தேயிலை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

எனவே, இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பசுந்தேயிலைக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 11&ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நீலகிரியில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை நான் தலைமையேற்று நடத்த உள்ளேன். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் இப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.’’

Monday, January 4, 2016

ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா?: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யும், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட ஓர் உரையை ‘வாட்ஸ்-அப்’பில் படித்தார். உண்மையை குழிதோண்டி புதைத்து விட்டு, அரசியல் லாபம் தேடும் ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த உரை இப்போது செல்பேசி மற்றும் தரைவழி தொலைபேசிகள் மூலம் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உரை தொடக்கத்தில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தொலைபேசி அழைப்பு மணி திடீரென ஒலிக்கிறது. எவரேனும் முக்கியமான நண்பர்கள் அழைக்கிறார்களோ என்ற எண்ணத்தில் எடுத்தால், ‘‘ வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்’’ எனத் தொடங்கி ஜெயலலிதாவின் முழு உரையும் ஒலிக்கிறது. 

தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி தான் என்ற போதிலும் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசி பயன்படுத்துவதால் கிட்டத்தட்ட 10 கோடி செல்பேசி இணைப்புகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர 2 கோடிக்கும் அதிகமான தரை வழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இந்த அனைத்து தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கும் குறைந்தது 5 முறையாவது ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை சென்றடைய வேண்டும் என்று அரசுத் தரப்பில் ஆணையிடப்பட்டிருப்பதால் அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ அழைத்து பொதுமக்களை எரிச்சலூட்டுகிறார்.

ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தான் மேற்கொண்டு வருகிறது. 

நோய்டாவில் உள்ள அழைப்பு மையங்கள் மூலம் மேற்கொள்ளப் படும் இந்த பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணியாகும். ஆனால், ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரையில் என்ன திட்டம் அல்லது பயனுள்ள தகவல் இருப்பதாக எண்ணி அதை மக்களிடம் கொண்டு செல்ல கோடிக்கணக்கில் வரிப்பணத்தை அரசு செலவிடுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

மழை - வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்த போது முதலமைச்சரோ, அமைச்சர்களோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் முதலமைச்சர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு,‘‘ உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்’’ என்று உருக்கமாக பேசி மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயல்கிறார். உண்மையில் மக்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் ஜெயலலிதா சுமக்கவில்லை; மாறாக ஜெயலலிதா அரசின் பாவ மூட்டைகளைத் தான் ஒரு பாவமும் செய்யாத தமிழக மக்கள் தங்களின் தலை மீது சுமந்து கொண்டிருக்கிறார்கள். ‘‘எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம் தான்’’ என்பது முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் அடுத்த வசனம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஊழல் செய்து வளைத்து போட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த நம்பிக்கையில் தனக்கென தனி வாழ்க்கை எதுவுமில்லை என்று ஏமாற்று வசனம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை.

இன்றைய சூழலில் ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை என்பது முன்கூட்டியே தொடங்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இதற்காக செலவிடப்படும் பணத்துடன் இன்னொரு மடங்கு சேர்த்தால் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை அமைத்து ஆண்டுக்கு 100 முதல் 150 மருத்துவர்களை உருவாக்கலாம். ஆனால், அதை செய்வதை விடுத்து தனது சொந்த லாபத்திற்காக, செய்யாத தியாகத்தை விளம்பரப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் ஜெயலலிதா தான் தமிழக மக்களின் முதன்மை எதிரி ஆவார். வரும் தேர்தலில் அவரை வீழ்த்துவது தான் தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

அரசின் சொத்துக்களையெல்லாம் தமது சொந்த சொத்துக்களாக ஜெயலலிதா நினைத்துக் கொள்வது  இது முதல் முறையல்ல. நேற்று கூட, அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை  கட்சி அலுவலகத்திற்கோ அல்லது தமது இல்லத்திற்கோ அழைக்காமல் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து தான் ஆசி வழங்கியிருக்கிறார். இதற்கு முன்பு கூட அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் தான் அவர் நடத்தினார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் பெரும்பாலானவற்றை அரசு செலவில்  செய்ததுடன், புகைப்படம் எடுப்பது, பொதுக்குழு குறித்த  செய்திகளை வெளியிடுவது ஆகியவற்றுக்காக தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகளை பயன்படுத்திக் கொண்ட புதிய பொதுவுடைமைவாதி தான் ஜெயலலிதா. 

அ.தி.மு.க.வின் அருவறுக்கத்தக்க இந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு உண்மைகளை மூடி மறைத்தாலும், அவை தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் காலம் வந்து விட்டது. இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதாவை வரும் தேர்தலில் வீழ்த்தி தமிழகத்தை மக்கள் மீட்டெடுப்பது உறுதி!’’

வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம்: ஜி.கே.மணி

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.தமிழகத்தில் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் குறித்த கையேட்டை சென்னையில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டனர். அதில் அன்புமணி ராமதாஸ் பற்றிய திறமை, சாதனை, தகுதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.பின்னர் ஜிகே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பற்றிய சிறப்பு கையேடு, சென்னை உட்பட 32 மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த கையேட்டில் அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்த போது அவர் ஆற்றிய சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பாமக முதல்வர் வேட்பாளராக கடந்த பிப்ரவரி 5ம் தேதி அறிவிக்கப்பட்டார். அன்று முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் அவரை பற்றி முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காக இந்த சிறப்பு கையேடு வெளியிடப்படுகிறது.அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும். இது அனைவர் கையில் கிடைக்கும் போது மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்படும். அதேநேரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்படும். வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு பாமக சார்பில் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம். கொடுக்கும் கட்சிகள் மீதும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

 

Sunday, January 3, 2016

பாமக சாதிக்கட்சி அல்ல : ராமதாஸ் பேச்சு

 

 விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேடில் பாமக கிழக்கு மண்டல அரசியல் மாநாடு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

 கட்சியின் துணைப் பொதுச் செயலர் தங்கஜோதி தலைமை வகித்தார்.  மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:  ‘’தமிழக மக்களின் இன, மொழி, உரிமைகளுக்காக தொடர்ந்து 26 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று போராட்டம் நடத்துபவன் நான்.  நாங்கள் பலமுறை பதில் தந்துவிட்ட நிலையிலும், பாமகவை சாதிக் கட்சி என்றழைக்கின்றனர். மேற்கண்ட போராட்டங்கள் ஒரு சாதிக்காக நடத்தப்பட்டதா?

 தமிழகத்தில் உள்ள 49 கட்சிகள் என்ன செய்துள்ளன? நாங்கள் தமிழகத்தில் உள்ள 370 சாதிக்களுக்குமான கட்சி. அனைவருக்கும் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகிறோம். இனி சாதிக் கட்சி என்று அழைக்க வேண்டாம்.
 1980-இல் சமூக அமைப்பைத் தொடங்கினேன். அதிலும், மக்கள் விகிதாச்சாரப்படி, அனைத்துத் தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம்.

 தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18-இல் இருந்து 22 சதவீதமும், வன்னியர்களுக்கு 20 சதவீதம் என்றும் கோரிக்கை வைத்தோம். போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்தனர். அதன் பயனாக 109 சாதிகள் இடஒதுக்கீட்டை பெற்றன.

 2006-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, உயர் கல்வியில் இதர பிற்பட்டோ ருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடுக்காக, நான் மட்டும் போராடி வென்றேன். கருணாநிதி உள்ளிட்ட எந்தத் தலைவர்களும் அப்போது உதவி செய்யவில்லை.  எனவே, சாதிக் கட்சி என்ற பொய் குற்றச்சாட்டுகள் எடுபடாது. சமூக நீதி, சமத்துவத்துக்காக பாடுபடும் கட்சியாக பாமக உள்ளது.

 நாட்டிலேயே நிழல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த கட்சியாக பாமக உள்ளது. முதல்வருக்கான தகுதியுள்ளவர் அன்புமணி. நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் 100 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும். விருப்பமுள்ளவர்கள் கூட்டணிக்கு வரலாம்’’ என்றார் அவர்.

பெட்ரோல், டீசல் மீது ரூ.1.12 லட்சம் கோடி கூடுதல் வரியா? உடனே திரும்பப் பெறுக: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
’’பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 2.00 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. பொது மக்களுக்கு விலைக் குறைப்பு என்ற வடிவில் சென்றடைய வேண்டிய ரூ.17,200 கோடியை   கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானதாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டது. இரக்கமே இல்லாமல் ஒரு மாதத்திற்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்ட வரலாறு உண்டு. இது பற்றி கேட்ட போதெல்லாம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் கூறிய ஒரே பதில்,‘‘ எரிபொருள் விலை உயர்வுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டிலும் உயரும், உலக சந்தையில் குறைந்தால் உள்நாட்டிலும் குறையும் என்பது தான்’’. அவர்கள் கூறியவாறே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. ஆனால், உலக சந்தையில் விலை குறைந்த போது உள்நாட்டில் குறையவில்லை. எரிபொருள் விலை நிர்ணயத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறிய மத்திய அரசு, இப்போது கலால் வரி உயர்வின் மூலம் எரிபொருள் விலையை திரிப்பது ஏன்?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பின்னர் இதுவரை 7 முறை எரிபொருள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இடையில் சில முறை கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது  வரியைக் குறைத்து மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு     முன்வரவில்லை. மாறாக அப்போது விலையை உயர்த்தி மக்களின் சுமையை மத்திய அரசு அதிகரித்தது.  பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த ஓராண்டில் 7 கட்டங்களாக 7.73 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 7.83 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,12,832 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அவ்வளவும் அப்பாவி மக்களுக்கு சென்றடைய வேண்டியதாகும்.

உலக சந்தையில் கடந்த திசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 32.90 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு குறைந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 30.50 ரூபாய்க்கும், டீசல் 22.00 ரூபாய்க்கும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 59.77 ரூபாய்க்கும், டீசல் 46.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமோ, அதைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதன் அடக்க விலையை விட அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் உற்பத்திச் செலவு என்பது 20 ரூபாய்க்கும் குறைவு தான். அத்துடன் மத்திய, மாநில அரசு வரிகள், எண்ணெய் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் லாபம் சேர்த்து தான் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.59.77 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு  வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட விற்பனை விலை 3 மடங்கு அதிகமாக இருப்பது மக்கள் மீது தொடுக்கப்படும் மிகப் பெரிய பொருளாதாரத் தாக்குதல் ஆகும். வருவாயை பெருக்குவதற்கான வரி ஆதாரங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அதையெல்லாம் செய்யாத மத்திய அரசு, அப்பாவி மக்களை பணம் காய்க்கும் மரங்களாக கருதி பெட்ரோல், டீசல் மீது வரிகளை திணிப்பது நியாயமற்றதாகும்.

மக்களின் உணர்வுகளை மதித்தும், கச்சா எண்ணெய் விலை உயர்வின் பயன்களை மக்களுக்கு வழங்கும் வகையிலும் கடந்த ஓராண்டில் மட்டும் விதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 12,832 கோடி ரூபாய் கூடுதல் கலால் வரியை உடனடியாக மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: